உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில்  மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல்  வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும்.

உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை.

ஆபத்தான சுற்று சூழல்  வெப்பநிலை

  • 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும்.
  • 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.
  • -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும்.

நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை  -7°C ஆக இருக்கும்.

குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள்

1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses)

உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது:

  • இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும்.
  • நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
  • மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 

3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses)

  • பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும்.
  • ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. 

உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக

  • முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார்.
  • பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம்.

சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள்

பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும்.

  1. முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள்.
  2. குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும்.
  3. மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும்.
  4. சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும்.
  5. தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும்.
  6. நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன.
  7. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
  8.  சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள்
  • வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.
  • நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும்.
  • சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death)

உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு:

1. அனுசேபச்சிதைவு  (Metabolic Breakdown)

உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன.

2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம்

குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன:

  • இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை.
  • இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது.

3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression)

ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும்
  •  கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும்.
  • ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும்.
  • ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும்.
  • உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும்.
  • போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள்.

நன்றி

ஓர் நொடியில் கருகிய மலர்கள்

நேற்று முன்தினம் நான் தற்பொழுது கடமையாற்றும் நாட்டில் ஓர் பாரிய வாகன விபத்து, பாடசாலை மாணவர்களை அதுவும் புதுவருடத்தின், முதல் பாடசாலை நாள் அன்று மாணவர்களை ஏற்றி சென்ற வான் ஓன்று மற்றைய வாகனங்களை முந்தி செல்லும் பொழுது எதிரே வந்த பாரத்துடன் மெதுவாக வந்த பாரிய டிப்பர் ஒன்றுடன் மோதியது. ஸ்தலத்திலேயே 12 மாணவர்கள் பலியாகினர் மேலும் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் பலியாகினர்.

இவ்வாறே கடந்த வாரமும் கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட பஸ் மற்றும் கார் விபத்தில் 4 பேர் பலியாகினர். இப்பதிவில் அதிக பாரத்துடன் வரும் வாகனங்களுடன் சிறிய வாகனங்கள் மோதும் பொழுது ஏன் அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றது என்பது பற்றி பௌதீகவியல் ரீதியான விளக்கம் தரப்படுகின்றது 

குறைந்த வேகத்தில் சென்றாலும், அதிக எடையுடன் (Loaded) வரும் லொரி , பஸ், டிப்பர் போன்ற வாகனங்களுடன்  மோதும்போது ஏற்படும் விபத்து மிகவும் ஆபத்தானது.இதன் பின்னணியில் உள்ள பௌதீகவியல் காரணங்கள் இதோ

1. பௌதீகவியல் விதிகளின்படி, ஒரு பொருளின் உந்தம் அதன் நிறை (Mass) மற்றும் திசைவேகத்தை (Velocity) பொறுத்தது.(உந்தம் = வாகனத்தின் பாரம் X வேகம்)

    ஒரு சாதாரண கார் 1.5 டன் எடை கொண்டது, ஆனால் லோடு ஏற்றிய டிப்பர் 30 முதல் 40 டன் வரை எடை கொண்டிருக்கலாம். டிப்பர் மெதுவாக (உதாரணத்திற்கு 20 கி.மீ வேகத்தில்) வந்தாலும், அதன் அபாரமான எடையால் அதன் உந்தம் மிக அதிகமாக இருக்கும். இந்த உந்தம் மோதலின் போது கார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    2. இயக்க ஆற்றல் (Kinetic Energy ) 

    ஒரு பொருள் இயக்கத்தில் இருக்கும்போது கொண்டிருக்கும் ஆற்றல் அதன் நிறையைப் பொறுத்து அதிகரிக்கும். பாரம் ஏற்றிய டிப்பரில் உள்ள அதிகப்படியான நிறை, அந்த டிப்பர்க்கு மிகப்பெரிய இயக்க ஆற்றலைத் தருகிறது.

    நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, ஒரு லாரியும் டிப்பரும் மோதும்போது, கார் டிப்பர் மீது எவ்வளவு விசையை (Force) செலுத்துகிறதோ, அதே அளவு விசையை டிப்பரும் கார் மீது செலுத்தும். இங்கு விசை சமமாக இருந்தாலும், அந்த விசையைத் தாங்கும் திறன் இரண்டு வாகனங்களுக்கும் வெவ்வேறாக இருக்கும். டிப்பர் வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், விசையினை தாங்கும் திறன் உடையதாக இருக்கின்றது. ஆனால் அதே விசை முழுவதும் சிறிய கார் மீது மாற்றப்படும் பொழுது . கார் அல்லது வான்  விசையினை தாங்க முடியாமல் எளிதில் நசுங்கிவிடும்.

    3. நியூட்டனின் இரண்டாம் விதி (முடுக்கம் மற்றும் நிறை) 

    ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கற்பலனுக்கு சமம். இதனை மாற்றியமைத்தால்: முடுக்கம் (Acceleration/Deceleration) = விசை / நிறை  

    குறைந்த நிறை = அதிக முடுக்கம்: மோதலின் போது இரண்டு வாகனங்கள் மீதும் சமமான விசை செயல்பட்டாலும், காரின் எடை (Mass) டிப்பரினை விட மிகக் குறைவு. எனவே, கார் மிக அதிக முடுக்கத்துடன் (திடீர் வேகம் குறைதல் அல்லது பின்னோக்கித் தள்ளப்படுதல்) பாதிக்கப்படும்.

    அதிக நிறை = குறைந்த முடுக்கம்: டிப்பர் அதிக எடையுடன் இருப்பதால், அதன் இயக்க நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது (குறைந்த முடுக்கம்).

    பாதிப்பு: காரில் இருப்பவர்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மிகப்பெரிய வேக மாற்றத்தை (High Deceleration) சந்திக்கிறார்கள். இந்தத் திடீர் வேகம் குறைதல் மனித உடலின் உள் உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும்

    4. நிலைமம் (Inertia) 

    நியூட்டனின் முதல் விதிப்படி, ஒரு பொருள் அதன் இயக்க நிலையிலேயே இருக்க முயலும். அதிக எடை கொண்ட டிப்பரினை திடீரென நிறுத்த முடியாது. பிரேக் போட்டாலும், அதன் அதிகப்படியான ‘நிலைமம்’ காரணமாக அது காரைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயலும். இதனால் காரில் இருப்பவர்கள் மிகக் கடுமையான அதிர்வையும் (Jerk) பாதிப்பையும் சந்திக்கிறார்கள். 

    5. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு (Structural Mismatch) 

    • உயர வித்தியாசம் (Underride): டிப்பரின் அடிப்பகுதி உயரமாக இருப்பதால், மோதலின் போது கார் டிப்பரின்   அடியில் சிக்கிக்கொள்ளும் (Underride accident). காரின் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக்குகள் (Airbags) மற்றும் கிரம்பிள் பகுதிகள் (Crumple Zones) இதனால் வேலை செய்யாமல் போகலாம்.
    • திடமான சட்டகம்: லாரிகள் இரும்பாலான வலிமையான சட்டகங்களைக் கொண்டவை. மோதலின் போது லாரி சேதமடையாது, ஆனால் அந்த முழு சக்தியும் காரை உருக்குலைத்துவிடும். 

    சுருக்கமான ஒப்பீடு: 

    அம்சம் லோடு ஏற்றிய டிப்பர்சாதாரண கார்
    நிறை (Mass)மிக அதிகம்குறைவு
    விசை (Force)சமம் (டிப்பரின் மீது கார் செலுத்துவது)சமம் (காரின் மீது டிப்பர் செலுத்துவது)
    வேக மாற்றம் (Deceleration)மிகக் குறைவுமிக அதிகம்
    பாதிப்புகுறைவான சேதம்கடுமையான சேதம்/உயிரிழப்பு

    வேகம் குறைவாக இருந்தாலும், டிப்பரின்  அதிகப்படியான எடை” (Mass) தான் இங்கு மிகப்பெரிய ஆபத்துக் காரணி. ஒரு யானை மெதுவாக நடந்து வந்து உங்கள் மீது மோதினால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்றதுதான் குறைந்த வேகத்தில் வரும் டிப்பரின் மோதலும்.

     எனவே, வேகம் குறைவாக இருந்தாலும் டிப்பரின்  அதிகப்படியான நிறை (Mass) காரின் மீது செயல்படும் அதே சமமான விசையை மிக ஆபத்தான திடீர் வேக மாற்றமாக (Acceleration/Deceleration) மாற்றிவிடுகிறது.

    நன்றி

    குடிநீரில் மலக்கழிவு !!

    அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன்  என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli  பக்டீரியா இருந்தமையே  ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும்  ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும்

    நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது.

    தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும்

    யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. 

    E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது.

    நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு

    வகைநோய் முக்கியத்துவம்
    ETECநீர் வயிற்றுப்போக்குநீரிழப்பு மரணம்
    EPECகுழந்தைகளில் வயிற்றுப்போக்குகுழந்தை மரணம்
    EHEC (O157:H7)இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS)திடீர் மரணம்
    EAECநீடித்த வயிற்றுப்போக்குஊட்டச்சத்து குறைபாடு

    மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினேரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம்.

    E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின்  குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது.

    E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும்.

    நன்றி

    பிரசவத்தின் பொழுது மரணம் ஏன்?

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரசவத்தின் பொழுது கர்ப்பிணி தாயார் ஒருவர் திடீர் என மரணத்தினை தழுவி இருந்தார். இதன் காரணமாக பல சர்ச்சைகள் உருவாகி இருந்தன. இந்நிலையில் இவ்வாறான மரணங்களுக்கு காரணமான “நுரையீரலில்  இரத்தம் கட்டிபடல்” நோய் பற்றி இந்த பதிவு விரிவாக விளக்குகின்றது. இரத்தக்கட்டிஅடைப்பு (Thromboembolism) என்பது இரத்தக் குழாய்களின்  உட்புறத்தில் இரத்தம் ஜெல் போன்ற வடிவத்தில் உறைந்து, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் ஒரு தீவிர மருத்துவ நிலையாகும். 

    1. இரத்தக் கட்டி அடைப்பு எவ்வாறு உருவாகிறது?

    • த்ரோம்போசிஸ் (Thrombosis): இரத்தக் குழாயின் உட்பகுதியிலேயே இரத்த உறைவு உருவாவதாகும்.
    • எம்பாலிசம் (Embolism): ஓரிடத்தில் உருவான இரத்தக் கட்டி தளர்ந்து, இரத்த ஓட்டம் வழியாகப் பயணித்து உடலின் மற்றொரு பகுதியில் உள்ள குறுகிய இரத்த நாளத்தை அடைப்பதாகும்.
    உடற் கூராய்வு பரிசோதனை ஒன்றின் பொழுது அகற்றப்பட்ட இரத்த கட்டி ஒன்று

    2. முக்கிய இடங்கள் மற்றும் பாதிப்புகள்

    இரத்தக் கட்டி எங்கு அடைப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து பாதிப்புகள் மாறுபடும்

    • நுரையீரல் (Pulmonary Embolism): கால்களில் இருந்து நகரும் கட்டிகள் நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
    • மூளை (Stroke): மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.
    • இதயம் (Heart Attack): இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு உண்டாகிறது.
    • கால்கள் (DVT): கால்களின் ஆழமான நரம்புகளில் ரத்தம் உறைவதால் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது

    3. கர்ப்பிணிகளில் இரத்த கட்டி உருவாக்குவதற்கான காரணங்கள்?

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களே இரத்தக் கட்டி (Blood Clot) உருவாவதற்கான முக்கிய காரணங்களாகும். இது சாதாரண பெண்களை விட கர்ப்பிணிகளுக்கு 5 மடங்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

    • இரத்தம் உறைதல் திறன் அதிகரிப்பு (Hypercoagulability): பிரசவத்தின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க, இயற்கையாகவே கர்ப்பிணிகளின் உடலில் இரத்தத்தை உறைய வைக்கும் புரதங்கள் (Clotting factors) அதிகரிக்கின்றன. இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்றாலும், தேவையற்ற நேரங்களில் இரத்த நாளங்களுக்குள் கட்டிகள் உருவாக இது வழிவகுக்கிறது.
    • இரத்த ஓட்டம் மெதுவடைதல் (Venous Stasis): வளரும் கருப்பை (Uterus), இடுப்புப் பகுதியில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதால், கால்களில் இருந்து இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் மெதுவாகிறது. இரத்தம் தேங்கி நிற்பதால் கட்டிகள் எளிதில் உருவாகின்றன.
    • இரத்த நாளக் காயங்கள் (Endothelial Injury): பிரசவத்தின் போது (சாதாரணப் பிரசவம் அல்லது சிசேரியன்) இடுப்புப் பகுதி மற்றும் கருப்பைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் சிறிய காயங்கள் இரத்தக் கட்டிகள் உருவாகக் காரணமாகின்றன.
    • அசையாமை (Immobility): நீண்ட கால படுக்கை ஓய்வு (Bed rest), அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடமாட்டம் குறைதல் அல்லது நீண்ட தூரப் பயணங்கள் இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆபத்தை அதிகரிக்கின்றன.
    • பிற காரணிகள்:
      • 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பம்.
      • அதிக உடல் எடை (Obesity).
      • மரபணு ரீதியான இரத்தம் உறைதல் குறைபாடுகள் (Thrombophilia).
      • இரட்டையர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சுமப்பது. 

    இந்த காரணங்களால் கால்களில் உருவாகும் இரத்தக் கட்டிகள் (DVT), பிரிந்து நுரையீரலுக்குச் செல்லும்போது உயிருக்கு ஆபத்தான “நுரையீரல் இரத்தக்கட்டிஅடைப்பு ” ஏற்படுகிறது. 

    4. முக்கிய அறிகுறிகள்:

    இந்த நிலையின் அறிகுறிகள் அடைப்பின் அளவைப் பொறுத்து மாறுபடும்: 

    • மூச்சுத் திணறல்: திடீரென ஏற்படும் மூச்சு விடுவதில் சிரமம்.
    • மார்பு வலி: ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும்போது அல்லது இருமும்போது கூர்மையான வலி ஏற்படுதல்.
    • இருமல்: சில நேரங்களில் இருமலில் இரத்தம் வெளிப்படுதல்.
    • இதயத் துடிப்பு: இதயம் மிக வேகமாக அல்லது சீரற்றுத் துடித்தல்.
    • மயக்கம்: திடீர் இரத்த அழுத்தக் குறைவால் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படுதல்.
    • கால் வீக்கம்: பொதுவாக காலில் உள்ள நரம்புகளில் (DVT) உருவான இரத்தக் கட்டி நுரையீரலுக்குச் செல்வதால், காலில் வலி அல்லது வீக்கம் காணப்படலாம்.

    5. சட்ட மருத்துவ முக்கியத்துவம் (Medico-legal Significance)

    கர்ப்பிணி மரணங்களில் நுரையீரல் இரத்தக்கட்டிஅடைப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இது பெரும்பாலும் சட்ட மருத்துவ உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது

    • திடீர் மரணம்: ஆரோக்கியமாக இருந்த ஒரு கர்ப்பிணி அல்லது பிரசவித்த பெண் திடீரென மரணமடையும் போது, அது ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என சந்தேகிக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு (Autopsy) உத்தரவிடப்படலாம்.
    • மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிதல்: மரணத்திற்கான காரணம் அம்னியோடிக் திரவ அடைப்பா (Amniotic Fluid Embolism) அல்லது இரத்தக் கட்டி அடைப்பா என்பதை உறுதி செய்ய முறையான திசுவியல் (Histopathology) ஆய்வுகள் அவசியம். 

    6. நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு  ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சடுதியான மரணம் ஏற்படுமா?

    நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு (Pulmonary Embolism) ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சடுதியான மரணம் ஏற்படுவதில்லை. இருப்பினும், இது ஒரு மிக ஆபத்தான மருத்துவ நிலை என்பதால் உடனடி சிகிச்சை அவசியமாகும். இதன் பாதிப்பு மற்றும் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறித்த முக்கியத் தகவல்கள்:

    • சடுதியான மரணம்: நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 25% பேருக்கு மட்டுமே முதல் அறிகுறியே சடுதியான மரணமாக இருக்கும்.
    • சிகிச்சையின் முக்கியத்துவம்: சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் உயிரிழப்பு விகிதம் 30% வரை உயர்கிறது. ஆனால், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த ஆபத்து 2% முதல் 8% வரை பெருமளவு குறைகிறது.
    • அடைப்பின் அளவு: இரத்தக் கட்டி மிகச் சிறியதாக இருந்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் மருந்துகள் மூலம் குணப்படுத்தப்படலாம். மாறாக, ‘ பாரிய நுரையீரல் இரத்தக் கட்டி அடைப்பு (Massive PE)’ எனப்படும் பெரிய அளவிலான அடைப்பு ஏற்படும்போது மட்டுமே இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு திடீரென நின்று மரணம் நிகழ வாய்ப்புள்ளது.
    • தடுக்கும் காலம்: பெரும்பாலான உயிரிழப்புகள் அறிகுறிகள் தோன்றிய முதல் சில மணிநேரங்களிலேயே நிகழ்கின்றன.

    7. எவ்வாறு திடீர் மரணம் நிகழுகின்றது?

    நுரையீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய தமனி (Main Pulmonary Artery) இரண்டாகப் பிரியும் இடத்தில் (Bifurcation), ஒரு பெரிய இரத்தக் கட்டி குறுக்காக மாட்டிக்கொள்வதையே ‘சேணத் த்ரோம்போ எம்பாலிசம்’ (Saddle thrombo embolism) என்கிறோம். இது ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ தடுக்கக்கூடும். இது ஒரு மருத்துவ அவசரநிலை (Medical Emergency). இது இதயத்தின் வலது பக்கம் அதிக அழுத்தத்தை (Right Heart Strain) ஏற்படுத்தி, திடீர் இதய செயலிழப்பு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். எவ்விதமான அறிகுறிகளும் இல்லாமல் சடுதியாக மரணம் நிகழும்.

    8. எவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவ கவனக்குறைவு (Medical Negligence) எனக்கொள்ளப்படலாம்?

    சட்ட ரீதியாக, ஒரு நோயாளி அல்லது அவரது குடும்பத்தினர் பின்வரும் காரணங்களுக்காக மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளது:

    • அறிகுறிகளை அலட்சியப்படுத்துதல்: மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி போன்ற இரத்தக் கட்டி அடைப்பு க்கான அறிகுறிகளை ‘சாதாரண கர்ப்பகால அசதி’ என்று தவறாகக் கருதி பரிசோதிக்கத் தவறுதல்.
    • தடுப்பு மருந்து வழங்காமை: அதிக ஆபத்துள்ள நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு (எ.கா: உடல் பருமன், முந்தைய ரத்த உறைவு பாதிப்பு) இரத்தம் கட்டிபடுதலை தடுக்கும் மருந்துகளை (Prophylaxis) வழங்கத் தவறுதல்.
    • தவறான நோயறிதல்: தகுந்த பரிசோதனைகளை (CTPA அல்லது V/Q scan) மேற்கொள்ளாமல் நோயைக் கண்டறியத் தாமதிப்பது ‘சிகிச்சை தரக் குறைபாடு’ (Standard of Care breach) எனக் கருதப்படலாம். 
    • மருத்துவக் கவனக்குறைவு நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

    9. இந்த நோய் நிலைமையினை முற்கூட்டி அறிந்து தடுக்கும் வசதி உண்டா?

    ஆசிய நாட்டு பெண்களிடம் இந்த நோய் மிக அரிதாகவே இருக்கும் எனினும் கர்ப்பகால முதல் கிளினிக் வருகையின் பொழுது வைத்தியர்கள் குறித்த பெண்ணிற்கு கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின் பொழுது அல்லது பிரசவத்தின் பின்னர் நுரையீரல் இரத்தம் கட்டி படும் சாத்தியம் உண்டா என ஆராய்வார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில் உரிய தடுப்பு மருந்துகளை வழங்குவார்கள். எனினும் சில பெண்களிடம் பிறப்பில் இருந்தே சில குறைபாடுகள் (Antithrombin III, Protein C , Protein S பற்றாக்குறை …) காரணமாக இந்த நுரையீரல் இரத்தம் கட்டி படும் நோய் உருவாகும். வழமையாக இவ்வாறன குறைபாடுகளை ஆராய்ந்து பரிசோதிப்பது நடைமுறையில் இல்லை.

    நன்றி

    பில்டர் சிகரெட் பாதுகாப்பானதா?

    எம்மில் பலரும் தப்பாக விளங்கி வைத்திருக்கும் விடயம் சுருட்டு மற்றும் பீடி போன்றவற்றினை விட சிகரெட் பாதுகாப்பானது ஏனெனில் சிகரெட்டில் பில்டர் எனப்படும் வடிக்கும் பஞ்சு உள்ளது என்பதே ஆகும். விஞ்ஞா ரீதியாக உண்மையில் அவ்வாறல்ல. இலங்கையில் சிகரெட் பில்டர்கள் (Cigarette Filters) தொடர்பாக மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) 2026 ஆம் ஆண்டு எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று தான். இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட சர்வதேச முடிவுகளுக்கு இணங்க, ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன

    இதற்கான முக்கிய காரணம் இலங்கையில் தினசரி சுமார் 60 லட்சம் முதல் 1 கோடி சிகரெட் பில்டர்கள் சூழலில் வீசப்படுவதாக NATA தெரிவித்துள்ளது. இவை உக்கி அழிவதற்கு நீண்ட காலம் எடுப்பதாலும், நீர் நிலைகளை மாசுபடுத்துவதாலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அவை உலகளவில் அதிகம் காணப்படும் குப்பைகளில் ஒன்றாகும். சிகரெட் துண்டுகள் உலகளாவிய கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் குப்பைகளில் முதலிடத்தில் உள்ளன.

    சிகரெட் பில்டர்கள் ‘செல்லுலோஸ் அசிடேட்’ (Cellulose Acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை காகிதம் அல்லது பருத்தி போலத் தோன்றினாலும், அவை பிளாஸ்டிக் என்பதால் இயற்கையில் எளிதில் சிதைவதில்லை. சிகரெட் பில்டர்கள் உக்கி அழிவதற்கு  எடுத்துக்கொள்ளும் காலம் சூழலைப் பொறுத்து மாறுபடும். இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி, இதன் சிதைவு காலம் குறித்த விவரங்கள் இதோ:

    • சாதாரண சூழலில்: ஒரு சிகரெட் பில்டர் முழுமையாக மட்குவதற்கு பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகிறது.
    • சூழல் மாறுபாடு: மண்ணின் ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் பாக்டீரியாக்களின் அளவைப் பொறுத்து, சில இடங்களில் இது 18 மாதங்களில் சிதையத் தொடங்கலாம்; ஆனால் கடுமையான சூழலில் இது 30 ஆண்டுகள் வரை கூட அழியாமல் இருக்கும்.

    பில்டர்கள் உக்கி அழிவடையும் பொழுது  அவை முழுமையாக மறைந்து போவதில்லை. மாறாக, அவை பல்லாயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் இழைகளாக (Microfibers), நுண்ணிய பிளாஸ்டிக் (Microplastics) ஆக  உடைந்து மண் மற்றும் நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

    சிகரெட் பில்டர்களின் அமைப்பு மற்றும் வகைகள்

    1. செல்லுலோஸ் அசிடேட் பில்டர்கள்: 95% க்கும் அதிகமான வணிக ரீதியான சிகரெட் பில்டர்கள் பிளாஸ்டிக் செல்லுலோஸ் அசிடேட் இழைகளால் ஆனவை. இவை மெல்லிய இழைகளால் ஆனவை மற்றும் தார் (tar) மற்றும் நிகோடின் போன்ற சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் குறைக்க முற்றாக நீக்க அல்ல என்று வடிவமைக்கப்பட்டுள்ளன.
    2. ஆக்டிவேட்டட் சார்கோல் (Activated Charcoal) பில்டர்கள்: இந்த பில்டர்களில் செல்லுலோஸ் அசிடேட்டுடன் ஆக்டிவேட்டட் சார்கோல் சேர்க்கப்பட்டிருக்கும். சார்கோல் புகையிலுள்ள சில வாயு நிலை இரசாயனங்களை உறிஞ்சுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    3. பேப்பர் (கார்போர்டு) பில்டர்கள்: இவை பெரும்பாலும் கையால் சுருட்டப்படும் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நுரை பில்டர்களை விட வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன மற்றும் பல வடிவங்களில் (கிளாசிக், கிங் சைஸ், கூம்பு வடிவம்) கிடைக்கின்றன.
    4. மற்ற வகைகள்: கண்ணாடி பில்டர்கள் போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய விருப்பங்கள், நுரை பில்டர்கள் மற்றும் பயோ டீகிரேடபிள் (biodegradable) பில்டர்கள் போன்றவையும் கிடைக்கின்றன.

    தவறான புரிதல்

    பில்டர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், இவை எவ்விதமான கூடுதல் பாதுகாப்பையும் வழங்காது மற்றும் , இது புகையிலை நிறுவனங்களின் ஒரு வகையான ஏமாற்று வேலைஆகும். இவை  புகையிலிருந்து சில இரசாயனங்களை வடிகட்ட உதவுகின்றன. இருப்பினும், அவை புகைபிடிப்பதை பாதுகாப்பானதாக மாற்றுவதில்லை. அதாவது பில்டர்கள் சில இரசாயனங்களை வடிகட்டினாலும், அவை புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் கணிசமாகக் குறைப்பதில்லை. பில்டர் உள்ள சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்பது ஒரு தவறான கருத்து ஆகும்.

    • உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க உதவுகின்றது மேலும் புகையிலை துண்டுகள் வாயில் நுழைவதைத் தடுப்பது மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுவதன் மூலம் புகைபிடிப்பது “பாதுகாப்பானது” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
    • ஈடுசெய்யும் புகைபிடித்தல் (Compensatory Smoking): பில்டர்கள் நிக்கோடின் அளவைக் குறைப்பதாகத் தோன்றினாலும், உடல் தனக்குத் தேவையான நிக்கோடினைப் பெற புகைப்பிடிப்பவரை அதிக முறை அல்லது அதிக அழுத்தத்துடன் புகையை இழுக்கத் தூண்டுகிறது. உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க நேரிடுகிறது, இது நுரையீரலின் உட்பகுதிகளில் புற்றுநோய் (Adenocarcinoma) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
    • பயன்படுத்தப்பட்ட பில்டர்களில் ஆர்சனிக், காரீயம் (Lead) போன்ற நச்சுப் பொருட்கள் படிந்திருக்கும். இவை மண்ணிலும் நீரிலும் கலந்து மனித ஆரோக்கியத்திற்கு மறைமுகமாகப் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
    • மேலும் சிகரெட் புகைக்கும் பொழுது விரல் மற்றும் உதடுகளில் சுடாமல் இருக்க இந்த பில்டர் உதவுகின்றது அத்துடன் இந்த பில்டரில் தான் சிகரெட்டுக்குரிய சுவை ஊட்டிகள் கலக்கப்பட்டிருக்கும்.

    எனவே, பில்டர் வைத்திருப்பதன் மூலம் புகைபிடித்தல் பாதுகாப்பானது என்று கருதுவது தவறு. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரே வழி புகைபிடித்தலை முற்றாக நிறுத்துவது மட்டுமே.

    சிகரெட் பில்டர் மற்றும் நீர் மாசுபடுதல்

    சிகரெட் துண்டுகள் (Cigarette butts) மற்றும் பில்டர்கள்  உலகளவில் நீர் நிலைகளை மாசுபடுத்தும் முதன்மையான பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவை நீர் நிலைகளில்  ஏற்படுத்தும் பாதிப்புகள் பின்வருமாறு

    1. பிளாஸ்டிக் மாசுபாடு (Cellulose Acetate)

    சிகரெட் ஃபில்டர்கள் பஞ்சால் ஆனவை என்று பலர் தவறாக நினைக்கிறார்கள், ஆனால் அவை உண்மையில் செல்லுலோஸ் அசிடேட் (Cellulose acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. வெயில் மற்றும் அலையினால் இவை சிதைந்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாக (Microplastics) மாறி நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

    2. நச்சு இரசாயனங்கள் கசிதல்

    ஒரு சிகரெட் துண்டில் நிகோடின், ஆர்சனிக், காரீயம் (Lead), காட்மியம் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற 7,000-க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. மழையினால் அடித்துச் செல்லப்படும் சிகரெட் துண்டுகள் ஆறுகள் மற்றும் கடல்களில் சேரும்போது, அதிலுள்ள நச்சுகள் சில மணிநேரங்களிலேயே நீரில் கசியத் தொடங்குகின்றன. ஆய்வுகளின்படி, ஒரு லிட்டர் நீரில் ஒரு சிகரெட் துண்டு இருந்தால் கூட, அதில் இருக்கும் மீன்கள் 96 மணிநேரத்திற்குள் இறந்துவிடும் அபாயம் உள்ளது.

    3. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

    மீன்கள், ஆமைகள் மற்றும் கடற்பறவைகள் சிகரெட் துண்டுகளை அவற்றின் சிறிய அளவு மற்றும் மிதக்கும் தன்மையால் உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன. இவை விலங்குகளின் செரிமானப் பாதையை அடைத்து, பசி எடுக்காமல் செய்து இறுதியில் பட்டினியால் இறக்க நேரிடும்.

    4. மனித ஆரோக்கியம்

    மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் மற்றும் நச்சுகள், உணவுச் சங்கிலி (Food chain) வழியாக மீண்டும் மனிதர்களையே வந்தடைகின்றன. இது மனிதர்களுக்கு நாளமில்லா சுரப்பி பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

    இந்த மாசுபாட்டைத் தடுக்க, சிகரெட் துண்டுகளை நீர் நிலைகளிலோ அல்லது தெருக்களிலோ வீசாமல் முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.

    நன்றி

    கசிப்பு உயிரை பறித்தது ஏன்?


    வென்னப்புவ பகுதியில் சட்ட விரோத மதுபானமாகிய கசிப்பினை அருந்திய ஏழு பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

    முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

    நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

    கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

    ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

    உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

    இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

    அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.
    நன்றி

    நாய் இறைச்சி கண்டறிவது எவ்வாறு??

    அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியில் இரு நாய்கள் கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பரவலான சந்தேகங்கள் எழுந்தன அதாவது குறித்த நாய்களின் இறைச்சி புதுவருட கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட வேறு இறைச்சிகளுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்பட்டிருக்கலாம் என்று. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

    இதனை ஒத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது. அதாவது பசுக்கன்று ஒன்று இறைச்சி ஆக்கப்பட்டுள்ளது என வதந்தியான தகவல் பரவியத்தினால் ஏற்பட்ட கலவரத்தில் ஒருசிலர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் துண்டுகளாக்கப்பட்ட இறைச்சியின் தோற்ற இயல்புகளை வைத்து இது இன்ன மிருகத்தின் இறைச்சி என்று கண்டு பிடிப்பது மிகமிக கடினம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இறைச்சி போன்றவற்றிற்கு DNA பரிசோதனை செய்யப்படும். மேலே விபரிக்கப்பட்ட இந்தியாவில் நடந்த சம்பவத்தில் குறித்த இறைச்சி மாதிரிகள் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அது ஆட்டின் இறைச்சி என நிரூபிக்கபட்டது.

    ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அல்லது இதனை ஒத்த சம்பவங்கள்  நிகழ்வது அதிகம். அதாவது தடைவிதிக்கப்பட்ட, அரிதான விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடல், உறுப்புக்களுக்காக விலங்குகளை கொல்லல் முக்கியமாக கொம்பிற்காக காண்டா மிருகம் (Rhino), செதில்களுக்காக எறும்பு தின்னிகள் (Pangolins) போன்றன சட்ட விரோதமான முறையில் கொல்லப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேட்டைகாரர்கள் அல்லது கடத்தல் காரர்கள் அவ்விலங்குகளின் இறைச்சிகளை சிறிய துண்டுகளாகவே கடத்துவார்கள் அல்லது காண்ட மிருக கொம்பு /எறும்பு தின்னியின் செதில் போன்றவற்றினை சிறு துகள்களாக அல்லது பவுடர் ஆகவே கடத்துவார்கள். ஏனெனில் இலகுவாக இனம் காண்பதினை தடுப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப ஆகும். மேலும் இவ்வாறன சட்ட விரோத செயற்பாடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளும் என்பது வெளிப்படையான விடயம்.

    எனவேதான் மேற்குறித்த நாடுகளில் இவ்வாறன விலங்கு எச்சங்களை DNA பரிசோதனை செய்து அது எந்த விலங்கு, எந்த இனத்திற்கு உரியது போன்ற (உதாரணம் கறுப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டா மிருகம், இந்திய காண்டா மிருகம்) போன்ற தகவலைகளை எல்லாம் கண்டு பிடித்து, தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குகின்றனர்.

    RhODIS, அல்லது காண்டாமிருக DNA குறியீட்டு அமைப்பு என்பது  தனிப்பட்ட காண்டாமிருகங்களை விவரக்குறிப்பு செய்வதன் மூலம் காண்டாமிருக வேட்டையாடுதலை எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மரபியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தடயவியல் DNA தரவுத்தளமாகும். சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் வழக்குகளில் உயிரியல் மாதிரிகளிலிருந்து இனங்கள், தோற்றம் மற்றும் தனிநபர்களை அடையாளம் காண்பதன் மூலம் வனவிலங்கு தடயவியலில் DNA  சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கருக்கள் அல்லது சிதைந்த எச்சங்கள் போன்ற உருவவியல் அடையாளம் தோல்வியடையும் போது இது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை வழங்குகிறது. இலங்கையில் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ இவ்வாறன DNA தரவுத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    நன்றி

    மறியல் மரணங்கள்

    ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகிறார் அல்லது சிறை வைக்கப்படுகின்றார் என்றால் அவரது நலனுக்கும் பாதுகாப்புக்கும் சிறைத்துறை மற்றும் நீதி அமைச்சு உட்பட்ட நீதித்துறை பொறுப்பாகின்றது. இலங்கையில் பொதுவாகவே பொறுப்புக் கூறல் விவகாரம் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதால் சிறைத் துறையிலும் கைதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறைத் துறையோ நீதித் துறையோ நீதி அமைச்சோ பொறுப்பேற்பதில்லை. இந்தப் பின்புலத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தால் சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ – 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை இலங்கை சிறைகளில் குறைந்தது 168 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 155 பேர் நோய்களாலும், ஒன்பது பேர் தற்கொலையாலும் இரண்டு பேர் சிறைச்சாலைகளில் தாக்குதல்களாலும், இரண்டு பேர் சிறைச்சாலைகளில் விபத்துகளாலும் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் சிறைச்சாலைகளில் பராமரிப்பு வசதிகளில் கடுமையான பலவீனம் இருப்பதாகவும் பெரும்பாலான இறப்புகள் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் மற்றும் போதுமான மருத்துவ தலையீடு இல்லாததால் ஏற்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.

    சில சந்தர்ப்பங்களில் கைதிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வலுக்கட்டாயமாக உட்கொள்வதும், அடிப்படை மருத்துவ சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் இந்த நிலைமையை தீவிரமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகவும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

    கடந்த மாதமும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் பொழுது சாவடைந்தார் மேலும் அதே பகுதியினை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக சகோதரியினால் கூறப்படும்  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு என்ன நடந்தது என்ற நிலவரம் இன்னமும் வெளிவரவில்லை.

    “மறியல் சாலை மரணங்கள் (custodial deaths) ” என்பது ஒருவர் கைது செய்யப்பட்ட கணத்தில் இருந்து விடுதலையாகும் வரை சம்பவிக்கலாம்.  இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறான  மறியல்களில் நடைபெறும் சகல மரணங்களும் மஜிஸ்திரேட் நீதவானினால் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உடலங்கள் உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தான்  சட்ட வைத்திய அதிகாரிகள் இவ்வாறு நடைபெறும் மறியல் மரணங்களை பற்றிய விசாரணைகளில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

    மேற்குறித்த அறிக்கையின் பிரகாரம் பெரும்பாலான மரணங்கள் இயற்கை நோய்களால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் இவ்வாறான மறியல்களில் இருக்கும் பொழுது ஏற்படும் மன அழுத்தம், போதிய சிகிச்சை வசதி இன்மை… போன்ற பல்வேறு காரணங்களினால் அவருக்கு ஏற்கனவே இருக்கும் இயற்கை நோய் நிலைமை அல்லது இனம் காணப்படாமல் இருந்த நோய் நிலைமை அதிகரித்து மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறு மறியல் சாலைகளில் இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டும் இயற்கை மரணம் சம்பவித்து இருக்கின்றது.

    மேலும் தற்போதைய காலப்பகுதியில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை என்றும்மில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக போதைப்பொருள் அல்லது மதுபானத்திற்கு அடிமையானவர்கள் மறியலில் வைக்கப்படும் பொழுது அவர்களினால் போதைப்பொருள் அல்லது மதுபானத்தினை நுகரமுடியாமல் போகும் அதன்காரணமாக Delirium எனப்படும் சித்த பிரமை உருவாகும். இந்த நோய் நிலைமை உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசர சிகிச்சை நிலையாகும். தாமதமாகும் பொழுது மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறான நோய் நிலைமையின் பொழுது ஏற்படும் நடுக்கம், பதட்டம், சமநிலை குழப்பம் என்பன காரணமாக நிலத்தில் வீழ்வதன் காரணமாக கூட மரணம் சம்பவிக்கலாம். மேலும் இவ்வாறானவர்களை கைது செய்யும் பொழுது அவர்கள் பலசந்தர்ப்பங்களில் தமது உடைமையில் மறைத்து வைத்திருக்கும் போதைப்பொருளினை பொலிஸாருக்கு தெரியாமல் விழுங்கிய நிலையில் அது அதிகளவு நஞ்சாதலினை ஏற்படுத்தி மரணத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கைது மற்றும் மறியல் என்பவற்றினால் ஏற்படும் அதீத மன அழுத்தம் காரணமாக பலர் சிறைச்சாலை மற்றும் போலீஸ் நிலையங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். உண்மையில் இவ்வாறன தற்கொலை மரணங்களை தடுப்பது என்பது சவால் மிக்கது. பல சந்தர்ப்பங்களில் தமது சேட்டினை கழற்றி கதவின் கைப்பிடியில் தூங்கிய சம்பவங்கள் நிறையவே உண்டு.

    சில சந்தர்ப்பங்களில் போலீஸ் மற்றும் சிறைச்சாலை போன்றவற்றில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள், சித்திரைவதைகள் காரணமாகவும் இறப்பு நிகழ்ந்துள்ளது எனவே மறியல் மரணங்கள் நிச்சயமாக விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும் அத்துடன் இவ்வாறான மரணங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும்.

    நன்றி

    “விடுமுறை இருதய வருத்தம்” என்றால் என்ன?

    வருட இறுதியில் பொதுவாக நீண்ட விடுமுறை நாட்களில் குறைந்த ஆளணியுடன் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வேலைசெய்யும் பொழுது அதிகளவு நான் அவதானித்த மரணம் Holiday heart syndrome எனப்படும் நோய் நிலையினால் ஏற்படும் மரணங்கள். இவை குறிப்பாக வருட இறுதியில் நடைபெறும் மதுபான விருந்துகளுடன் தொடர்புபட்டவை.  Holiday heart syndrome (ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்) என்பது அதிக அளவு மது அருந்திய (binge drinking) பிறகு 12 தொடக்கம் 36 மணித்தியாலங்களில்  ஏற்படும் இதய துடிப்பு சீர்குலைவு (atrial fibrillation) நிலையாகும், இது பெரும்பாலும் விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் தோன்றுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. முக்கியமாக மது அருந்தி போதையின் உச்சத்தில் இந்த நோய் நிலைமை வருவதில்லை. மேலும் நெஞ்சு படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் பொழுது உறவினர்கள் மது அருந்தியமையால் தான் இவ்வாறு ஏற்படுகின்றது என்பதினை அறிவதில்லை இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க காலதாமதம் ஏற்படுகின்றது அதனால் மரணம் சம்பவிக்கின்றது.

    ஏற்படுவதற்கான காரணங்கள்

    அதிக மது உட்கொள்ளல் இதய செல்களின் எலக்ட்ரோலைட்டுகளை மாற்றுவதன் மூலமும், கேட்டகோலமைன்களை அதிகரிப்பதன் மூலமும், இதய தசை மின் சமிக்ஞைகளை அதாவது கணத்தாக்கம் கடத்துதலை (cardiac conduction ) நேரடியாகப் பாதிப்பதன் மூலமும் இதய மின் இயற்பியலை (cardiac electrophysiology) சீர்குலைக்கிறது. எப்போதாவது மது அருந்துபவர்கள் கூட இந்த ஆபத்தை எதிர்கொள்கின்றனர், மது அருந்திய 12-36 மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் உச்சத்தை அடைகின்றன. நீரிழப்பு, அதிகமாக சாப்பிடுவது, அதிகமாக உப்பு உட்கொள்ளல், கொழுப்பு உணவுகள், தூக்கமின்மை மற்றும் குளிர் போன்ற காரணிகள் பண்டிகை காலங்களில் இந்த பாதிப்பை அதிகரிக்கின்றன.

    அறிகுறிகள்

    அதிகளவு மது அருந்திய பின்னர் இதய படபடப்பு, மூச்சுத்திணறல், சோர்வு, மார்பு வலி, மயக்கம் போன்றவை 12-36 மணி நேரத்தில் தோன்றும்; கடுமையான நிலைகளில் ஸ்ட்ரோக் அபாயம் உள்ளது.

    தடுப்பு நடவடிக்கைகள்

    ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் தடுப்புக்கு முக்கிய நடவடிக்கைகள்

    • விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவு மது அருந்துவதை தவிர்க்கவும்
    • ஒரே அடியாக மதுவினை தொடர்ச்சியாக அருந்தாமல் நேர இடைவெளிகளில் அருந்த வேண்டும் மேலும் அதிகளவு நீர் அருந்தல் வேண்டும்.
    • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் சாப்பிடவும்.
    • அறிகுறிகள் (படபடப்பு, மூச்சுத்திணறல்) தோன்றினால் உடன் மருத்துவரை அணுகவும்.
    • உப்பு, கொழுப்பு உணவுகளை குறைத்து, பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்ளவும்.
    • உடற்பயிற்சி தொடர்ந்து செய்து, தூக்கத்தை 7-8 மணி நேரம் பெறவும்.
    • புகைப்பிடிப்பை முற்றிலும் நிறுத்தவும்

    இவ்வாறான மரணங்களில் உடற் கூராய்வு பரிசோதனைகளின் போதுள்ள முக்கிய சவால் இரத்தத்தில் உள்ள மதுபானத்தின் அளவு மற்றும் ஏனைய முடிவுகள் யாவும் சாதாரண அளவில் அல்லது இல்லாமல் இருக்கும்.

    நன்றி

    அதீத செயற்கைவழி விவசாயமும்  நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்

    வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது.   இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

    1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை?

    சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

    நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) –    நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

    2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய்  என்றால்  என்ன?

    அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

    இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக   chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும்.

    3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்

    இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.

    4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்?

    இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும்  பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.

    இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள்

    •          இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.

    •          விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்

    •          சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.

    •          குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்

    •          கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள்.

    •          கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.

    •          இந்நோயானது  பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.

    •          பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    •          ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.

    •          இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 

    5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும்  நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?

    1.         ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்

    மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.

    அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்

    குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஆ) உணவுச்சங்கிலி மூலம்

    நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.

    2.  அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்

    சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.

    குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.

    3.  களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்

    புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.

    முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.

    4.  நீரின் கடினத் தன்மை (Hardness of Water)

    உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது

    மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.

    •          கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை

    •          உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை

    •          அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen)   போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.

    7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்?

    1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.

    2.  வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.

    3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.

    4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.

    5.    வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல்  உடலை  அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.

    6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.

    7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.

    உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

    8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

    நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ  சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.

    1)   தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.

    2)   அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.

    3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.

    4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.

    5)         புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல்.

    6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல்.

    9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்?
    உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும்.

    10. ஆறுதல் தரும் விடயம்
    2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம்.

    நன்றி