கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிந்த மனநோயாளி… அது எப்படி உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது?

சில நேரங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அலமாரி, படுக்கையின் கீழ், கூரையின் இடைவெளி, கழிவறைத் தொட்டி, நீர்த் தொட்டி, வாகனத்தின் டிக்கி, சுவர் மற்றும் பொருட்களுக்கு இடையிலான குறுகிய இடங்கள் போன்றவற்றில் ஒளிந்து கொண்டிருப்பதை காணலாம். வெளிப்படையாகப் பார்த்தால் இது விசித்திரமான நடத்தையாகத் தோன்றினாலும், அதன் பின்னால் ஆழமான உளவியல் மற்றும் உயிரியல் காரணிகள் இருக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட மனநோயின் தனிப்பட்ட அறிகுறி அல்ல. மாறாக, பல்வேறு மனநலக் கோளாறுகளில் வெவ்வேறு காரணங்களால் இந்த நடத்தை தோன்றக்கூடும்.

பாதுகாப்பிற்கான தீவிர தேடல்

பல மனநோயாளிகள் தங்களை யாரோ கண்காணிக்கிறார்கள், துரத்துகிறார்கள் அல்லது கொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற தவறான நம்பிக்கைகளால் (Persecutory Delusions) பாதிக்கப்படலாம். அவர்களின் பார்வையில் அச்சம் கற்பனையானதல்ல; அது உண்மையான அபாயமாக உணரப்படுகிறது. அவர்கள் எண்ணக்கூடியவை:

  • “என்னைப் பிடிக்க வருகிறார்கள்.”
  • “வீட்டுக்குள்ளேயே யாரோ மறைந்து இருக்கிறார்கள்.”
  • “போலீசார் அல்லது எதிரிகள் என்னைத் தேடுகிறார்கள்.”
  • “நான் மறைந்தால் மட்டுமே உயிர் பிழைப்பேன்.”

இதனால் அவர்கள் மிகவும் குறுகிய இடங்களுக்குள் நுழைந்து மறைந்து கொள்ளலாம்.

“கருப்பை போன்ற” பாதுகாப்பு உணர்வு

உளவியல் ஆய்வுகளின்படி, சிலர் மிகுந்த மனஅழுத்தம் அல்லது பயத்தின் போது சிறிய மூடிய இடங்களை அறியாமலே பாதுகாப்பான இடங்களாக உணரலாம். கருப்பையில் இருக்கும் குழந்தை வெளி உலக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுவது போல, மூடிய மற்றும் இருண்ட இடங்கள் சிலருக்கு தற்காலிக மனஅமைதியை வழங்கக்கூடும். இதனை “Regressive Behaviour” எனப்படும் குழந்தைப் பருவ பாதுகாப்பு நிலைக்குத் திரும்பும் உளவியல் செயல்முறையின் ஒரு பகுதியாக சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

மனப்பிறழ்வினால் ஏற்படும் ஒழுங்கற்ற நடத்தை

கடுமையான மனப்பிறழ்வின் போது சிந்தனை மற்றும் நடத்தையின் இயல்பான ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக காரணமின்றி மறைந்து கொள்ளுதல், பொருந்தாத இடங்களில் நுழைதல், ஆபத்தான சூழல்களை உணரத் தவறுதல் தப்பிக்க முடியாத இடங்களில் சிக்கிக்கொள்ளுதல் போன்ற செயல்கள் நிகழலாம். ஒரு சாதாரண நபர் நுழையாத இடத்திற்குள் கூட மனப்பிறழ்வு நிலையில் இருக்கும் ஒருவர் நுழைந்து விடலாம்.

கேடட்டோனியா (Catatonia)

சில மனநோயாளிகளில் கேடட்டோனியா எனப்படும் நிலை ஏற்படலாம். இதில்

  • நீண்ட நேரம் அசையாமல் இருப்பது
  • பேசாமல் இருப்பது
  • உடலை அசாதாரண நிலையில் வைத்திருப்பது
  • வெளிப்புற உத்தரவுகளுக்கு பதிலளிக்காமை

போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்நிலையில் ஒருவர் குறுகிய இடத்தில் சிக்கிக்கொண்டால், தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நீண்ட நேரம் இருக்கக்கூடும்.

அவர்கள் ஏன் அங்கு உயிரிழக்கிறார்கள்?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மரணம் மறைந்து கொண்டதாலல்ல; மறைந்திருந்த சூழ்நிலையால் ஏற்படுகிறது.

1. நிலைப்பாட்டுச் சுவாசத் திணறல் (Positional Asphyxia)

உடல் சுவாசிக்க முடியாத நிலையில் சிக்கும்போது இது ஏற்படுகிறது. உதாரணமாக:

  • தலை கீழாக சிக்குதல்
  • முழங்கால்களை மார்புக்கு அணைத்தபடி மடங்கிய நிலை
  • மார்பு அழுத்தப்படும் நிலை

இவற்றால் நுரையீரல் விரிவடைய முடியாது. சுவாசம் படிப்படியாகக் குறைந்து:

  • ஆக்சிஜன் பற்றாக்குறை
  • கார்பன் டைஆக்சைடு அதிகரிப்பு
  • இதய செயலிழப்பு

ஏற்பட்டு மரணம் நிகழலாம்.

2. சிக்குண்ட சுவாசத் திணறல் (Entrapment Asphyxia)

இங்கு உடலின் மார்பு அல்லது வயிற்றுப் பகுதி வெளிப்புற அழுத்தத்தால் நசுக்கப்படுகிறது. உதாரணங்கள்

  • அலமாரியின் பின்புறம் சிக்குதல்
  • சுவர் மற்றும் படுக்கைக்கிடையில் சிக்குதல்
  • கூரை இடைவெளியில் சிக்குதல்
  • நீர்த் தொட்டி அல்லது கழிவறைத் தொட்டிக்குள் சிக்குதல்

மார்பு விரிவடைய முடியாததால் சுவாசம் நிறுத்தப்படுகிறது.

3. வெப்ப அதிர்ச்சி (Heat Stroke)

கூரைகள், வாகன டிக்கிகள் மற்றும் மூடிய பெட்டிகளுக்குள் வெப்பநிலை மிக வேகமாக உயரலாம். இதனால்

  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • கடுமையான நீரிழப்பு
  • சிறுநீரக செயலிழப்பு
  • மூளை சேதம்

ஏற்படலாம். சில மணிநேரங்களிலேயே உயிரிழப்பு நிகழக்கூடும்.

4. பட்டினி மற்றும் நீரிழப்பு

மனப்பிறழ்வில் இருக்கும் ஒருவர் வெளியே வர அஞ்சலாம். இதனால்:

  • பல நாட்கள் உணவு இல்லாமல்
  • தண்ணீர் இல்லாமல்
  • மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல்

இருக்கக்கூடும். இதன் விளைவாக:

  • கடுமையான நீரிழப்பு
  • மின்னியக்கச் சீர்கேடு
  • சிறுநீரக செயலிழப்பு

ஏற்படலாம்.

5. தீவிர மனஅழுத்தத்தால் திடீர் மரணம்

சில நேரங்களில் நோயாளி மிகவும் பயந்த நிலையில் இருப்பார். அந்த நேரத்தில் உடலில்:

  • அட்ரினலின்
  • நோரட்ரினலின்

போன்ற அழுத்த ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியேறும். இதனால்:

  • இதயத் துடிப்புக் கோளாறுகள்
  • உயிருக்கு ஆபத்தான அரித்மியாக்கள்
  • திடீர் இதயநிறுத்தம்

ஏற்படலாம்.

மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்படும் அபாயம்

ஒரு நோயாளி குறுகிய இடத்தில் மறைந்து கொண்டிருக்கும் போது அவரை வலுக்கட்டாயமாக வெளியே எடுப்பதும் சில நேரங்களில் ஆபத்தாக முடியும். குறிப்பாக:

  • பலர் சேர்ந்து அழுத்தி பிடித்தல்
  • முகம் கீழாக தள்ளி கட்டுப்படுத்துதல்
  • மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல்
  • அதிக நேரம் உடல் கட்டுப்படுத்தல்

இவை சுவாசத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் மனநல அவசரநிலைகளில் பயிற்சி பெற்ற மருத்துவ மற்றும் மீட்பு குழுக்களின் உதவி மிக முக்கியமாகும்.

தடயவியல் நோயியல் முக்கியத்துவம்

இத்தகைய மரணங்களில் உடற்கூற்று பரிசோதனை மட்டும் போதுமானதல்ல. பின்வருவன மிக முக்கியமானவை:

  • உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்
  • அந்த இடத்தின் பரிமாணங்கள்
  • உடலின் துல்லியமான நிலை
  • சுற்றுப்புற வெப்பநிலை
  • தப்பிக்க முயன்ற தடயங்கள்
  • மனநோய் வரலாறு
  • மருந்து பயன்பாடு
  • நச்சுயியல் பரிசோதனை
  • சம்பவ இடப் புகைப்படங்கள்
  • சாட்சியக் குறிப்புகள்

பல சந்தர்ப்பங்களில் மரணத்தின் உண்மையான விளக்கம் உடற்கூற்று அறையில் அல்ல, சம்பவ இடத்திலேயே கிடைக்கிறது. ஒரு மனநோயாளி குறுகிய இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது வெறும் “விசித்திரமான நடத்தை” அல்ல. அது கடுமையான பயம், மனப்பிறழ்வு அல்லது பாதுகாப்பு தேடும் உளவியல் முயற்சியின் வெளிப்பாடாக இருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலைகளில் அந்த நபரை உடனடியாக கண்டறிந்து, பாதுகாப்பாக மீட்டு, மருத்துவ உதவி வழங்குவது உயிரைக் காப்பாற்றக்கூடிய செயல் ஆகும். தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்தில், இவ்வகை மரணங்களைப் புரிந்துகொள்வதில் “உடற்கூற்று பரிசோதனையை விட சம்பவ இட ஆய்வே அதிக முக்கியத்துவம் பெறுகிறது” என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

திடீர் மரணத்தை ஏற்படுத்தும் உடலினுள் போதைப்பொருள் கடத்தல்

கடந்தவாரம் தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார். அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்காலை பேருந்து நிலையத்திற்கு வந்த நடத்துனர், திடீரென தரையில் விழுந்து கடுமையான வெறித்தனமாக துடித்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அவரது கை, கால்களைக் கட்டி, ஆம்புலன்ஸ் மூலம் தங்காலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையைத் மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய, தங்காலை ஆதார மருத்துவமனையில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றுக்குள் (இரைப்பையில்) ‘ஐஸ்’ போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும், தலா 20 கிராம் எடையைக் கொண்ட 2 பாக்கெட்டுகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்ததன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இப்பதிவு இவ்வாறு உடலினுள் போதை மருந்து கடத்துவதினால் மற்றும் பொலிசாரினை கண்டவுடன் போதைப்பொருளினை விழுங்குவதினால் ஏற்படும் உடல் பாதிப்புக்கள் மற்றும் மரணம் ஏற்படும் வழிமுறைகள் பற்றி விளக்குகின்றது

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான முறைகளில் ஒன்று உடலினுள் போதைப்பொருட்களை மறைத்து எடுத்துச் செல்வதாகும். இவ்வாறு செயல்படுபவர்கள் “Body Packers” என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் போதைப்பொருள் நிரப்பப்பட்ட சிறிய பொதிகளை விழுங்கியோ அல்லது உடலின் இயற்கை துவாரங்களுக்குள் மறைத்தோ எடுத்துச் செல்கின்றனர். இந்தச் செயல் சட்டரீதியாக குற்றமாக மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலைகளையும் ஏற்படுத்தக்கூடியது. பல சந்தர்ப்பங்களில் இது திடீர் மரணத்திற்குக் கூட வழிவகுக்கிறது.

Body Packing என்றால் என்ன?

ஹெரோயின், கொக்கெய்ன், மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருட்கள் சிறிய பொதிகளாக இறுக்கமாக சுற்றப்பட்டு விழுங்கப்படுகின்றன அல்லது உடலின் உள்ளகப் பகுதிகளில் மறைக்கப்படுகின்றன. சிலர் ஒரே நேரத்தில் பல பொதிகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர்.பொதிகள் பாதுகாப்பாக சுற்றப்பட்டிருந்தாலும், அவை உடலுக்குள் கசிவதோ அல்லது வெடிப்பதோ ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகள் மிகவும் ஆபத்தானவை.

Body Packers மற்றும் Body Stuffers ஆகிய இரு வேறுபட்ட போதைப்பொருள் கடத்தல் முறைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

1. Body Packers – திட்டமிட்ட கடத்தல்காரர்கள்

  • நோக்கம்: இவர்கள் திட்டமிட்டு, சர்வதேச எல்லைகளைத் தாண்டி போதைப்பொருட்களைக் கடத்தும் தொழில்முறை கடத்தல்காரர்கள் (Mules) ஆவர்.
  • அளவு: உடலுக்குள் அதிக அளவிலான (நூற்றுக்கணக்கான கிராம் வரை) போதைப்பொருட்களை விழுங்கியிருப்பார்கள்.
  • பேக்கிங் தரம்: வயிற்று அமிலம் மற்றும் செரிமானத் திரவங்களால் பாதிப்படையாதவாறு லேடெக்ஸ் (Latex), மெழுகு (Wax) அல்லது தடிமனான பிளாஸ்டிக் உறைகளால் மிகவும் பாதுகாப்பாக, இயந்திரங்கள் மூலம் பேக் செய்யப்பட்டிருக்கும்.
  • உயிருக்கு ஆபத்து: இவற்றின் பேக்கிங் தரம் நன்றாக இருப்பதால் உடனே வெடிக்கும் அபாயம் குறைவு. ஆனால், ஏதேனும் ஒரு பாக்கெட் உடைந்தால், அது உடனே மரணத்தை விளைவிக்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

2. Body Stuffers – அவசரக்கால கடத்தல்காரர்கள்

  • நோக்கம்: இவ‌ர்கள் தொழில்முறை கடத்தல்காரர்கள் அல்ல. போலீசாரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தில், திடீரென அவசரமாக கையில் இருக்கும் போதைப்பொருளை விழுங்குபவர்கள்.
  • அளவு: மிகக் குறைந்த அளவு அல்லது ஒரு சில பாக்கெட்டுகளை மட்டுமே விழுங்குவார்கள்.
  • பேக்கிங் தரம்: அவசரத்தில் விழுங்குவதால், சாதாரண பிளாஸ்டிக் கவர், காகிதம் அல்லது எந்தவித பேக்கிங்கும் இல்லாமலேயே விழுங்கிவிடுவார்கள்.
  • உயிருக்கு ஆபத்து: சாதாரண பேக்கிங் என்பதால், வயிற்று அமிலத்தால் அது மிக விரைவாகக் கிழிந்து, போதைப்பொருள் உடலில் கலந்து உடனடி மரணத்தை அல்லது கடுமையான நச்சுத்தன்மையை (Toxicity) ஏற்படுத்தும் அபாயம் மிக அதிகம்.

திடீர் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது?

போதைப்பொருள் பொதி உடலுக்குள் வெடித்தாலோ கசிந்தாலோ, அதிலுள்ள போதைப்பொருள் ஒரே நேரத்தில் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படுகிறது. அதன் விளைவாக,

  • திடீர் மயக்கம்
  • வலிப்பு (Fits)
  • சுவாசக்குறைபாடு
  • இதயத்துடிப்பு சீர்குலைவு
  • இதயநிறுத்தம்
  • கோமா நிலை
  • திடீர் மரணம்

போன்ற கடுமையான விளைவுகள் சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ ஏற்படலாம்.

பிற உடல்நல அபாயங்கள்

குடல் அடைப்பு

விழுங்கப்பட்ட பொதிகள் குடலுக்குள் சிக்கிக் கொள்ளலாம். இதனால்:

  • கடுமையான வயிற்றுவலி
  • வாந்தி
  • வயிற்று உப்புசம்
  • மலம் கழிக்க முடியாமை

போன்ற அறிகுறிகள் தோன்றும். சிகிச்சை தாமதமானால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

குடல் கிழிதல்

பொதிகள் குடல் சுவரை சேதப்படுத்தி கிழிவை ஏற்படுத்தலாம். இதனால் குடலிலுள்ள கிருமிகள் வயிற்றுப் பகுதியில் பரவி கடுமையான தொற்றுநோய் மற்றும் இரத்த நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

நச்சு தாக்கம்

பொதி முழுமையாக வெடிக்காமல் சிறிதளவு கசிந்தாலும் உடலில் நச்சுத்தன்மை உருவாகலாம். இது படிப்படியாக மோசமடைந்து உயிருக்கு ஆபத்தாக மாறலாம்.

அவசர அறுவைச் சிகிச்சை

பல நோயாளிகளுக்கு பொதிகளை அகற்ற அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எச்சரிக்கை அறிகுறிகள்

பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்:

  • காரணமற்ற கடுமையான வயிற்றுவலி
  • தொடர்ச்சியான வாந்தி
  • மயக்கம் அல்லது குழப்பநிலை
  • அதிக தூக்க கலக்கம்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • வலிப்பு
  • திடீர் சுயநினைவு இழப்பு

பொதுமக்களுக்கான முக்கிய செய்தி

உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் கடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். சில ஆயிரம் ரூபாய்களுக்காக அல்லது பிறரின் தூண்டுதலுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது திடீர் மரணம், நிரந்தர உடல்நல பாதிப்பு, சிறைத்தண்டனை மற்றும் குடும்ப அழிவுக்கு வழிவகுக்கலாம்.

உடலினுள் போதைப்பொருள் மறைத்துக் கடத்துதல் என்பது சட்டவிரோதமானதுடன் மிகவும் ஆபத்தான செயலாகும். பொதி வெடிப்பு, குடல் அடைப்பு, கடுமையான நச்சுத்தன்மை மற்றும் திடீர் மரணம் போன்ற விளைவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வபாயங்களைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும்.

பாடசாலை ஆய்வகபாதுகாப்பு: மாணவர்களும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டியவை

கடந்த மாதம் பண்டாரவளை பகுதியில் உள்ள ஓர் பாடசாலையின் ஆய்வகத்தில் நடைபெற்ற விபத்து சம்பவம் ஒன்றின் காரணமாக மாணவன் ஒருவனின் முகத்தில் பாரதூரமான எரிகாயம் ஏற்பட்ட நிலையில் மாணவன் தற்பொழுது பிளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தவிர கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன அத்துடன் சில தற்கொலை மரணங்கள் கூட பதிவாகியுள்ளன. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கைக்கொள்ளவேண்டிய நடைமுறைகள் பற்றி இப்பதிவு விளக்குகின்றது

அறிவியல் ஆய்வகங்கள் மாணவர்களின் அறிவை வளர்க்கும் முக்கியமான கற்றல் சூழல்களாகும். ஆனால், அவற்றில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தீ மூட்டும் கருவிகள், மின்சாதனங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் பாதுகாப்பின்றி கையாளப்பட்டால் கடுமையான காயங்கள் ஏற்படலாம். குறிப்பாக முகம், கண்கள் மற்றும் தோலில் ஏற்படும் தீக்காயங்கள் வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ஆய்வக பாதுகாப்பு என்பது ஒரு விதிமுறை மட்டுமல்ல; ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பாகும்.

ஆய்வக பாதுகாப்பு ஏன் முக்கியம்?

அறிவியல் பரிசோதனைகள் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாதபோது சிறிய தவறுகள்கூட பெரிய விபத்துகளாக மாறலாம். முகம், கண்கள், கைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் காயங்கள் நிரந்தர வடுக்கள், பார்வை இழப்பு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பு விழிப்புணர்வும் ஒழுங்குமுறையும் பல விபத்துகளைத் தடுக்க உதவுகின்றன.

எந்த இரசாயனங்கள் தீக்காயங்களை ஏற்படுத்தும்?

பள்ளி மற்றும் கல்லூரி ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் சில இரசாயனங்கள் தவறாக கையாளப்பட்டால் தீவிரமான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

அமிலங்கள் (Acids)

  • சல்பியூரிக் அமிலம் (Sulfuric Acid)
  • ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric Acid)
  • நைட்ரிக் அமிலம் (Nitric Acid)
  • அசிட்டிக் அமிலம் (Concentrated Acetic Acid)

இவை தோல் மற்றும் கண்களில் பட்டால் இரசாயனத் தீக்காயங்களை ஏற்படுத்தும். நைட்ரிக் அமிலம் தோலில் மஞ்சள் நிற மாற்றத்தை உருவாக்கக்கூடும்.

காரங்கள் (Alkalis)

  • சோடியம் ஹைட்ராக்சைடு (Caustic Soda)
  • பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  • அமோனியா கரைசல்

காரப் பொருட்கள் அமிலங்களை விட ஆழமான திசுச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கண்களில் பட்டால் நிரந்தர பார்வை இழப்பும் ஏற்படலாம்.

எரியக்கூடிய இரசாயனங்கள்

  • எத்தனால் (Ethanol)
  • மெத்தனால் (Methanol)
  • அசிட்டோன் (Acetone)
  • டைஎதில் ஈதர் (Diethyl Ether)

இவை தீப்பற்றக்கூடியவை. திறந்த தீ அருகில் பயன்படுத்தும்போது திடீர் தீப்பரவல் அல்லது “Flash Fire” ஏற்படலாம்.

ஆக்சிசனேற்றும் இரசாயனங்கள்

  • பொட்டாசியம் பெர்மாங்கனேட்
  • பொட்டாசியம் குளோரேட்
  • அதிக செறிவுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு

இவை மற்ற பொருட்களுடன் வினைபுரிந்து வெப்பம், தீ அல்லது வெடிப்பை உருவாக்கக்கூடும்.

பள்ளி ஆய்வக விபத்துகளுக்கான பொதுவான காரணங்கள்

  • பாதுகாப்புக் கண்ணாடி மற்றும் பாதுகாப்பு உடைகளை அணியாதது.
  • அமிலங்கள் மற்றும் காரப் பொருட்களை தவறாக கையாளுதல்.
  • ஆசிரியரின் மேற்பார்வை இல்லாமல் பரிசோதனைகளை மேற்கொள்வது.
  • ஆய்வகத்தில் ஓடுதல், விளையாடுதல் அல்லது மற்றவர்களின் கவனத்தைச் சிதறடித்தல்.
  • பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதது.
  • பழுதடைந்த உபகரணங்களைப் பயன்படுத்துதல்.
  • அனுமதியின்றி இரசாயனங்களை கலப்பது.
  • எரியக்கூடிய இரசாயனங்களை திறந்த தீக்கு அருகில் பயன்படுத்துவது.

இரசாயனத் தீக்காயங்களின் அறிகுறிகள்

  • கடுமையான எரிச்சல் அல்லது வலி
  • தோல் சிவத்தல்
  • கொப்புளங்கள் தோன்றுதல்
  • தோல் நிறமாற்றம்
  • கண்களில் வலி அல்லது நீர்வருதல்
  • பார்வை மங்குதல்
  • தீவிரமான நிலையில் திசு அழிவு

மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

பரிசோதனைக்கு முன்

  • ஆசிரியரின் வழிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.
  • பாதுகாப்புக் கண்ணாடி, ஆய்வக அங்கி மற்றும் தேவையானால் கையுறைகள் அணியுங்கள்.
  • நீளமான தலைமுடியை கட்டிக்கொள்ளுங்கள்.
  • அவசர வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, கண் கழுவும் வசதி மற்றும் பாதுகாப்பு ஷவர் எங்கு உள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
  • பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் அபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

பரிசோதனையின் போது

  • ஆசிரியரின் அறிவுறுத்தல்களை மட்டும் பின்பற்றுங்கள்.
  • இரசாயனங்களை நேரடியாக முகர வேண்டாம் அல்லது சுவைக்க வேண்டாம்.
  • அனுமதியின்றி இரசாயனங்களை கலக்க வேண்டாம்.
  • ஓடுதல், தள்ளுதல் அல்லது விளையாட்டுத் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
  • இரசாயனங்களை முகத்திற்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.
  • கசிவு, உடைவு அல்லது அசாதாரண நிகழ்வுகளை உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.
  • வேலை செய்யும் இடத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருங்கள்.

பரிசோதனைக்குப் பிறகு

  • இரசாயனங்களை ஆசிரியர் கூறிய முறையில் அகற்றுங்கள்.
  • கைகளை நன்றாக கழுவுங்கள்.
  • பயன்படுத்திய உபகரணங்களை உரிய இடத்தில் வையுங்கள்.
  • சிறிய காயமாயினும் உடனடியாக தெரிவியுங்கள்.

ஆசிரியர்களின் பொறுப்புகள்

ஆய்வக விபத்துகளைத் தடுக்க ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள்

  • ஒவ்வொரு பரிசோதனைக்கும் முன் அபாய மதிப்பீடு செய்ய வேண்டும்.
  • மாணவர்களுக்கு பாதுகாப்பு விளக்கங்களை வழங்க வேண்டும்.
  • பரிசோதனைகளை முன்மாதிரியாக செய்து காட்ட வேண்டும்.
  • மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • பாதுகாப்புக் கண்ணாடி, கையுறை மற்றும் அவசரநிலை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அபாயகரமான இரசாயனங்களை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.
  • ஆய்வக உபகரணங்கள் மற்றும் மின்சாதனங்களை முறையாக பரிசோதிக்க வேண்டும்.
  • பாதுகாப்பற்ற நடத்தை காணப்பட்டால் உடனடியாக தடுக்க வேண்டும்.

விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இரசாயனம் கண்ணில் பட்டால்

  • உடனடியாக சுத்தமான ஓடும் நீரால் கண்களை கழுவ வேண்டும்.
  • குறைந்தது 15–20 நிமிடங்கள் தொடர்ந்து கழுவ வேண்டும்.
  • உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இரசாயனம் தோலில் பட்டால்

  • பாதிக்கப்பட்ட ஆடைகளை அகற்ற வேண்டும்.
  • அதிகளவு ஓடும் நீரால் குறைந்தது 20 நிமிடங்கள் கழுவ வேண்டும்.
  • எந்தவிதமான களிம்பு, பற்பசை அல்லது வீட்டுவைதியத்தையும் பயன்படுத்தக்கூடாது.
  • மருத்துவ பரிசோதனை பெற வேண்டும்.

தீப்பற்றினால்

  • உடனடியாக ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டும்.
  • “Stop, Drop and Roll” முறையைப் பின்பற்ற வேண்டும்.
  • தீ அணைக்கும் போர்வை அல்லது பாதுகாப்பு ஷவரைப் பயன்படுத்த வேண்டும்.
  • அமைதியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.

வெடிப்பு ஏற்பட்டால்

  • உடனடியாக அனைவரையும் எச்சரிக்க வேண்டும்.
  • காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட வேண்டும்.
  • கண் அல்லது முகக் காயங்கள் இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

ஆய்வக பாதுகாப்பு என்பது ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல; மாணவர்களின் பொறுப்பும் ஆகும். ஒவ்வொருவரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, அபாயங்களை உடனடியாக அறிவித்து, பொறுப்புடன் செயல்பட்டால் பல விபத்துகளைத் தடுக்க முடியும். ஒரு சிறிய கவனக்குறைவு கூட வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் காயங்களை ஏற்படுத்தலாம். முகம் மற்றும் கண்களில் ஏற்படும் இரசாயனத் தீக்காயங்கள் நிரந்தர வடுக்கள், பார்வை இழப்பு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுதல், உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் மூலம் பள்ளி ஆய்வகங்களை பாதுகாப்பான கற்றல் சூழலாக மாற்ற முடியும்.

அறிவியல் கற்றல் முக்கியம்; ஆனால் பாதுகாப்பான கற்றல் அதைவிட முக்கியம்.
பாதுகாப்பே முதன்மை. விபத்துகளைத் தடுப்போம், உயிர்களைக் காப்போம்.

நெல்சன் மண்டேலா விதிகள் மற்றும் இலங்கையின் கடப்பாடுகள்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், இனவெறி எதிர்ப்பு போராட்டத்தின் உலகளாவிய அடையாளமாகவும் விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்கள், மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனஒதுக்கல் (Apartheid) கொள்கைக்கு எதிராகப் போராடியதன் காரணமாக அவர் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்த காலத்திலும் அவர் மனித கண்ணியத்தையும், மனித உரிமைகளையும் காக்கும் தனது உறுதியை இழக்கவில்லை. அவரது தியாகத்தையும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2015 ஆம் ஆண்டு கைதிகள் நடத்தப்படுவதற்கான குறைந்தபட்ச தரநிலை விதிகளை (United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners) மறுபரிசீலனை செய்து, அவற்றிற்கு “நெல்சன் மண்டேலா விதிகள்” (Nelson Mandela Rules) எனப் பெயரிட்டது.

இந்த விதிகள் உலகம் முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நபர்களின் மனித உரிமைகள், கண்ணியம், உடல்நலம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதையும், சித்திரவதை, கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற தண்டனைகள் மற்றும் நடத்தைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இவ்விதிகள் வலியுறுத்துகின்றன. மேலும், சிறைச்சாலைகளில் சுகாதார சேவைகள், மருத்துவ பராமரிப்பு, மனநல சேவைகள், உணவு, குடிநீர், தங்குமிட வசதிகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வெளி உலகத்துடனான தொடர்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு வாய்ப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

நெல்சன் மண்டேலா விதிகள் மொத்தம் 122 விதிகளை உள்ளடக்கியவை. இவை சிறை நிர்வாகம், கைதிகளின் உரிமைகள், மருத்துவ சேவைகள், ஒழுக்காற்று நடைமுறைகள், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒழுங்குபடுத்துகின்றன. மனித கண்ணியத்தை மதிக்கும் சிறை நிர்வாகத்திற்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான தரநிலைகளாக இவ்விதிகள் இன்று கருதப்படுகின்றன.

1. நெல்சன் மண்டேலா விதிகள் என்றால் என்ன?

நெல்சன் மண்டேலா விதிகள் என்பது உலகெங்கிலும் உள்ள சிறைகளில் கைதிகளை எவ்வாறு மனிதநேயத்துடன் நடத்த வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் (UN) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச குறைந்தபட்ச தரநிலை விதிகள் (Standard Minimum Rules) ஆகும்.

இவ்விதிகளின் முக்கிய 9 அடிப்படைக் கொள்கைகள்

  1. மனித கண்ணியம் (Inherent Dignity): அனைத்துக் கைதிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். சித்திரவதைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
  2. பாகுபாடின்மை (Non-Discrimination): இனம், நிறம், பாலினம், மொழி, மதம் அல்லது அரசியல் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் கைதிகளுக்கு இடையே எந்தவொரு பாகுபாடும் காட்டக் கூடாது.
  3. மறுவாழ்வு (Rehabilitation): சிறைவாசத்தின் முதன்மை நோக்கம் கைதிகளைப் பழிவாங்குவது அல்ல, அவர்களைத் திருத்தி மறுவாழ்வு அளிப்பது மட்டுமே ஆகும்.
  4. தனிமைச் சிறைக்கான கட்டுப்பாடுகள் (Restrictions on Solitary Confinement): ஒரு கைதியை 22 மணி நேரத்திற்கும் மேலாக மனிதத் தொடர்புகள் இன்றி அடைத்து வைப்பது மிகக் கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 15 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் தனிமைச் சிறைவாசம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
  5. சுகாதாரத் தேவைகள் (Right to Health Care): பொதுமக்களுக்குக் கிடைக்கும் அதே தரமான மருத்துவ மற்றும் மனநலச் சிகிச்சைகள் கைதிகளுக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்.
  6. அடிப்படை வசதிகள் (Basic Living Conditions): கைதிகளுக்குப் போதிய காற்றோட்டம், வெளிச்சம், தூய்மையான தங்குமிடம், சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
  7. வெளி உலகத் தொடர்பு (Contact with the Outside World): கைதிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களைத் தொடர்ந்து தொடர்புகொள்ளவும், நேர்காணல் மூலம் பேசவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
  8. புகாரளிக்கும் உரிமை (Complaints & Inspections): சிறைக்குள் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து கைதிகள் தடையின்றிப் புகார் செய்ய வழிவகை இருக்க வேண்டும். சுயாதீனமான வெளி அமைப்புகளின் ஆய்வுகள் (Independent Inspections) வழக்கமாக நடத்தப்பட வேண்டும்.
  9. சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி (Training for Staff): சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், கைதிகளைக் கையாள்வதிலும் முறையான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

2. இலங்கை இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டுமா?

ஆம், இலங்கை இந்த நெல்சன் மண்டேலா விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான சட்ட ரீதியான மற்றும் சர்வதேசக் காரணங்கள் கீழே உள்ளவாறு அமைகின்றன:

  • ஐநா சபையின் உறுப்பினர் (UN Membership): இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்பு நாடாகும். நெல்சன் மண்டேலா விதிகள் ஐநா பொதுச்சபையினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரநிலையாகும். எனவே, சர்வதேச சட்டங்களை மதிக்கும் கடமை இலங்கைக்கு உண்டு.
  • சர்வதேச உடன்படிக்கைகள் (International Treaties): இலங்கை ஏற்கனவே “சித்திரவதைக்கு எதிரான ஐநா உடன்படிக்கை” (UNCAT) மற்றும் “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (ICCPR) ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் சிறைச்சாலை வடிவமே நெல்சன் மண்டேலா விதிகளாகும்.
  • இலங்கை அரசியலமைப்புச் சட்டம் (Constitutional Right): இலங்கையின் அரசியலமைப்பின் 11-வது உறுப்புரையின்படி, எந்தவொரு நபரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்படலாகாது என்று கூறப்பட்டுள்ளது. இது நெல்சன் மண்டேலா விதிகளுடன் நேரடியாக ஒத்துப்போகிறது.

3. இலங்கையில் உள்ள நடைமுறைச் சவால்கள்

இலங்கை இந்த விதிகளைப் பின்பற்றக் கடமைப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சில கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது

  • சிறைச்சாலைகளில் நெரிசல் (Overcrowding): இலங்கையின் பல சிறைகளில், கொள்ளளவை விட 200% முதல் 300% வரை அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது நெல்சன் மண்டேலா விதியின் அடிப்படை தங்குமிட வசதிகளுக்கு முரணானது.
  • பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA): இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் நீண்ட காலம் நீதிமன்ற விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் கடுமையான சித்திரவதைகளுக்கும், தனிமைச் சிறைவாசத்திற்கும் உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • பழைய உள்கட்டமைப்பு: பல சிறைச்சாலைகள் (உதாரணமாக வெலிக்கடை சிறைச்சாலை) 1800-களில் கட்டப்பட்டவை என்பதால், போதிய காற்றோட்டமோ, தூய்மையான சுகாதார வசதிகளோ, கைதிகளுக்கான மனநலச் சிகிச்சைகளோ இருப்பதில்லை.

சுருக்கமாகக் கூறின், சர்வதேச அளவில் இலங்கை தனது நற்பெயரைக் காக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நெல்சன் மண்டேலா விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். அண்மைக்காலமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) சிறைச்சாலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த விதிகளை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

⚡மின்சாரத் தீ விபத்துகள்: தடுப்போம் – உயிர்களைக் காப்போம்!

இலங்கையில் அண்மைக் காலமாக குடியிருப்பு மற்றும் வர்த்தகக் கட்டடங்களில் தீ விபத்துகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இவ்விபத்துகளுக்குப் பின்னால் உள்ள முதன்மைக் காரணி மின்சாரக் குறும்சுற்று (Electrical Short Circuit) மற்றும் மின்சுமை அதிகரிப்பு (Overloading) ஆகும். நவீனக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், விழிப்புணர்வின்மை மற்றும் முறையற்ற மின்சாரப் பயன்பாடு காரணமாகப் பல உயிர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் சாம்பலாகி வருகின்றன. இந்த விபத்துகளைத் தடுக்க, ஆபத்துகளையும் அதற்கான தீர்வையும் ஒவ்வொரு குடிமகனும் அறிவது அவசியமாகும்.

மின்சாரத் தீ விபத்துகள் எவ்வாறு ஏற்படுகின்றன?

  • குறும்சுற்று (Short Circuit): சேதமடைந்த மின் கம்பிகள் ஒன்றோடொன்று நேரடியாகத் தொடும்போது மின்சாரம் பாயும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கிறது.
  • அதிவேக மின்பெருக்கம்: இந்தத் திடீர் மின்சாரப் பெருக்கம் தீவிரமான தீப்பொறிகளை உருவாக்கி, அருகிலுள்ள பொருட்களை எரியூட்டுகிறது.
  • மின்சுமை அதிகரிப்பு (Overloading): ஒரு கம்பியால் தாங்கக்கூடிய அளவை விட அதிக மின்சாரத்தை நுகரும் கருவிகளை இணைக்கும்போது கம்பிகள் சூடாகின்றன.
  • காப்புறை உருகுதல்: கம்பிகளில் தேங்கும் அதிகப்படியான வெப்பம், அதன் மேல் உள்ள பிளாஸ்டிக் காப்புறையை உருகச் செய்து தீயை உருவாக்குகிறது.

ஆபத்தை ஏற்படுத்தும் முதன்மைப் பழக்கவழக்கங்கள்

  • ஒரே மல்டிபிளக்கில் பல கருவிகள்: ஒரே சுவர் சொக்கெட்டில் (Wall Socket) மல்டி-பிளக் (Multi-plug top) மூலம் டிவி, ஃபிரிட்ஜ், போன் சார்ஜர் எனப் பல கருவிகளை ஒரே நேரத்தில் இணைப்பது சாக்கெட்டை வெடிக்கச் செய்யும்.
  • குறைந்த திறன் கம்பியில் கனரகக் கருவிகள்: வீடுகளில் ஏற்கனவே இருக்கும் குறைந்த திறன் கொண்ட பழைய வயர்களில், ஏசி (Air Conditioner), மைக்ரோவேவ் ஓவன், வாஷிங் மெஷின் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் கருவிகளை இணைப்பது ஒயர்களை உடனடியாக உருக வைக்கும்.
  • தரமற்ற எக்ஸ்டென்ஷன் கோர்ட்கள் (Extension Cords): சந்தையில் மலிவாகக் கிடைக்கும், சான்றளிக்கப்படாத எக்ஸ்டென்ஷன் கோர்ட்களில் பயன்படுத்தப்படும் மெல்லிய செப்புக் கம்பிகளால் நவீனக் கருவிகளின் மின்சுமையைத் தாங்க முடியாது.
  • சுருட்டப்பட்ட கம்பிகளின் ஆபத்து: எக்ஸ்டென்ஷன் கோர்ட்களை முழுமையாக விரிவடையச் செய்யாமல் சுருட்டி வைத்தபடியே பயன்படுத்தும்போது, காந்தப்புலத் தாக்கத்தால் உள்ளே வெப்பம் அதிகரித்து எளிதில் தீப்பிடிக்கும்.

இதுவரை நீங்கள் கவனிக்காத பிற முக்கியக் காரணங்கள்

  • போலி சர்க்யூட் பிரேக்கர்கள் (Trip Switches): தரமற்ற அல்லது போலி ட்ரிப் சுவிட்சுகள் மற்றும் MCB-க்கள் வீட்டில் மின் கசிவு ஏற்படும் போது மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறிவிடுகின்றன.
  • தளர்வான இணைப்புகள் (Loose Connections): சுவரில் உள்ள சாக்கெட்டுகள் அல்லது பிளக்குகள் தளர்வாக இருக்கும்போது மின் தடை ஏற்பட்டு, அந்த இடத்தில் அதிக வெப்பம் உருவாகி பிளாஸ்டிக் பாகங்கள் எரியத் தொடங்கும்.
  • எலிகளின் சேதங்கள்: கூரை அல்லது சுவர்களுக்குள் இருக்கும் மின் கம்பிகளை எலிகள் கடித்துக் குதறுவதால், கம்பிகள் வெளியில் தெரிந்து குறும்சுற்று (Short Circuit) ஏற்படுகிறது.
  • பராமரிப்பற்ற மின் சாதனங்கள்: பழுதடைந்த மின்விசிறிகள், பழைய ஃபிரிட்ஜ்கள் மற்றும் தண்ணீர் மோட்டார்கள் இயங்கும்போது அவற்றின் மோட்டார்கள் அளவுக்கு அதிகமாகச் சூடாகி தீப்பற்றிக் கொள்ளும்.
  • அனுபவமற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள்: அங்கீகாரம் இல்லாத நபர்களைக் கொண்டு வீட்டின் மின் இணைப்புகளை மாற்றி அமைப்பது அல்லது சுயப் பரிசோதனைகள் செய்வது ஆபத்தை விளைவிக்கும்.

மாதந்தோறும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்புச் சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் வீட்டை மின்சாரத் தீ விபத்துகளிலிருந்து பாதுகாக்க, மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் சரிபார்க்க வேண்டிய அத்தியாவசியக் காரணிகள்

1. சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகள் (Switches & Sockets)

  • சூடாதல் பரிசோதனை: சுவரில் உள்ள சொக்கெட்டுகள் அல்லது சுவிட்சுகளைத் தொடும்போது அவை சூடாக இருக்கிறதா? (சூடாக இருந்தால் உடனே மாற்றவும்).
  • மினுமினுப்பு (Flickering): விளக்குகள் தானாகவே மினுமினுக்கிறதா அல்லது மங்கலாகிறதா? (இது தளர்வான மின் இணைப்பின் அறிகுறி).
  • சத்தம் மற்றும் வாசனை: சுவிட்சுகளுக்கு அருகில் “கிச் கிச்” என்ற சத்தமோ அல்லது பிளாஸ்டிக் உருகும் வாசனையோ வருகிறதா?
  • உடைந்த பாகங்கள்: உடைந்த அல்லது விரிசல் விழுந்த சுவிட்சுகள் மற்றும் சொக்கெட் பலகைகள் மாற்றப்பட்டுவிட்டனவா?

2. கம்பிகள் மற்றும் பிளக்குகள் (Wires & Plugs)

  • டேப் ஒட்டப்பட்ட கம்பிகள்: வீட்டில் உள்ள மின் சாதனங்களில் சேதமடைந்த அல்லது கறுப்பு டேப் (Insulation Tape) ஒட்டப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதா?
  • பொருத்தமான ஒயர்கள்: ஏசி, மைக்ரோவேவ், வாஷிங் மெஷின் போன்ற கனரகக் கருவிகளுக்குத் தடிமனான, அதிக திறன் கொண்ட ஒயர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனவா?
  • சுருட்டப்பட்ட கம்பிகள்: எக்ஸ்டென்ஷன் கோர்ட்கள் (Extension Cords) பயன்படுத்தப்படும்போது, அவை சுருட்டப்படாமல் முழுமையாக விரித்து வைக்கப்பட்டுள்ளனவா?
  • கம்பிகள் செல்லும் வழி: மின் கம்பிகள் மேசைக்கால்கள், கதவுகள் அல்லது கார்பெட்டுகளுக்கு அடியில் நசுங்காதவாறு பாதுகாப்பாக உள்ளனவா?

3. மல்டிபிளக் மற்றும் மின்சுமை (Multi-plugs & Overloading)

  • ஒரே சொக்கெட் விதி: ஒரு சுவர் சொக்கெட்டில் ஒரே ஒரு மல்டி-பிளக் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதா? (மல்டி-பிளக்கிற்கு மேல் மற்றொரு மல்டி-பிளக் இணைப்பது முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளதா?)
  • அதிதிறன் கருவிகள்: மல்டி-பிளக்குகளில் ஃபிரிட்ஜ், அயர்ன் மெஷின் போன்ற அதிக மின்சாரம் நுகரும் கருவிகள் இணைக்கப்படாமல், அவை நேரடியாகச் சுவர் சாக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளனவா?
  • தற்காலிகப் பயன்பாடு: எக்ஸ்டென்ஷன் கோர்ட்கள் தற்காலிகத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா? (அவற்றை நிரந்தர இணைப்பாகப் பயன்படுத்தக் கூடாது).

4. முதன்மை மின் பலகை (Main Switchboard & Safety Devices)

  • ட்ரிப் சுவிட்ச் பரிசோதனை: முதன்மை மின் பலகையில் (Main Board) உள்ள RCCB / Trip Switch-இல் உள்ள “Test” (T) பொத்தானை அழுத்திப் பார்க்கும்போது, மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்படுகிறதா?
  • உருகி (Fuse) கம்பிகள்: கட்டடத்தின் ஃபியூஸ் கட்டைகளில் (Fuse carriers) தரமான கம்பிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனவா? (தாமிரக் கம்பிகளுக்குப் பதிலாக தடிமனான இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது).
  • எலித் தொல்லை: மின் பலகை மற்றும் கூரையின் உட்பகுதிகளில் எலிகள் கம்பிகளைக் கடித்ததற்கான அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா?

5. பொதுவான பாதுகாப்பு (General Safety)

  • SLS முத்திரை: வீட்டில் புதிதாகப் பொருத்தப்பட்ட அனைத்து மின் உபகரணங்கள் மற்றும் ஒயர்களில் SLS (Sri Lanka Standards) முத்திரை உள்ளதா?
  • ஈரப்பதம்: சமையலறை மற்றும் குளியலறைகளில் உள்ள மின் சாக்கெட்டுகள், தண்ணீர் படும் இடங்களிலிருந்து தூரமாக அமைந்துள்ளனவா?
  • இரவு நேரப் பாதுகாப்பு: இரவில் தூங்கச் செல்லும்போது அல்லது வீட்டை விட்டு வெளியேறும்போது அவசியமற்ற மின் சாதனங்கள் (டிவி, கணினி, சார்ஜர்கள்) சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, பிளக்குகள் கழற்றப்பட்டுள்ளனவா?

மின்சாரப் பாதுகாப்பு என்பது ஏனோதானோ என்று இருக்க வேண்டிய விஷயமல்ல; அது நமது அன்றாட விழிப்புணர்வு சார்ந்த விஷயம். ஒரு சிறிய அலட்சியமும், தரமற்ற ஒரு மல்டி-பிளக்கும் உங்களது ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் சில நிமிடங்களில் சாம்பலாக்கிவிடும். எனவே, முறையான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, தரமான உபகரணங்களைப் பயன்படுத்தி, நம் நாட்டையும் நம் குடும்பங்களையும் மின்சாரத் தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்போம்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உடையும் மனங்கள்: PTSD மற்றும் தடுப்புக்காவலின் உளவியல் தாக்கம்

கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள  “சுரேஷ் சாலே” , முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளருக்கு PTSD என்ற வருத்தம் உள்ளதாக அவரது சட்ட தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இவர் தவிர நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் வருடக்கணக்காக எவ்விதமான காரணமும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (Post-Traumatic Stress Disorder – PTSD) என்பது நம் சமூகத்தின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் ஒரு தீவிரமான மனநலப் பேரழிவு ஆகும். பொதுவாக இப்பாதிப்பு ராணுவ வீரர்கள் அல்லது பெரிய விபத்துகளைச் சந்தித்தவர்களோடு மட்டுமே பொதுமக்களால் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. ஆனால், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் கைதிகள் (Detainees) அனுபவிக்கும் மனரீதியான சித்திரவதைகளும், அதன் விளைவாக அவர்களுக்கு ஏற்படும் PTSD பாதிப்புகளும் பொதுவெளியில் பேசப்படுவதே இல்லை. இந்த விழிப்புணர்வுக்பதிவு, PTSD-ன் மருத்துவப் பின்னணி, தடுப்புக்காவல் சூழலில் இது எவ்வாறு உருவாகிறது மற்றும் இந்த அமைப்பை மாற்றுவதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது.

1. PTSD என்றால் என்ன?

Post-Traumatic Stress Disorder (PTSD) என்பது தமிழில் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் சீர்கேடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நபர் தன் உயிருக்கோ அல்லது மற்றவர் உயிருக்கோ ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு பயங்கரமான சம்பவத்தை நேரடியாக அனுபவிக்கும் போது அல்லது நேரில் பார்க்கும் போது ஏற்படும் ஒரு தீவிரமான மனநல பாதிப்பு ஆகும்

PTSD என்பது ஏதோ ஒரு நபர் மனதளவில் பலவீனமாக இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அல்ல; அது மூளையில் ஏற்படும் ஒரு ஆழமான உயிரியல் காயம் (Biological Injury) ஆகும். ஒரு மனிதன் தன் உயிருக்கோ அல்லது தன் சுயமரியாதைக்கோ ஆபத்து விளைவிக்கும் ஒரு கொடூரமான சம்பவத்தை எதிர்கொள்ளும் போது, அவனது மூளையின் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் சிதைந்துவிடுகிறது.

மூளையின் செயல்பாட்டில் மாற்றம்

நமது மூளையில் உள்ள அமிக்டலா (Amygdala) என்ற பகுதி ஆபத்துகளைக் கண்டறிந்து நம்மை எச்சரிக்கும் ஒரு ‘அலாரக் கருவி’ போலச் செயல்படுகிறது. ஒரு கொடூரமான விபத்தோ அல்லது சித்திரவதையோ நடக்கும்போது, இந்த அலாரம் மிகத் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கும்.

சாதாரண மனிதர்களுக்குச் சில காலத்திற்குப் பிறகு இந்த அலாரம் அடங்கிவிடும். ஆனால், PTSD பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த அலார அமைப்பு பழுதடைந்துவிடுகிறது. மூளையில் நினைவுகளைச் சேமித்து வைக்கும் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) பகுதி பாதிக்கப்படுவதால், அந்த பழைய கொடூரமான சம்பவத்தை மூளையால் “கடந்த காலம்” என்று வகைப்படுத்த முடிவதில்லை. இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட நபர் அந்த பயங்கரமான சம்பவத்தை ஒவ்வொரு நொடியும் தனது நிகழ்காலத்தில் மீண்டும் மீண்டும் நிஜமாகவே அனுபவிப்பது போன்ற உணர்வைப் பெறுகிறார்.

2. PTSD ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்

பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இப்பாதிப்பு எதனால் உருவாகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

  • உடல் மற்றும் பாலியல் வன்முறைகள்: குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு மற்றும் கடுமையான உடல் ரீதியான தாக்குதல்கள் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து, மிக வேகமாகக் கடுமையான PTSD-ஐ உருவாக்குகின்றன.
  • போர்க்களக் கொடுமைகள்: போரில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், தங்கள் கண் முன்னால் சக வீரர்கள் இறப்பதைக் காண்பதாலும், தொடர் குண்டுவெடிப்புகளாலும் இப்பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
  • திடீர் விபத்துகள்: எதிர்பாராத வாகன விபத்துகள், தொழிற்சாலை வெடிவிபத்துகள் ஒரு நொடியில் மனிதனின் பாதுகாப்பு உணர்வை உலுக்கிவிடுகின்றன.
  • இயற்கை சீற்றங்கள்: சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளில் தங்களின் வீடு, வாசல் மற்றும் உறவினர்களைப் பறிகொடுத்த மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பயத்துடனேயே வாழ்கிறார்கள்.

3. முக்கிய அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட காவலில் உள்ள நபர்கள் அல்லது கைதிகள் பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்

  • ஊடுருவும் நினைவுகள் (Flashbacks & Nightmares): தங்களை சித்திரவதை செய்த காட்சிகள் அல்லது கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிஜமாக நடப்பது போன்ற பயமுறுத்தும் கனவுகளாகவும் எண்ணங்களாகவும் வந்து தொல்லை தரும்.
  • தவிர்த்தல் (Avoidance): அந்த சம்பவத்தை நினைவூட்டும் நபர்கள், சீருடைகள், இடங்கள் அல்லது அதுகுறித்த பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க முயல்வார்கள்.
  • எப்போதும் விழிப்புடன் இருப்பது (Hypervigilance): தங்களுக்கு மீண்டும் ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று எப்போதும் பயந்து, பதற்றத்துடன் (On Edge) இருப்பது.
  • நம்பிக்கையிழப்பு (Negative Mood): தங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற விரக்தி, கடுமையான குற்ற உணர்ச்சி, மற்றும் யாரையும் நம்ப முடியாத மனநிலை.

4. தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு PTSD ஏன் ஏற்படுகிறது?

சிறைச்சாலைகளும் தடுப்புக்காவல் மையங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த, மனிதர்களை அச்சுறுத்தக்கூடிய சூழலைக் கொண்டவை ஆகும். காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு PTSD ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள்

அ) கைது மற்றும் “காவல் அதிர்ச்சி” (Custodial Shock)

ஒரு நபர் திடீரென நள்ளிரவிலோ அல்லது பொது இடத்திலோ வற்புறுத்திக் கைது செய்யப்படும் போதே அவரது மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கைவிலங்கு இடப்படுவது, ஆடைகள் மற்றும் உடமைகள் பறிக்கப்படுவது, சுயமரியாதை முற்றிலும் சிதைக்கப்படுவது ஆகியவை ஒரு மனிதனை நிலைகுலையச் செய்கின்றன.

ஆ) நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறைகள் (Systemic Violence)

தடுப்புக்காவல் மையங்களில் வாழும் கைதிகள் எந்நேரமும் சக கைதிகளால் தாக்கப்படலாம் அல்லது காவலர்களின் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். தங்கள் கண் முன்னால் பிற கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்ப்பது அவர்களுக்குள் ஒரு நிரந்தர மரண பயத்தை (Inescapable Terror) விதைக்கிறது.

இ) தனிமைச் சிறைவாசத்தின் உளவியல் கொடுமை (Solitary Confinement)

மனிதர்கள் சமூகத்தோடு இணைந்து வாழ வடிவமைக்கப்பட்டவர்கள். ஒரு நபரை வெளிச்சமே இல்லாத ஒரு சிறிய அறையில், யாரிடமும் பேச விடாமல், பல வாரங்கள் அல்லது மாதங்கள் தனியாக அடைத்து வைப்பது (Solitary Confinement) அவரது மூளையின் செயல்பாட்டை முற்றிலுமாக சிதைத்துவிடும். இது மிகக் கடுமையான மாயத்தோற்றங்களையும் (Hallucinations), நிரந்தர மனநல பாதிப்புகளையும் உருவாக்குகிறது.

ஈ) எந்நேரமும் நீடிக்கும் பதற்றமும் கட்டுப்பாடின்மையும் (Hypervigilance)

தடுப்புக்காவலில் உள்ள ஒரு நபருக்குத் தனது சொந்த வாழ்க்கையின் மீது எந்த அதிகாரமும் இல்லை. எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது விளக்கை அணைக்க வேண்டும் என்பதைக்கூட அவர்களால் தீர்மானிக்க முடியாது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்களின் கண்காணிப்பில் இருக்கும்போது, அவர்களது நரம்பு மண்டலம் எப்போதும் ஒரு ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ‘அதி-விழிப்பு நிலைக்கே’ (Hypervigilance) சென்றுவிடுகிறது.

4. சமூகத்தில் இதன் தாக்கங்கள் (Public Health and Societal Implications)

தடுப்புக்காவலில் உள்ளவர்களின் PTSD-ஐ நாம் ஏன் ஒரு பொதுப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? ஏனெனில், காவலில் வைக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஒரு நாள் மீண்டும் இதே சமூகத்திற்குள் தான் வரப்போகிறார்கள்.

  • மீண்டும் குற்றங்களில் ஈடுபடுதல் (Recidivism): சிகிச்சையளிக்கப்படாத PTSD கோபம், எரிச்சல் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு வழிவகுக்கும். சிறையிலிருந்து வெளிவரும் நபர் இந்த மன உளைச்சலால் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.
  • குடும்பங்களின் சிதைவு (Multi-Generational Burden): பாதிக்கப்பட்ட நபர் வீட்டிற்குத் திரும்பும்போது, அவரது PTSD அறிகுறிகள் அவரது மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும். இதனால் தலைமுறை தலைமுறையாக இந்த மன உளைச்சல் குடும்பங்களுக்குள் கடத்தப்படுகிறது.
  • பொருளாதார இழப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரால் சமூகத்தில் பயனுள்ள வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இது மருத்துவமனைச் செலவுகளையும், அரசின் பராமரிப்புச் செலவுகளையும் தேவையற்று உயர்த்துகிறது.

5. நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள்

தடுப்புக்காவல் அமைப்புகளை வெறும் தண்டனை வழங்கும் இடமாகப் பார்க்காமல், மனிதர்களைச் சீர்திருத்தும் இடமாக மாற்ற நாம் சில அவசர நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்:

  1. முறையான மனநலப் பரிசோதனை: ஒரு நபர் காவலில் எடுக்கப்பட்ட உடனே அவருக்குப் போதிய மனநலப் பரிசோதனை செய்யப்பட்டு, ஏற்கனவே இருக்கும் மனக் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  2. தனிமைச் சிறையை ஒழித்தல்: ஐநா சபையின் மாண்டேலா விதிகளின்படி (Mandela Rules), மனிதர்களை நீண்ட காலம் தனிமைச் சிறையில் வைப்பது ஒரு சித்திரவதையாகும். இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
  3. காவலர்களுக்குப் பயிற்சி அளித்தல்: கைதிகளிடம் கோபத்தையோ, பயத்தையோ தூண்டாமல், அவர்களை எவ்வாறு உளவியல் ரீதியாகக் கையாள்வது என்பது குறித்த பயிற்சிக் வகுப்புகள் காவல்துறைக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
  4. மறுவாழ்வு உதவிகள்: சிறையிலிருந்து விடுபட்டு வெளியே வரும் நபர்களுக்குச் சமூகத்தில் வேலைவாய்ப்பு, முறையான கவுன்சிலிங் (CBT, EMDR சிகிச்சைகள்) மற்றும் தங்குமிடம் கிடைக்க அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (PTSD) என்பது மனிதனின் ஆன்மாவை உடைத்தெறியும் ஒரு கொடூரமான காயம். தடுப்புக்காவல் என்ற பெயரில் மனிதர்களை மேலும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது, சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தாது, மாறாகப் பாதிப்பைத் தான் அதிகரிக்கும். எனவே, “தண்டனை மட்டுமே தீர்வு” என்ற மனநிலையை மாற்றி, “மனிதநேயமும் மறுவாழ்வுமே தீர்வு” என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

கட்டிப்போடல்: பாதுகாப்பா? அபாயமா?

மனநல நோய்கள், ஞாபக மறதி (Dementia), அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவை உலகளவில் அதிகரித்து வருகின்றன. இதனுடன் தொடர்புடைய பராமரிப்பு தேவைகளும் அதிகரித்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் கடுமையான ஆவேசம், வன்முறை, தற்கொலை எண்ணம், அல்லது தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடத்தைகளை வெளிப்படுத்தலாம். இத்தகைய அவசரநிலைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, ஆனால் மிகுந்த சர்ச்சைக்குரிய நடைமுறைகளில் ஒன்று “கட்டிப்போடல்” (Restraint) ஆகும்.

கட்டிப்போடல் சில நேரங்களில் உயிரைக் காப்பாற்றக்கூடியதாக இருக்கலாம். அதேவேளை தவறாக பயன்படுத்தப்பட்டால் மனித உரிமை மீறல்கள், உடல் மற்றும் மன உளைச்சல்கள், மேலும் மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே இதன் பயன்பாடு குறித்து பொதுமக்கள், குடும்பத்தினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சரியான புரிதலைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

1. கட்டிப்போடல் என்றால் என்ன?

ஒரு நபர் தமக்கோ அல்லது பிறருக்கோ உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில், அவரின் அசைவுகள், நடத்தைகள் அல்லது சுதந்திரத்தை தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையே கட்டிப்போடல் (Restraint) ஆகும்.

இதன் முக்கிய நோக்கங்கள்:

  • உயிரைக் காப்பாற்றுதல்
  • காயங்களைத் தடுப்பது
  • பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
  • அவசர மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பளித்தல்

கட்டிப்போடல் என்பது:

  • தண்டனை அல்ல
  • ஒழுக்கம் கற்பிக்கும் முறை அல்ல
  • பணியாளர்களின் வசதிக்காக செய்யப்படும் செயல் அல்ல

மாறாக, அனைத்து மாற்று வழிமுறைகளும் தோல்வியடைந்த பின் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கடைசி வழிமுறையாகும்.

2. ஏன் சில நோயாளிகள் வன்முறையாக அல்லது ஆவேசமாக நடக்கிறார்கள்?

மனநோயாளிகள் அனைவரும் வன்முறையாளர்கள் என்பது சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கையாகும். உண்மையில் பெரும்பாலான மனநோயாளிகள் சமூகத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில மருத்துவ நிலைகளில் வன்முறை நடத்தை தோன்றலாம். இந்நிலைகளில் நோயாளி:

  • இல்லாத குரல்களைக் கேட்கலாம்
  • தன்னை யாரோ தாக்கப்போகிறார்கள் என்று நம்பலாம்
  • சுற்றியுள்ளவர்களை எதிரிகளாக கருதலாம்

இதன் விளைவாக தற்காப்பு உணர்வில் வன்முறையாக நடந்து கொள்ளலாம்.

போதைப்பொருள் பாவனையில்

போதைப்பொருட்கள் மூளையின் இயல்பான செயற்பாடுகளை மாற்றி, சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine அல்லது Ice), கொக்கெய்ன் (Cocaine), செயற்கைத் தூண்டுதல் போதைப்பொருட்கள் (Synthetic stimulants) போன்றவை பயன்படுத்தப்பட்டால், நபர் மிகுந்த ஆவேசம், பதற்றம், சந்தேக உணர்வு மற்றும் வன்முறை நடத்தையை வெளிப்படுத்தலாம். அதேபோல் அதிக அளவு மதுபானம் அருந்திய நிலை (Alcohol intoxication) அல்லது நீண்டகால மதுபானப் பாவனைக்குப் பிறகு திடீரென நிறுத்தும்போது ஏற்படும் மதுபான விலகல் நிலை (Alcohol withdrawal) கூட கடுமையான கலக்கம், குழப்பம், மாயத் தோற்றங்கள் மற்றும் ஆபத்தான நடத்தை உருவாக்கக்கூடும். இந்நிலைகளில் சிலர் தமக்கோ அல்லது பிறருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படலாம்.

எனவே இவ்வாறான ஆவேசமான நடத்தைகள் ஒழுக்கக் குறைபாடு அல்லது குற்றவியல் மனநிலை காரணமாக அல்ல; மாறாக, உடனடி மருத்துவ கவனம் தேவைப்படும் ஒரு மருத்துவ அவசரநிலையின் வெளிப்பாடாகக் கருதப்பட வேண்டும்.

3. கட்டிப்போடலின் வகைகள்

A. உடல் கட்டிப்போடல் (Physical Restraint)

பணியாளர்கள் உடல் வலிமையைப் பயன்படுத்தி நோயாளியின் அசைவுகளை கட்டுப்படுத்துதல்.

உதாரணங்கள்: கைகளைப் பிடித்தல், கால்களைப் பிடித்தல், பாதுகாப்பு பிடிப்புகள்…..

B. இயந்திர கட்டிப்போடல் (Mechanical Restraint)

கருவிகளைப் பயன்படுத்தி அசைவுகளை கட்டுப்படுத்துதல்.

உதாரணங்கள்: கைப்பட்டைகள், கால்பட்டைகள், இடுப்புப் பட்டைகள், பாதுகாப்பு நாற்காலிகள்….

C. இரசாயன கட்டிப்போடல் (Chemical Restraint)

நோயாளியை அமைதிப்படுத்த மருந்துகளைப் பயன்படுத்துதல்.

பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகள்: Haloperidol, Olanzapine, Risperidone……..

D. தனிமைப்படுத்தல் (Seclusion)

நோயாளியை பாதுகாப்பான தனி அறையில் வைப்பது.

E. உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை

இவை மிகவும் பாதுகாப்பான மற்றும் மனிதநேயமான அணுகுமுறைகளாகும்.

உதாரணங்கள்: அமைதியான உரையாடல், நம்பிக்கை அளித்தல், குடும்ப ஆதரவு, சத்தத்தைக் குறைத்தல், தூண்டுதல்களை அகற்றுதல்….

4. எப்போது கட்டிப்போடலாம்?

கட்டிப்போடல் பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே நியாயப்படுத்தப்படலாம்:

  • தற்கொலை முயற்சி
  • பிறரைத் தாக்குதல்
  • தன்னைத்தானே காயப்படுத்துதல்
  • உயிருக்கு ஆபத்தான ஆவேசம்
  • அவசர சிகிச்சையைத் தடுக்குதல்

எப்போது பயன்படுத்தக்கூடாது?

  • தண்டனையாக
  • ஒழுக்கம் கற்பிக்க
  • பணியாளர் வசதிக்காக
  • பணியாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய
  • “சிரமமான நோயாளி” என்பதற்காக

5. கட்டிப்போடலின் நன்மைகள்

சரியான சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் போது கட்டிப்போடல் உயிர்காக்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.

நோயாளிக்கான நன்மைகள்

  • தற்கொலை தடுப்பு
  • தன்னைத்தானே காயப்படுத்துவதைத் தடுக்கலாம்
  • உயிரைக் காப்பாற்றலாம்

பிறருக்கான நன்மைகள்

  • பிற நோயாளிகளை பாதுகாக்கலாம்
  • சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கலாம்
  • குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கலாம்

மருத்துவ நன்மைகள்

  • அவசர சிகிச்சைக்கு வாய்ப்பு
  • மருந்து வழங்குதல்
  • ஆபத்தான சூழ்நிலையை கட்டுப்படுத்துதல்

6. கட்டிப்போடலின் தீமைகள் மற்றும் ஆபத்துகள்

கட்டிப்போடல் முழுமையாக பாதுகாப்பான நடைமுறை அல்ல.

உடல் ரீதியான ஆபத்துகள்

  • மூச்சுத்திணறல்
  • நுரையீரல் பாதிப்புகள்
  • இதயத் துடிப்பு கோளாறுகள்
  • இரத்த உறைவு
  • நரம்பு சேதம்
  • தோல் காயங்கள்
  • எலும்பு முறிவுகள்

உளவியல் பாதிப்புகள்

  • பயம்
  • அவமானம்
  • மனஅழுத்தம்
  • PTSD
  • மருத்துவர்களின் மீதான நம்பிக்கை இழப்பு

சமூக மற்றும் சட்ட விளைவுகள்

  • மனித உரிமை மீறல்கள்
  • துஷ்பிரயோகம்
  • நீதிமன்ற வழக்குகள்
  • தொழில்முறை நடவடிக்கைகள்

7. முதியோர் இல்லங்களில் கட்டிப்போடல்

முதியோர் இல்லங்களில் கட்டிப்போடல் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகும். Dementia நோயாளிகள்:

  • அலைந்து திரிவர்
  • விழுந்துவிடலாம்
  • குழப்பமடையலாம்

என்பதற்காக சில இடங்களில் கட்டிப்போடப்படுகின்றனர். ஆனால் ஆய்வுகள் காட்டுவதாவது:

  • கட்டிப்போடல் விழுதல்களைத் தடுக்காது
  • அழுத்தப் புண்களை அதிகரிக்கும்
  • மனநிலையை மோசமாக்கும்
  • மரண அபாயத்தை அதிகரிக்கலாம்

எனவே மருத்துவ காரணமின்றி முதியோரை கட்டிப்போடுவது முதியோர் துஷ்பிரயோகமாகக் கருதப்படலாம்.

8. போதைப்பொருள் மறுவாழ்வு நிலையங்களில் கட்டிப்போடல்

Methamphetamine மற்றும் Cocaine போன்ற தூண்டுதல் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் கடுமையான ஆவேசத்துடன் காணப்படலாம். இந்நிலையில்:

  • அதிக உடல் வெப்பம்
  • அதிக இதயத் துடிப்பு
  • அசாதாரண உடல் வலிமை

காணப்படலாம். இத்தகைய நபர்களை தவறான முறையில் கட்டிப்போடுவது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

9. இலங்கையின் சட்ட நிலை

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் Mental Diseases Ordinance 1873 மிகவும் பழமையான சட்டமாகும். இச்சட்டத்தில் உடல் கட்டிப்போடல், இரசாயன கட்டிப்போடல், தனிமைப்படுத்தல் பற்றிய தெளிவான விதிமுறைகள் இல்லை.

எனவே:

  • மருத்துவ ஆவணப்படுத்தல்
  • மூத்த மருத்துவ மேற்பார்வை
  • மனித உரிமை பாதுகாப்பு

மிகவும் முக்கியமானவையாகின்றன.

10. கட்டிப்போடலின் போது ஏற்படும் மரணங்கள் – தடய மருத்துவப் பார்வை

கட்டிப்போடலின் போது ஏற்படும் மரணங்கள் உலகளவில் முக்கியமான நீதிமருத்துவ பிரச்சினையாகும்.

A. Positional Asphyxia (நிலைமுறை மூச்சுத்திணறல்)

நோயாளியை குப்புறப்படுக்க வைத்து முதுகில் அழுத்தம் கொடுத்து பிடித்திருப்பதால் நுரையீரல் விரிவடைய முடியாது.

இதன் விளைவாக ஆக்சிஜன் குறைவு, கார்பன் டையாக்சைடு அதிகரிப்பு ஏற்பட்டு இறுதியாக இதய நிறுத்தம், மரணம் ஏற்படலாம்.

B. Excited Delirium

இதன் அறிகுறிகள் மிகுந்த ஆவேசம், அதிக உடல் வெப்பம், அசாதாரண வலிமை, வலி உணராமை, குழப்பம். இந்த நிலையில் இதயம் திடீரென நின்றுவிடலாம்.

C. கழுத்து அழுத்தம்

கழுத்தில் அழுத்தம் கொடுப்பது:

  • மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கும்
  • சுவாசப்பாதையை அடைக்கும்
  • பக்கவாதம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும்

D. Hog-Tie Position

கைகள் மற்றும் கால்களை பின்னால் இணைத்து கட்டுவது. இது:

  • மார்பு விரிவைத் தடுக்கிறது
  • சுவாசத்தை குறைக்கிறது
  • மரண அபாயத்தை அதிகரிக்கிறது

E. Hyperthermia மற்றும் Metabolic Collapse

நீண்ட நேர போராட்டத்தால்:

  • உடல் வெப்பம் அதிகரிக்கும்
  • தசைகள் சிதைவடையும்
  • சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்

11. தடுப்பு மற்றும் மாற்று வழிமுறைகள்

கட்டிப்போடலைத் தவிர்ப்பதே சிறந்த நடைமுறையாகும். இதற்காக:

  • ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதல்
  • அமைதியான உரையாடல்
  • தூண்டுதல்களைக் குறைத்தல்
  • குடும்ப ஆதரவு
  • தன்னார்வ மருந்தளிப்பு
  • பயிற்சி பெற்ற பணியாளர்கள்

மிகவும் அவசியம்.

12. குடும்பத்தினரும் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியவை

உங்கள் குடும்ப உறுப்பினர் ஒரு பராமரிப்பு நிலையத்தில் இருந்தால்:

  • கட்டிப்போடல் கொள்கையை கேளுங்கள்
  • பணியாளர்கள் பயிற்சி பெற்றவர்களா என அறியுங்கள்
  • தேவையற்ற கட்டிப்போடலை சந்தேகித்தால் புகார் அளியுங்கள்

ஒவ்வொரு நோயாளிக்கும் மனித கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமை உள்ளது. கட்டிப்போடல் என்பது மருத்துவம், மனித உரிமைகள், சட்டம் மற்றும் நெறிமுறைகள் சந்திக்கும் மிக நுணுக்கமான துறையாகும். சரியான முறையில் பயன்படுத்தப்படும் போது அது உயிரைக் காப்பாற்றக்கூடியது. ஆனால் தவறாக பயன்படுத்தப்படும் போது கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

எனவே, கட்டிப்போடலின் நோக்கம் ஒருவரை அடக்குவது அல்ல; அவரையும் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே ஆகும். மனித கண்ணியம், கருணை, அறிவியல் ஆதாரம் மற்றும் சட்டப் பொறுப்பு ஆகியவை எப்போதும் இந்த நடைமுறையின் மையமாக இருக்க வேண்டும்.

முதியோர் இல்லத்தின் கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது? – உரிமைகள், பொறுப்புகள் மற்றும் மறைக்கப்பட்ட அபாயங்கள்

இலங்கை இன்று ஒரு முக்கியமான மக்கள்தொகை மாற்றத்தின் மையத்தில் நிற்கிறது. ஒருகாலத்தில் பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் புனிதக் கடமையாகக் கருதப்பட்ட சமூகத்தில், இன்று பல குடும்பங்கள் அந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு, இலங்கை வேகமாக முதியோர் அதிகரிக்கும் சமூகமாக மாறிவருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 18% பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 100 குழந்தைகளுக்கு 87 முதியவர்கள் என்ற விகிதம் உருவாகியுள்ளது. இது எதிர்காலத்தில் முதியோர் எண்ணிக்கை குழந்தைகளை விட அதிகரிக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஏன் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன?

1. மக்கள்தொகை மாற்றங்கள்

1981 ஆம் ஆண்டில் முதியோர் மக்கள் தொகை 6.6% ஆக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 18% ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒருவருக்கும் அதிகமானோர் முதியவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது.

2. குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்

முதியோர் இல்லங்களின் தேவை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகள்:

  • குழந்தைகள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக குடிபெயர்தல்.
  • கூட்டு குடும்பங்கள் குறைந்து அணுக்கக் குடும்பங்கள் அதிகரித்தல்.
  • கணவன்-மனைவி இருவரும் வேலை செய்வதால் வீட்டில் பராமரிப்பாளர் இல்லாமை.
  • பிறப்பு விகிதம் குறைவதால் பராமரிக்கக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை குறைதல்.
  • ஆயுட்காலம் அதிகரிப்பதால் நீண்டகால பராமரிப்பு தேவை உருவாகுதல்.
  • முதியோரில் பெரும்பாலோருக்கு போதுமான ஓய்வூதியம் இல்லாமை.

தற்போது இலங்கையில் சுமார் 349 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 8,000க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

முதியோர் இல்லங்கள் எங்கு பதிவு செய்யப்பட வேண்டும்?

இலங்கையில் முதியோர் இல்லங்கள் இயங்குவதற்கான சட்ட அடிப்படை முதியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் எண் 9, 2000 ஆகும். இந்தச் சட்டத்தின்படி, அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக தேசிய முதியோர் செயலகத்தில் (National Secretariat for Elders – NSE) பதிவு செய்யப்பட வேண்டும். சில மாகாணங்களில் அதற்குரிய சமூக சேவைத் திணைக்களங்களிலும் தனிப்பட்ட பதிவு பெற வேண்டியிருக்கும்.

குடும்பங்கள் கவனிக்க வேண்டியது

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் சட்டவிரோதமானவை. ஒரு முதியோர் இல்லத்தில் பெற்றோரை சேர்ப்பதற்கு முன்:

  • பதிவு சான்றிதழைக் காண்பிக்குமாறு கேட்கவும்.
  • பதிவு எண் செல்லுபடியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  • பதிவு செய்யப்படாத இல்லங்களைத் தவிர்க்கவும்.

முதியோர் இல்லங்களை யார் கண்காணிக்கின்றனர்?

முக்கியமாக தேசிய முதியோர் செயலகமே (NSE) கண்காணிப்பு பொறுப்பை வகிக்கிறது. அவர்களின் கடமைகள்:

  • மாதாந்திர ஆய்வுகள் மேற்கொள்வது.
  • குடியிருப்போரின் நலனை மதிப்பீடு செய்தல்.
  • மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை பரிசோதித்தல்.
  • புகார்களை விசாரித்தல்.

மேலும்,

  • தேசிய முதியோர் பேரவை
  • மாகாண சமூக சேவைத் திணைக்களங்கள்
  • சுகாதார அமைச்சு

ஆகிய நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவில் மேற்பார்வை செய்கின்றன.

மனநல நோயாளிகளை முதியோர் இல்லங்களில் சேர்க்கலாமா?

இது மிக முக்கியமான கேள்வியாகும். நினைவழிவு (Dementia), மனச்சோர்வு (Depression), பதட்டம் (Anxiety), மனப்பிறழ்வு (Psychosis) போன்ற மனநலப் பிரச்சினைகள் முதியவர்களிடையே காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான முதியோர் இல்லங்களில்:

  • உளவியல் நிபுணர்கள் இல்லை.
  • மனநல மருத்துவர்கள் இல்லை.
  • சிறப்பு மனநல பராமரிப்பு வசதிகள் இல்லை.

குடும்பங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்

  • மனநல மருத்துவர் வருகை தருகிறாரா?
  • நோயாளியின் நிலை மோசமடைந்தால் என்ன செய்வார்கள்?
  • அவசர பரிந்துரை முறைமை உள்ளதா?

கடுமையான மனநல நோய்களுடன் உள்ள முதியவர்கள் சிறப்பு மருத்துவ நிறுவனங்களில் சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

1. சட்ட ரீதியான பரிசோதனை

  • பதிவு சான்றிதழ் சரிபார்க்கவும்.
  • முந்தைய புகார்கள் உள்ளனவா என அறியவும்.
  • ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்கவும்.

2. சுற்றுச்சூழல் மதிப்பீடு

  • முன்னறிவிப்பு இல்லாமல் ஒரு முறை சென்று பார்வையிடவும்.
  • அறைகள் சுத்தமாக உள்ளனவா?
  • கழிப்பறைகள் பாதுகாப்பானவையா?
  • தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா?

3. மருத்துவ வசதிகள்

  • தாதியர்கள் உள்ளனரா?
  • மருத்துவர் வருகை தருகிறாரா?
  • அவசர சிகிச்சை ஏற்பாடுகள் உள்ளனவா?

4. சமூக மற்றும் உணர்ச்சி நலம்

  • குடும்ப உறுப்பினர்கள் சுதந்திரமாக சந்திக்க முடியுமா?
  • மத மற்றும் கலாசார நடவடிக்கைகள் உள்ளனவா?
  • முதியவர்கள் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறார்களா?

அலட்சியம், புண்கள் மற்றும் சட்ட நடவடிக்கை

முதியோர் இல்லம் ஒரு முதியவரை ஏற்றுக்கொள்ளும் போது, அவரின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் சட்டபூர்வமான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.

1. படுக்கைப் புண்கள் (Bed Sores)

படுக்கையில் நீண்ட நேரம் அசையாமல் இருப்பவர்களுக்கு உருவாகும் அழுத்தப் புண்கள் பெரும்பாலும் அலட்சியத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. சரியான பராமரிப்பு இருந்தால்:

  • உடல் நிலையை மாற்றுதல்
  • தோல் பராமரிப்பு
  • போதிய ஊட்டச்சத்து

மூலம் பெரும்பாலான படுக்கைப் புண்களைத் தடுக்க முடியும். கடுமையான படுக்கைப் புண்கள் இருப்பது கவனக்குறைவு அல்லது பராமரிப்பு தவறின் சான்றாக அமையலாம்.

2. பிற அலட்சியங்கள்

  • ஊட்டச்சத்து குறைபாடு
  • நீரிழப்பு
  • தவறான மருந்தளிப்பு
  • விழுந்து காயமடைவது
  • உடல் மற்றும் மன உளைச்சல்
  • நிதி மோசடி
  • அசுத்தமான சூழல்

புகார் செய்வது எப்படி?

அலட்சியம் அல்லது துஷ்பிரயோகம் சந்தேகிக்கப்பட்டால்:

  1. புகைப்படங்கள் எடுக்கவும்.
  2. மருத்துவ ஆவணங்களை சேகரிக்கவும்.
  3. தேசிய முதியோர் செயலகத்தில் புகார் செய்யவும்.
  4. குற்றச்செயல் இருந்தால் காவல்துறையில் முறைப்பாடு செய்யவும்.
  5. சட்ட ஆலோசகரை அணுகவும்.
  6. தேவையெனில் சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியைப் பெறவும்.

முதியோரின் அடிப்படை உரிமைகள்

ஒவ்வொரு முதியவருக்கும்:

  • மரியாதையுடன் நடத்தப்பட உரிமை உண்டு.
  • பாதுகாப்பான சூழலில் வாழ உரிமை உண்டு.
  • போதிய உணவு மற்றும் மருத்துவ சேவை பெற உரிமை உண்டு.
  • குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க உரிமை உண்டு.
  • மத சுதந்திரம் அனுபவிக்க உரிமை உண்டு.
  • தனியுரிமை பெற உரிமை உண்டு.
  • துஷ்பிரயோகம் இல்லாமல் வாழ உரிமை உண்டு.
  • தமது பராமரிப்பு குறித்து முடிவெடுக்க உரிமை உண்டு.
  • புகார் செய்ய உரிமை உண்டு.

சீர்திருத்தங்கள் ஏன் அவசியம்?

இலங்கையின் முதியோர் பராமரிப்பு அமைப்பில் பல குறைபாடுகள் உள்ளன:

  • பராமரிப்பு தரத்தை ஒழுங்குபடுத்தும் விரிவான சட்டங்கள் இல்லை.
  • மனநல முதியோர் பராமரிப்பு கட்டமைப்பு இல்லை.
  • கண்காணிப்பு வளங்கள் போதுமானவை அல்ல.
  • பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
  • வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு சேவைகள் போதுமான அளவில் இல்லை.

இலங்கையின் முதியவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள். அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை மரியாதை, பாதுகாப்பு மற்றும் அன்புடன் அமைய வேண்டும். முதியோர் இல்லங்கள் தேவையானவை. ஆனால் அவை பாதுகாப்பானதாகவும், பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் இயங்க வேண்டும். பெற்றோரை ஒரு இல்லத்தில் சேர்ப்பது என்பது ஒரு நிர்வாக முடிவு மட்டுமல்ல; அது ஒரு நெறிமுறை மற்றும் மனிதாபிமான பொறுப்பாகும்.

ஒரு நாகரிகமான சமூகத்தின் தரத்தை அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் அது காட்டும் அக்கறை தீர்மானிக்கிறது. அந்த அளவுகோலில், நமது முதியவர்கள் சிறந்த பராமரிப்பையும், மரியாதையையும், கண்ணியமான வாழ்க்கையையும் பெற தகுதியானவர்கள்.

இலங்கையின் அண்மைய தீவிபத்துகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

பேரிடர்கள் மனித சமுதாயத்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளன. இயற்கை அனர்த்தங்கள், தொழில்துறை விபத்துகள், தொற்றுநோய் பரவல்கள், வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் உலகின் அனைத்து நாடுகளையும் காலம் காலமாக பாதித்துள்ளன. இவற்றில் தீ விபத்துகள் தனித்துவமானவை. ஏனெனில் ஒரு சிறிய மின்கசிவு, கவனக்குறைவாக கையாளப்பட்ட எரிவாயு சிலிண்டர், பராமரிப்பின்றி இயங்கும் மின்சாதனம் அல்லது ஒரு மனித தவறு சில நிமிடங்களில் பாரிய உயிரிழப்புகளையும் சொத்து சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இரண்டு முக்கிய தீ விபத்துகள் நாட்டின் பேரிடர் ஆயத்தநிலை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து பல கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழித்தது. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருத்துவ வளங்கள் இழக்கப்பட்டன. இந்த சம்பவம் ஒரு கட்டிட சேதம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சைத் தொடர்ச்சியையும் பாதிக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஹொரணை பகுதியில் அமைந்திருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து 12 உயிரிழப்புகளையும் பல காயங்களையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள இயலாத மக்களுக்கான நிறுவனங்களில் அவசரகால திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரு அடிப்படை உண்மையை நினைவூட்டுகின்றன. தீ விபத்தை முழுமையாகத் தடுக்க முடியாத சூழல்கள் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளை குறைப்பது மனிதர்களின் கைகளிலேயே உள்ளது. உலகளாவிய ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், பல தீ விபத்துகளில் உயிரிழப்புகளும் கடுமையான காயங்களும் தீயினால் நேரடியாக ஏற்படுவதில்லை. மாறாக, தாமதமான கண்டறிதல், ஒழுங்கற்ற வெளியேற்றம், பணியாளர்களின் பயிற்சியின்மை, செயலற்ற எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பலவீனமான அவசரகால திட்டமிடலே அதிக சேதத்திற்கு காரணமாகின்றன.

எனவே பேரிடர் ஆயத்தநிலை என்பது ஒரு நிர்வாக ஆவணம் மட்டுமல்ல. அது உயிர்களைப் பாதுகாக்கும் ஒரு முதலீடு. ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பு, அங்கு வாழ்பவர்களின் பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சி மற்றும் சமூகத்தின் நம்பிக்கை ஆகிய அனைத்தும் பேரிடர் ஆயத்தநிலையுடன் நேரடியாக தொடர்புடையவை.

பேரிடர் ஆயத்தநிலை என்றால் என்ன?

பேரிடர் ஆயத்தநிலை (Disaster Preparedness) என்பது ஒரு பேரிடர் நிகழ்வதற்கு முன்பாக அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டமிடல், பயிற்சி, வள ஒதுக்கீடு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.

பேரிடர் நிகழ்ந்த பிறகு எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் குறித்த திட்டமிடல் மட்டுமல்லாது, பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே அபாயங்களை அடையாளம் கண்டு அவற்றை குறைப்பதற்கான முயற்சிகளும் இதில் அடங்குகின்றன. அதாவது பேரிடர் ஆயத்தநிலை என்பது “நிகழ்வுக்குப் பிறகு என்ன செய்வது?” என்ற கேள்விக்கான பதில் மட்டுமல்ல; “நிகழ்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கும் பதிலாகும்.

ஒரு சிறந்த பேரிடர் ஆயத்தநிலைத் திட்டம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

  • அபாயங்களை அடையாளம் காணுதல்
  • பாதிப்பு மதிப்பீடு செய்தல்
  • அவசரகால பதிலளிப்பு நடைமுறைகள் உருவாக்குதல்
  • வளங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருத்தல்
  • பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குதல்
  • அவசர ஒத்திகைகளை மேற்கொள்ளுதல்
  • தகவல் தொடர்பு அமைப்புகளை பராமரித்தல்
  • மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குதல்

பல நிறுவனங்கள் பேரிடர் ஆயத்தநிலையை ஒரு ஆவணமாகவே கருதுகின்றன. ஆனால் ஒரு அலமாரிக்குள் பூட்டிவைக்கப்பட்ட திட்டம் எந்த உயிரையும் காப்பாற்றாது. செயல்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வரும் திட்டங்களே பேரிடர் நேரத்தில் பயனளிக்கும்.

பேரிடர் ஆயத்தநிலை அபாய மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்

பேரிடர் முகாமைத்துவத்தில் மிகவும் முக்கியமான கொள்கைகளில் ஒன்று “ஒரே திட்டம் அனைவருக்கும் பொருந்தாது” என்பதாகும். ஒவ்வொரு கட்டிடமும் அதன் இருப்பிடம், பயன்பாடு, கட்டுமான அமைப்பு மற்றும் அங்கு வசிக்கும் அல்லது பணிபுரியும் மக்களின் தன்மைகளைப் பொறுத்து வெவ்வேறு அபாயங்களை எதிர்கொள்கிறது.

எடுத்துக்காட்டாக, கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்று சுனாமி, கடலோர வெள்ளம் மற்றும் புயல் அபாயங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். அதே நேரத்தில் நகர மையத்தில் அமைந்துள்ள பல்மாடிக் கட்டிடம் தீ விபத்து, மின்சார கோளாறு அல்லது பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடும்.

எனவே ஒவ்வொரு நிறுவனமும் முதலில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் காண வேண்டும்:

  • எங்களை அதிகம் பாதிக்கக்கூடிய பேரிடர் எது?
  • அந்த பேரிடர் ஏற்பட்டால் யார் அதிக ஆபத்தில் இருப்பார்கள்?
  • எமது பலவீனங்கள் என்ன?
  • எமது வளங்கள் போதுமானவையா?
  • அவசரநிலையில் எவ்வாறு வெளியேற்றம் மேற்கொள்ளப்படும்?

இந்த மதிப்பீட்டை பேரிடர் முகாமைத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிறுவன நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும். சரியான அபாய மதிப்பீடு இல்லாத பேரிடர் திட்டம், வரைபடமில்லாத பயணத்தைப் போன்றதாகும்.

எடுத்துக்காட்டுகள்

ஒரு கட்டிடத்தின் செயல்பாடுகள் மற்றும் இருப்பிடம் அதன் பேரிடர் அபாயங்களை தீர்மானிக்கின்றன.

கடலோர வைத்தியசாலை

கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சுனாமி, கடலோர வெள்ளம், புயல், கடுமையான காற்றழுத்தம் மற்றும் மின்சார விநியோகத் தடங்கல் போன்ற பல்வேறு இயற்கை மற்றும் சூழலியல் அபாயங்களுக்கு முகங்கொடுக்கக்கூடும். எனவே, அவசர நிலைகளில் நோயாளிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கான முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் தடையற்ற சுகாதார சேவையை உறுதிசெய்ய மாற்று மின்சார வசதிகள் தயாராக இருப்பது மிகவும் அவசியமாகும்.

முதியோர் பராமரிப்பு இல்லங்கள்

முதியோர் இல்லங்களில் தீ விபத்துகள், வெப்ப அலைகள் மற்றும் தொற்றுநோய் பரவல்கள் போன்றவை முக்கிய அபாயங்களாகக் காணப்படுகின்றன. இங்கு தங்கியிருப்போர் பலர் வயது முதிர்வு, உடல் பலவீனம் அல்லது நோய்நிலைகள் காரணமாகத் தாங்களாகவே விரைவாக நகர முடியாதவர்களாக இருப்பதால், அவசர நிலைகளில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான சிறப்பு நடைமுறைகள், போதுமான பணியாளர் ஆதரவு மற்றும் முன்கூட்டிய அவசரத் தயார்நிலைத் திட்டங்கள் அவசியமாகின்றன.

மருந்துக் களஞ்சியசாலைகள்

தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் சேமிப்பு நிலையங்கள் போன்ற இடங்களில் மின்கசிவு, தீ விபத்து மற்றும் இரசாயன எதிர்வினைகள் பாரிய சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, அபாயங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக தானியங்கி தீ கண்டறிதல் அமைப்புகள், தீ அணைப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டாயமாக நிறுவப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

பணியாளர் பயிற்சியின் முக்கியத்துவம்

பேரிடர் முகாமைத்துவத்தில் அதிகம் பேசப்படாதாலும் மிகவும் முக்கியமான கூறு பணியாளர் பயிற்சியாகும். நவீன தீ எச்சரிக்கை அமைப்புகள், விலையுயர்ந்த தீ அணைப்பு உபகரணங்கள், அவசர வெளியேற்ற வரைபடங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ திட்டங்கள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தத் தெரியாத பணியாளர்கள் இருந்தால் அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும். பல பேரிடர் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், அவசரநிலையின் முதல் சில நிமிடங்களிலேயே எடுக்கப்படும் முடிவுகளே உயிரிழப்புகளின் அளவை தீர்மானிக்கின்றன. தீ விபத்து ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பெரும்பாலான தீ விபத்துகள் கட்டுப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பான வெளியேற்றம் மேற்கொள்ளப்படவோ முடியும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாளர்கள் பின்வரும் விடயங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்:

  • தீ விபத்திற்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணுதல்.
  • தீ எச்சரிக்கை அலாரத்தை இயக்குதல்.
  • அவசர சேவைகளை தொடர்புகொள்ளுதல்.
  • ஆரம்ப கட்ட தீ அணைப்பு நடவடிக்கைகள்.
  • பாதுகாப்பான வெளியேற்ற நடைமுறைகள்.
  • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல்.
  • முதலுதவி வழங்குதல்.
  • முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல்.

பயிற்சி என்பது வகுப்பறையில் வழங்கப்படும் சொற்பொழிவு மட்டுமல்ல. நடைமுறை ஒத்திகைகள், உருவகப்படுத்தப்பட்ட அவசரநிலை பயிற்சிகள் (simulation exercises), மற்றும் மேசைப் பயிற்சிகள் (table-top exercises) ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

பணியாளர்களின் இடமாற்றம், புதிய நியமனங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படும் போது பயிற்சிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் பயிற்சிகள் போதுமானவை அல்ல. அதிக அபாயம் கொண்ட நிறுவனங்களில் காலாண்டு அடிப்படையில் பயிற்சிகள் நடத்தப்படுவது சிறந்த நடைமுறையாக கருதப்படுகிறது.

தீ விபத்து பேரிடர் ஆயத்தநிலையின் முக்கிய கூறுகள்

1. தீ அபாய மதிப்பீடு

தீ விபத்து ஏற்படக்கூடிய காரணிகளை முறையாக அடையாளம் காண்பதே தீ அபாய மதிப்பீட்டின் நோக்கமாகும்.

பல தீ விபத்துகள் எதிர்பாராதவையாக தோன்றினாலும், பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அவற்றில் பெரும்பாலானவை முன்னரே கண்டறியக்கூடிய அபாயங்களுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துகின்றன.

தீ அபாய மதிப்பீட்டில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • பழுதடைந்த மின்சார அமைப்புகள்
  • அதிக சுமையுடன் இயங்கும் மின்சுற்றுகள்
  • தவறான வயரிங்
  • எரிவாயு கசிவுகள்
  • எரியக்கூடிய இரசாயனங்கள்
  • காகித ஆவண களஞ்சியங்கள்
  • மருந்து மற்றும் இரசாயன சேமிப்பகங்கள்
  • சமையலறை வசதிகள்
  • குளிரூட்டும் மற்றும் மின் உற்பத்தி அமைப்புகள்

அபாயங்கள் கண்டறியப்பட்ட பின்னர் அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அபாயத்தை அறிந்தும் நடவடிக்கை எடுக்காதது நிர்வாகப் பொறுப்பின்மையாக கருதப்படலாம்.

2. முன்கூட்டிய கண்டறிதல் அமைப்புகள்

தீ விபத்து நேரத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான கருவி முன்கூட்டிய கண்டறிதல் ஆகும். தீ பரவுவதற்கு முன்பே அதை அடையாளம் காண்பது வெளியேற்றத்திற்கான நேரத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அல்லது குறைந்த பணியாளர்கள் உள்ள சூழல்களில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு கட்டிடத்திலும் பின்வரும் அமைப்புகள் பரிசீலிக்கப்பட வேண்டும்:

  • புகை உணரிகள்
  • வெப்ப உணரிகள்
  • தீ எச்சரிக்கை அலாரங்கள்
  • தானியங்கி எச்சரிக்கை அமைப்புகள்
  • மைய கண்காணிப்பு வசதிகள்

இவை நிறுவப்பட்டிருப்பது மட்டும் போதாது. அவை முறையாக பராமரிக்கப்பட்டு சோதிக்கப்பட வேண்டும். செயலிழந்த எச்சரிக்கை அமைப்பு இல்லாத அமைப்பிற்கு சமமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

3. தீ அணைப்பு உபகரணங்கள்

தீ விபத்தின் ஆரம்ப கட்டத்தில் சிறிய தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான உபகரணங்கள் அவசியம்.

அவற்றில்:

  • கைமுறை தீ அணைப்பான்கள்
  • தீ அணைப்பு குழாய்கள்
  • தானியங்கி ஸ்பிரிங்களர் அமைப்புகள்
  • தீ போர்வைகள்
  • அவசர நீர் விநியோக அமைப்புகள்

என்பன அடங்கும்.

ஆனால் உபகரணங்கள் இருந்தாலே போதாது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பணியாளர்களுக்குத் தெரிய வேண்டும். உலகளாவிய ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், ஆரம்ப கட்டத்தில் சரியான முறையில் பயன்படுத்தப்படும் ஒரு தீ அணைப்பான், பல சந்தர்ப்பங்களில் கோடிக்கணக்கான சொத்து சேதங்களையும் பல உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியதாக இருக்கிறது.

4. பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள்

பல தீ விபத்துகளில் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணம் தீ அல்ல; வெளியேற முடியாமையே ஆகும். வெளியேற்ற பாதைகள்:

  • தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • எப்போதும் திறந்திருக்க வேண்டும்.
  • தடைகளற்றதாக இருக்க வேண்டும்.
  • போதுமான அகலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அவசர விளக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சில நிறுவனங்களில் அவசர வெளியேற்ற வாயில்கள் பூட்டப்பட்டிருப்பதும், பொருட்கள் குவிக்கப்பட்டிருப்பதும், வழிகாட்டி பலகைகள் இல்லாமலும் காணப்படுகின்றன. பேரிடர் நேரத்தில் இத்தகைய குறைபாடுகள் உயிரிழப்புகளுக்கான நேரடி காரணமாக மாறலாம்.

5. எழுத்துப்பூர்வ அவசரகால திட்டம்

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எழுத்துப்பூர்வமாக தயாரிக்கப்பட்ட அவசரகால திட்டம் இருக்க வேண்டும். அதில்:

  • தீ கண்டறியப்பட்டால் யார் என்ன செய்ய வேண்டும்?
  • யார் அவசர சேவைகளை அழைப்பார்கள்?
  • யார் வெளியேற்றத்தை ஒருங்கிணைப்பார்கள்?
  • யார் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவுவார்கள்?
  • கூடும் இடம் எது?
  • பொறுப்பேற்கும் அதிகாரிகள் யார்?

என்பன தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். அவசரநிலையில் குழப்பம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே பொறுப்புகள் ஒதுக்கப்பட வேண்டும்.

6. ஒழுங்கான ஒத்திகைகள்

ஒரு திட்டம் செயல்படுமா இல்லையா என்பதை அறிய ஒரே வழி அதனை சோதிப்பதே ஆகும். தீ ஒத்திகைகள்:

  • பதிலளிப்பு நேரத்தை அளவிடுகின்றன.
  • பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன.
  • பணியாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கின்றன.
  • பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கின்றன.

ஒத்திகைகள் அறிவிக்கப்பட்டதும் அறிவிக்கப்படாததுமான இரு வடிவங்களிலும் நடத்தப்பட வேண்டும். ஒரு நிறுவனம் தீ ஒத்திகையை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை என்றால், அது பேரிடர் நேரத்தில் முதல் முறையாக தனது திட்டத்தை சோதிப்பதற்கு சமமானதாகும்.

7. பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பு

அனைத்து நபர்களும் அவசரநிலைகளில் சமமான திறனுடன் செயல்பட முடியாது. பின்வரும் குழுக்கள் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகின்றனர்:

  • முதியவர்கள்
  • குழந்தைகள்
  • நோயாளிகள்
  • கர்ப்பிணிப் பெண்கள்
  • மாற்றுத்திறனாளிகள்

இவர்களுக்கான வெளியேற்றத் திட்டங்கள் தனித்தனியாக உருவாக்கப்பட வேண்டும். ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான விசேட திட்டங்கள் இல்லாதபோது ஏற்படக்கூடிய அபாயத்தை நினைவூட்டுகிறது.

8. முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு

சில கட்டிடங்கள் வெறும் கட்டிடங்களாக மட்டுமல்ல; அவை சமூகத்தின் அத்தியாவசிய சேவைகளின் மையங்களாகும். உதாரணமாக:

  • வைத்தியசாலைகள்
  • மருந்துக் களஞ்சியசாலைகள்
  • தரவு மையங்கள்
  • மின்நிலையங்கள்
  • நீர் வழங்கல் நிலையங்கள்

இவை சேதமடைந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனவே இத்தகைய இடங்களில்:

  • தீ எதிர்ப்பு கட்டுமானங்கள்
  • தானியங்கி தீ கட்டுப்பாட்டு அமைப்புகள்
  • மாற்று மின்சார வசதிகள்
  • தரவு காப்பு அமைப்புகள்

கட்டாயமாக இருக்க வேண்டும்.

9. அவசர தகவல் தொடர்பு

பேரிடர் நேரத்தில் தகவல் தொடர்பு தோல்வியடையும் போது குழப்பம் அதிகரிக்கிறது. சரியான தகவல் தொடர்பு:

  • விரைவான பதிலளிப்பை உறுதி செய்கிறது.
  • வதந்திகளைத் தடுக்கிறது.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் வழங்குகிறது.
  • ஊடகங்களுடன் தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது.

எனவே நிறுவனங்கள் அவசர தொடர்பு பட்டியல்களையும் மாற்று தகவல் தொடர்பு முறைகளையும் பராமரிக்க வேண்டும்.

10. ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் கற்றுக்கொள்வது

ஒவ்வொரு தீ விபத்தும் ஒரு பாடமாகும். சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம்:

  • என்ன தவறு நடந்தது?
  • என்ன சரியாக செயல்பட்டது?
  • என்ன மேம்படுத்தப்பட வேண்டும்?

என்பன கண்டறியப்பட வேண்டும்.

பேரிடர்களிலிருந்து கற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் அதே தவறுகளை மீண்டும் செய்யும் அபாயத்தில் உள்ளன.

ஆயத்தநிலை கலாசாரத்தை உருவாக்குதல்

பேரிடர் ஆயத்தநிலை ஒரு திட்டமாக அல்ல, ஒரு கலாசாரமாக மாற வேண்டும். பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அதிகாரியின் பொறுப்பு மட்டுமல்ல. அது நிர்வாகம், பணியாளர்கள், குடியிருப்போர், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரின் பொறுப்பாகும். ஒரு பாதுகாப்பு கலாசாரம் உருவாகும் போது:

  • அபாயங்கள் விரைவாக அறிக்கையிடப்படுகின்றன.
  • குறைபாடுகள் உடனடியாக திருத்தப்படுகின்றன.
  • ஒத்திகைகள் வழக்கமானதாக மாறுகின்றன.
  • பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உயர்கிறது.

இதுவே பேரிடர்களின் தாக்கத்தை குறைப்பதற்கான நீண்டகால வழிமுறையாகும்.

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலை தீ விபத்தும், ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தும், பேரிடர் ஆயத்தநிலையின் அவசியத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இச்சம்பவங்கள் வெறும் தனிப்பட்ட விபத்துகள் அல்ல; நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை மணியாகும்.

பேரிடர் ஆயத்தநிலை என்பது ஒரு செலவல்ல; அது உயிர்களையும் அத்தியாவசிய சேவைகளையும் பாதுகாக்கும் முதலீடாகும். சரியான அபாய மதிப்பீடு, பயிற்சி பெற்ற பணியாளர்கள், செயற்படும் எச்சரிக்கை அமைப்புகள், ஒழுங்கான ஒத்திகைகள் மற்றும் வலுவான தலைமைத்துவம் ஆகியவை இணைந்தாலே ஒரு நிறுவனம் உண்மையான பாதுகாப்பை அடைய முடியும்.

தீ விபத்து எப்போது நிகழும் என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் அது நிகழும்போது நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதே உயிர்களையும் சொத்துகளையும் காப்பாற்றும் முக்கிய காரணியாகும்.

.

எனது தற்போதைய வேலைத்தளத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொழில் சரிபார்க்கப்பட்ட தண்ணீர் பீச்சும் குழாய் அமைப்பு

ஒற்றைப்பெற்றோரின் இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் சிறுவர் துஷ்பிரயோக அபாயம்

2026 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காட்டில் இடம்பெற்ற 18 மாத குழந்தை அர்ஷித் (Arshid/Arshith) மரணச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. தனது உயிரியல் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சிலகாலம் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்த இந்தக் குழந்தை, பின்னர் தாயாரான அகிலாவுடன் மற்றும் அவரது புதிய இணை வாழ்வாளர் அஷ்கருடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2026 மே 29 அன்று குழந்தை திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண மருத்துவ அவசரநிலையாகவே கருதப்பட்டது. குழந்தை உணவு மற்றும் தண்ணீர் உட்கொண்ட பின்னர் இருமல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிட்டதாக பராமரிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில் குழந்தையின் உடலில் பல்வேறு காலங்களில் ஏற்பட்டிருந்த ஏராளமான காயங்கள், பழைய எலும்பு முறிவுகள் மற்றும் கடுமையான உடல் வன்முறைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. விசாரணை இன்னும் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் மறுமணம் அல்லது புதிய இணை வாழ்விற்குப் பின்னர் சில குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்கள், குழந்தை பாதுகாப்பு தோல்விகள் மற்றும் சமூக தலையீட்டின் அவசியம் குறித்து தீவிரமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில், குறிப்பாக உயிரியல் பெற்றோரில் ஒருவரின் இரண்டாவது திருமணம் அல்லது புதிய இணை வாழ்விற்குப் பின்னர் சில குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. இந்த கட்டுரை, அந்த அபாயங்களை உளவியல் மற்றும் சமூகவியல் கோணங்களில் ஆராய்கிறது.

குடும்ப அமைப்பு காரணமா?

முதலில் ஒரு முக்கியமான உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். ஒற்றைத் தாய் அல்லது ஒற்றைத் தந்தை குடும்பம் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு காரணமல்ல. அதேபோல் இரண்டாவது திருமணமும் இயல்பாக ஆபத்தானதல்ல. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான ஒற்றைப் பெற்றோர்களும், மறுமணம் செய்த குடும்பங்களும் குழந்தைகளை அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்த்து வருகின்றனர். ஆனால் குடும்ப அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய சூழல்களை உருவாக்கலாம்.

உளவியல் நோக்கில் பகுப்பாய்வு

1. உயிரியல் உறவு இல்லாமை மற்றும் உணர்ச்சி பிணைப்பு

உளவியல் ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், குழந்தையுடன் உயிரியல் உறவு இல்லாத சில பராமரிப்பாளர்களுக்கு குழந்தையுடன் ஆழமான உணர்ச்சி பிணைப்பு உருவாக அதிக காலம் தேவைப்படலாம். இதனால் சிலர்:

  • குழந்தையை தங்களுடைய பொறுப்பாக உணராமல் இருக்கலாம்.
  • குழந்தையின் தேவைகளுக்கு குறைந்த பொறுமை காட்டலாம்.
  • குழந்தையை உறவிற்கான தடையாகக் காணலாம்.

இந்த நிலை எல்லா மாற்றாந் தந்தையரிடமும் அல்லது மாற்றாந் தாய்மாரிடமும் காணப்படாது. இருப்பினும் கடுமையான குழந்தை துஷ்பிரயோக வழக்குகளில் இது ஒரு பொதுவான பின்னணியாக காணப்படுகிறது. ஜான் போல்பி (John Bowlby) முன்வைத்த Attachment Theory படி, குழந்தைக்கும் பராமரிப்பாளருக்கும் இடையிலான பாதுகாப்பான உணர்ச்சி பிணைப்பு குழந்தையின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகும்.

உயிரியல் உறவு இல்லாத புதிய பராமரிப்பாளர்:

  • குழந்தையுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கத் தவறலாம்.
  • குழந்தையின் உணர்ச்சி தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
  • குழந்தையை உறவுக்கான தடையாகக் கருதலாம்.

2. பொறாமை மற்றும் போட்டி உணர்வு

சில சந்தர்ப்பங்களில் புதிய துணை, குழந்தை மற்றும் உயிரியல் பெற்றோருக்கிடையேயான உறவை போட்டியாக உணரலாம். இதனால்:

  • குழந்தை அதிக கவனம் பெறுகிறது என்ற எண்ணம்,
  • உறவின் மீது குழந்தை செல்வாக்கு செலுத்துகிறது என்ற நம்பிக்கை,
  • குழந்தையை விலக்க வேண்டும் என்ற மனநிலை

உருவாகலாம். இந்த உளவியல் செயல்முறை சிலரிடம் கோபம் மற்றும் வன்முறையாக மாறக்கூடும்.

3. விரக்தி ஆக்கிரமிப்பு கோட்பாடு

பொருளாதார சிரமம், வேலை இழப்பு, குடும்ப முரண்பாடு, போதைப்பொருள் பயன்பாடு அல்லது மனநலப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் உருவாகும் விரக்தி, பலவீனமான மற்றும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத குழந்தைகள்மீது வெளிப்படலாம். சிறுவர்கள் தங்களை பாதுகாக்க இயலாததால் அதிக ஆபத்தில் உள்ளனர்.

4. சமூக கற்றல் கோட்பாடு

Albert Bandura முன்வைத்த Social Learning Theory படி, மனிதர்கள் சமூக சூழலில் காணும் நடத்தைகளை கற்றுக்கொள்கின்றனர். சிறுவயதில் தாமும்:

  • அடிபட்டவர்கள்,
  • புறக்கணிக்கப்பட்டவர்கள்,
  • குடும்ப வன்முறையை பார்த்தவர்கள்

பின்னர் அதே நடத்தையை பின்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். வன்முறை சிலருக்கு ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் சாதாரண முறையாகக் கற்றுக்கொள்ளப்படலாம்.

தாயின் பாதுகாப்பு தோல்வியைப் புரிந்துகொள்வது

இவ்வகை வழக்குகளில் பொதுவாக எழும் கேள்வி “தாய் ஏன் குழந்தையை காப்பாற்றவில்லை?” என்பது ஆகும். இதற்கு பல உளவியல் காரணிகள் இருக்கலாம்.

உணர்ச்சி சார்பு

தனிமை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக புதிய துணையின் மீது அதிக உணர்ச்சி சார்பு உருவாகலாம்.

பொருளாதார சார்பு

விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெற்றோர், பொருளாதார ஆதரவிற்காக புதிய துணையை நம்பியிருக்கலாம்.

கட்டுப்படுத்தும் உறவுகள்

சில குடும்பங்களில் புதிய துணை:

  • மிரட்டல்,
  • தனிமைப்படுத்தல்,
  • மனஅழுத்த கட்டுப்பாடு

மூலம் குடும்பத்தின் மீது ஆதிக்கம் செலுத்தலாம்.

மறுப்பு மற்றும் நியாயப்படுத்தல்

“என் துணை இப்படிச் செய்ய மாட்டார்” என்ற நம்பிக்கை, உண்மையான அபாயங்களை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கும்.

இலங்கைக்கான பாடங்கள்

அர்ஷித் வழக்கு இலங்கைக்கும் முக்கியமான எச்சரிக்கையாகும். குறிப்பாக

  • பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் அதிகமாக உள்ள பகுதிகள்,
  • பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,
  • குடும்ப வன்முறை வரலாறு கொண்ட குடும்பங்கள்

சிறப்பு கவனிப்புக்குரியவையாகும்.

பின்வரும் எச்சரிக்கை அறிகுறிகள் ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது

✓ மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்கள்.

✓ விளக்கமளிக்க முடியாத எலும்பு முறிவுகள்.

✓ தீக்காயங்கள்.

✓ குழந்தையின் நடத்தையில் திடீர் மாற்றங்கள்.

✓ உறவினர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள்.

✓ மருத்துவ வரலாற்றுடன் பொருந்தாத விளக்கங்கள் மற்றும் காயங்கள்.

தடுப்பு நடவடிக்கைகள்

குடும்ப மட்டத்தில்

  • புதிய துணையை குழந்தையின் வாழ்க்கையில் அறிமுகப்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • குழந்தையை உறவினர்களிடமிருந்து தனிமைப்படுத்தக்கூடாது.
  • குழந்தையின் காயங்களை அலட்சியப்படுத்தக்கூடாது.

சமூக மட்டத்தில்

  • குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரித்தல்.
  • அயலவர் மற்றும் சமூக கண்காணிப்பை ஊக்குவித்தல்.
  • ஒற்றைப் பெற்றோருக்கான ஆதரவு வலையமைப்புகளை உருவாக்குதல்.

சுகாதார மற்றும் சட்ட மட்டத்தில்

  • சந்தேகத்திற்கிடமான காயங்கள் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டும்.
  • மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை அதிகாரிகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.

அர்ஷித் வழக்கு ஒரு தனிநபரின் கொடூரச் செயலை மட்டும் பிரதிபலிப்பதில்லை. மாறாக, குடும்ப மாற்றங்கள், சமூக தனிமை, பொருளாதார அழுத்தம், மனநலப் பிரச்சினைகள், மற்றும் தவறவிடப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகள் ஆகியவை ஒன்றிணையும் போது ஒரு குழந்தை எவ்வளவு பாதிப்புக்குள்ளாக முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

குழந்தை துஷ்பிரயோக மரணங்களில் இறுதி தாக்குதல் தான் மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இறுதி தாக்குதலுக்கு முன் பல எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியிருக்கும். அவற்றை அடையாளம் கண்டு தகுந்த நேரத்தில் தலையிடுவதே குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் மிக முக்கியமான வழியாகும்.