அன்றும் மதியம் வரை அலுவலக வேலைகள் அமைதியாக நடைபெற்றன. மதியம் இரண்டு மணியளவில் எனது மேல் அதிகாரி என்னிடம் ஓர் குழந்தையின் இறப்பு சம்பந்தமாக உடற்கூராய்வு நடாத்தும் படி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து சென்றார். நானும் முதல் கட்டமாக குழந்தையின் பெற்றோர் என்று கூறப்படும் பெண் மற்றும் ஆண் ஆகியோரிடம் என்ன நடந்தது? என்று வினவினேன். அவள் சொன்னாள் தான் வீட்டின் கீழ் பகுதியில் வேலை செய்ததாகவும் கணவன் மேல் தட்டில் குழந்தையுடன் தங்கி இருந்த வேளை குழந்தை அழுத பொழுது கணவன் குழந்தையினை உலுக்கி தாலாட்டியதாகவும் அதன் பின்னர் குழந்தை சோர்வடைந்து காணப்பட்ட வேளை குழந்தையை அடுத்த நாள் காலையில் சிறுவர் வைத்தியசாலயில் அனுமதித்த பொழுது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர் கூறியதாக கூறினார். மிகுந்த கனத்த மனதுடன் உடற்கூராய்வு இணை மேற்கொண்ட பொழுது குழந்தையில் வெளிக்காயம் ஒன்றும் காணப்படவில்லை. அது ஒரு நான்கு மாத வயதுள்ள ஆண் குழந்தை. உடல்நிறையும் பிரச்சனை இல்லை. குழந்தையின் மூளையினை சூழ வுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural haematoma) பாரிய அளவில் இரத்த கசிவு காணப் பட்டது. இது சம்பதமாக போலீஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்திய போது அப்பெண் விபச்சாரம் செய்பவள் என்றும் அவள் கீழ் பகுதியில் வேலை செய்யும் போது கணவன் எனப்படுபவன் குழந்தையை தூக்கி தூக்கி எறிந்து விளையாடி சத்தம் போடாமல் பார்த்ததாகவும் கூறினார். மேலும் கணவன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருப்பவர் என்றும் கூறினார். இவ்வாறு பலமாக உலுக்கியதால் குழந்தை பாதிக்கப் படும் நிலை shaken baby syndrome என்று அழைக்கப் படுகின்றது. இது குழந்தையின் மூளையினை சூழவுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural space) உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால் (படத்தினை பார்வை இடவும்) அதனூடாக செல்லும் சிறிய இரத்த குழாய்கள் பலமாக குழந்தையின் தலை ஆட்டுபடும் பொழுது கிழிபடுவதனால் மிகவும் ஆபத்தான இரத்த கசிவு மூளையில் ஏற்படும். குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பலமான முறையில் உலுக்குதல், குலுக் குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை அதிகம் தவிர்க்க வேண்டும்.
குறிப்பு – மருத்துவ உலகில் பல்வேறு வகையான மருத்துவர்களிடம் shaken baby syndrome இக்கான காரணங்களில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் எனது தொழில் முறை வாழ்கையில் இவ்வாறான பலமான முறையில் உலுக்குதல், குலுக்குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை மேற்குறிப்பிட்ட நிலையினை தோற்றுவிக்கும் என நான் கருதுகிறேன்.
