யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா? ஓர் மருத்துவரீதியான அலசல்

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால்  யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில்  கடந்த  வெள்ளிக்கிழமை(08/06/2018)இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை (06/06/2018) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

viber image

பின்வரும் காரணங்களினால் குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நம்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட  நிலையில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

  1. 08/06/2018 நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன.
  2. உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.
  3. குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமை.
  4. குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமை.
  5. குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.
  6. குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமை.

விஞ்ஞான ரீதியில் ஓர் மனிதனின் இறப்பானது  பின்வருமாறு வரையறுக்கப்படும்  மனிதனின் மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின்  நிரந்தர  தொழில்பாட்டு  நிறுத்தமாகும்.

சாதாரணமாக மனிதன் இறந்து 18 மணித்தியாலங்களின் பின்பு உடலானது அழுக தொடங்கும். அழுகலானது முதலில் வயிறு பகுதியில் இருந்துதான் தொடங்கும், ஏன் எனில் குடலில்  இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் பாக்டீரியா நுண்ணங்கி செயற்பாட்டினால் ஆகும். இதன் காரணமாக வயிற்றில் அதிகளவு வாயுக்கள் தேங்கும் இதன் காரணமாக வயிற்றில் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் உள்ள மலம், சிறுநீர் மற்றும் கருப்பையில் உள்ள இறந்த குழந்தை என்பன வெளியேற்றப்படும்.

postmortem deliveryசில சமயங்களில் வயிற்று தசை வெடித்து உள்ளிருக்கும் குடல் போன்றன   வெளியேற்றப்படும் (இவ்வெடிப்பு சில சமயங்களில் வெட்டு காயம் போன்றும் தோன்றலாம், அனுபவம் மிகுந்த சட்ட வைத்தியர்கள் இவற்றினை இலகுவாக வேறுபடுத்துவர்) இதற்காக மனிதன் உயிருடன் உள்ளார் என்று அர்த்தமில்லை. இவ்வாறே மார்பு கூட்டிலும் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் நாக்கு வெளித்தள்ளும், மூக்கு மற்றும் வாயில் இருந்து சளி மற்றும் இரத்தம் வெளியேறும். இச் செயற்பாடுகள் ஒருவர் இறந்து சராசரியாக 2 தொடக்கம் 3 நாட்களில் நடைபெறும். சிலவேளைகளில் முன்பதாகவும் நடைபெறலாம்.

இறந்த உடலை மூடி (துணியால் அல்லது பிரேத பெட்டியால்) வைக்கும் பொழுது,  இறந்த உடலில் இருந்து ஆவியாகும் நீர்   அணிந்திருக்கும் ஆடையில் பட்டு ஒடுங்கி உடலில் வியர்வை மாதிரி படிந்திருக்கும்.

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 8 மணித்தியாலங்களில் உடல் வெப்பநிலையானது குறைவடைந்து சூழல் வெப்பநிலையினை அடையும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது குளிரும்)  18 மணித்தியாலங்களின் பின்பு உடல் அழுக தொடங்கியவுடன் உடல் வெப்பநிலையானது அதிகரிக்கும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது சுடும்) .

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 2  மணித்தியாலங்கள் வரை கை மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும் (Primary Flaccidity) பின்பு 2 தொடக்கம் 12 மணித்தியாலங்களில்  படிப்படியாக   விறைத்தநிலைக்கு வரும். இதற்கு தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களே காரணம் (Rigor mortis).  இதன் பொது கை மற்றும் கால் எனவற்றினை அசைக்க கடினமாக இருக்கும்.  இதன் பின்னர் இவ்விறைப்பு  படிப்படியாக குறைவடைந்து முற்றாக நீங்கும் (secondary flaccidity) இதன் பொது மீண்டும் காய் மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும். இவ்வாறு விறைப்பு தன்மையும் தளர்வு தன்மையும் மாறிமாறி வருவதன் காரணமாக நெஞசு பகுதில் வைக்கப்பட்ட கை அல்லது விரல் அசைத்து இருக்கும்.

 ஒரு குடும்ப உறுப்பினருக்கு திடீர் மரணமானது ஏற்படும் போது சில குடும்பதினர் பொதுவாக இறப்பினை ஏற்றுகொள்வதில்லை, அவர்கள் இறந்தவர் உயிருடன் இருப்பதாகவே கருதுவார்கள். இதன்காரணமாகவே தந்தையினால் இறந்த அன்பு மகளில் நாடிதுடிப்பினை போலியாக உணரமுடிந்தது.

மனித உடலின் அழுகல் வீதமானது (Rate of putrefaction)  உடல் மற்றும் சூழல் காரணிகளில் தங்கியுள்ளது. வெப்பநிலை கூடிய யாழ்ப்பாணத்தில் இறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் பதப்படுத்தப்படாத உடலில்  பெரும்பாலும் அழுகல் ஆனது ஆரம்பித்து இருக்கும் ஆனால் உறவினர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் மருத்துவ அறிவு இன்மையால் அவற்றினை அவர்களால் இனம் காணமுடியாது போயிருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தும் மனித உடல் அழுகுவதன் (Putrefaction changes of body) காரணமாகவே ஏற்பட்டது .

இம்மரணமானது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ள பொது வைத்தியர்கள் சிறுமியின்   மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின் தொழில்பாடு  நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதினை உறுதி செய்து, இறப்பினை உறுதிப்படுத்தி இருப்பார்கள். இன்நிலையில்  சாதாரண பூசாரி குறித்த குழந்தை இறக்கவில்லை என தெரிவித்தமை நகைப்புக்குரியது.

ஒரு காலத்தில் கல்வி அறிவுக்கு பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் இவ்வாறன மூடநண்பிக்கையான செயற்பாடு நடைபெற்றமை வருந்த தக்கது . அதனை விட சில இலத்திரனியல் ஊடகங்கள் இச்சம்வத்திற்கு பெரும் பரபரப்பு கொடுத்து செய்தி வெளியிட்டமை மேலும் கண்டிக்கத்தக்கது.

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.