போதைகொள்ளவைக்கும் “ஐஸ்”

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் முதன் முறையாக “ஐஸ்” என்ற போதை பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மெத் அம்பீர்றமைன் (methamphetamine ) என்ற பொருளே ஐஸ், எக்டஸி (ectacy ), XTC , yuppie, ஸ்பீட் போல்…   போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. நாட்டிற்கு நாடு வட்டாரத்திற்கு வட்டாரம் இதன் பெயர் வேறுபடும். மற்றைய போதை பொருட்டுகளை விட இந்த போதை பொருள் யாழ் குடாநாட்டிற்கு புதியது.

ஆனால் நாட்டின் மற்றைய பகுதிகளில் குறிப்பாக கொழும்பு போன்ற நகர புகுதிகளில் இப்போதைப்பொருள் ஆனது சர்வசாதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கும். இப்போதை பொருள் ஏன் ஆபத்தானது என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

பெரும்பாலான மற்றைய போதைப்பொருட்கள் எல்லாம் எமது நரம்பு தொகுதியினை செயற்பாடு குறைந்த நிலைக்கு கொண்டுவரும், ஆனால் ஐஸ் என்ற இப்போதைப்பொருள் ஆனது எமது மூளை மற்றும் நரம்புத்தொகுதியின் செயற்பாட்டினை தூண்டும் (Central Nervous system stimulant). இதன் காரணமாக பலர் இலகுவாக இப்போதைப்பொருளுக்கு அடிமையாகுவர். இப்போதைப்பொருளினை பாவிப்பவரில் பின்வரும் இயல்புகள் ஏற்படும்

  1. கனவுலகில் மிதத்தல்
  2. மனதில் எல்லாம் முடியும் என்ற நிலை
  3. நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றல்
  4. அதீத உடல்வேலைகளை செய்யக்கூடிய ஆற்றல்
  5. அதிகம் கதைக்கும் தன்மை

இவ்வாறான இயல்புகள் காரணமாக பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், இரவு நேர களியாட்ட விடுதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெடும்தூர பஸ், லொரி சாரதிகள் இப்போதைபொருளினை பாவிப்பர். முக்கியமாக சராசரி அல்லது கடைநிலை மாணவர்கள் அதிகநேரம் படிக்கவேண்டும் ஏன்ற ஆவலில் இப்போதைபொருளினை பயன்படுத்தத் தொடங்கி இறுதியில் அதற்கு அடிமையாகுவர். சிலர் கேட்கலாம் இப்போதைபொருளினை சிறிது காலம் பாவித்து நன்றாக படிக்கலாம் பரீட்சை முடிந்தபிறகு விடலாம் என்று ஆனால்  இப்போதைபொருளினை பாவிக்க தொடங்கினாலே நிறுத்த முடியாது (Serious drug addiction). மற்றும் இப்போதைபொருள் நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றலினை கொடுத்தாலும் படித்தலில் முக்கியமான கிரகித்தல் போன்ற மூளையின் உயர் தொழில்பாடுகளுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.

இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் பாரிய விடுதிகள் அற்ற யாழ்ப்பாணத்தில் இப்போதைபொருளின் அறிமுகம் பாடசாலை மற்றும் உயர் கல்விநிறுவன மாணவர்களே அன்றி வேறுயாரும் அல்லர். மேலும் ஒரு ஆச்சரியமான விடயமெனில் இப்போதைபொருளானது தகுந்த வைத்தியரின் சிபாரிசுடன் சிலவகை நோய்களுக்கு மருந்தாக பாவிக்கபடுகின்றது. எனவே இது சம்பந்தமாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கவனமாக இருக்க வேண்டும்.
முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.