உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணாதே…

அன்று விடுமுறை தினம் என்பதால் வைத்தியசாலை செல்லவில்லை. அன்று மாலை தொடக்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர், வைத்தியசாலை போலீசார் மற்றும் ஏனைய வைத்தியர்கள் பலதடவை எனக்கு தொலைபேசியில் அழைத்து சொன்ன விடயம் “சேர், குடும்பம் ஒன்றின் உணவில் நஞ்சு சேர்க்கப்பட்டுள்ளது, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்” இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று. நான் உடனேயே தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரினை தொடர்பு கொண்டு அவர்களின் வாந்தி, சிறுநீர் மற்றும் இரத்தம் எனபவற்றினை உரிய முறையில் சேகரிக்க அறிவுறுத்தினேன். அடுத்த நாள் காலையில் வீட்டின் தலைவியிடம் இது சம்பத்தமாக விசாரித்த பொழுது தெரியவந்ததாவது

அவள் மிதி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் தான் வேலை செய்கிறாள். அவள் ஓர் முன்னாள் போராளி என்பதாலும் ஆயுதங்கள் பற்றிய அறிவு போதுமாக இருந்ததும் அவள் இந்த வேலைக்கு இலகுவாக தெரிவுசெய்யப்பட்டாள். அது பங்குனி மாதம் என்பதால் அதிக வெயில். அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்து காலை மற்றும் மதிய உணவுகளை தயார் செய்து வைத்துவிட்டு 5.30 மணிக்கு வேலைக்கு செல்லவேண்டும். இறுதி யுத்தத்தில் கணவன் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து அவள் தான் குடும்ப சுமையினை சுமந்து வருபவள். முதல் இரு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள். கடைக்குட்டி 4 வயதுடைய ஆண் பிள்ளை. அவன் மீது அதிக பாசம் அவளுக்கு ஏன்னெனில் அவன் உரிச்சு வைச்சு அவனின் கணவன் அச்சுதான். அன்று அவள் வரும்பொழுது வயதானவர் ஒருவர் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். இவள் எது நல்ல காய் என்று தேடிய பொழுது அவர் ஓர் வெடித்த காயினை எடுத்து கொடுத்து இது முத்திய காய் அதனால் தான் வெடித்து உள்ளது என சிபாரிசு செய்தார். இவளும் அவரிடம் சிறிய வெள்ளரிக்காயினை வாங்கி வந்து பிள்ளைகள் எல்லோருக்கும் ஊட்டிவிட்டாள். மாலையாகியதும் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே வயிற்றோடமும் சத்தியும் ஆரம்பித்தன. அவர்கள் மிக களைத்த நிலையில் அயலவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டார்கள். அவள் கடைக்குட்டிக்கு அதிகளவு ஊட்டியதால் அவன் மிகவும் சோர்வடைந்து இருந்தான்.

அவனது சிறுநீரகம் தற்காலிகமாக செயலிழந்து (Acute Kidney Injury) இருந்தது. குழந்தை வைத்திய நிபுணர் மிக அக்கறையாக சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். நான் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து போலீசாரின் உதவியுடன் அவர்களின் வீடிற்கு சென்றேன். அது ஒரு ஓலையால் வேயப்பட்ட சிறிய வீடு.   அவளின் வீட்டின் சமையலறை சிறிய ஒரு குடில் மட்டுமே. அதனுள் நாய் மற்றும் பூனை என்பன போகாதவாறு தகரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி இலகுவாக உள்ளே செல்வதற்கு பல ஓட்டைகள் இருந்தன. வேறு மனிதர்கள் கூட இலகுவாக உள்நுழையலாம்.

இதன் காரணமாகத்தான் அவள் உணவில் நச்சு கலக்கப்பட்டதாக போலீசில் தெரிவித்து இருந்தாள் என நினைத்தேன். மேலும் அவளின் குடிசையில் இருந்த மீதமிருந்த சமைத்த உணவு பொருட்களின் மீதியினை சேகரித்து இருந்தேன்.

இறுதியாக இவ்வாறு சேகரித்த எல்லாவற்றினையும் உரிய முறையில் சீல் செய்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தேன். ஓரிரு நடிகைள் அவர்களின் அறிக்கையும் வந்தது அதில் அவர்கள் வெள்ளரிக்காயில் கார்போபியூரான் என்ற கொடிய பூச்சி கொல்லி (Carbofuran is one of the most toxic carbamate pesticides) இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

போலீசாரும் வழமையினை விட தீவிரமாக விசாரித்ததன் பலனாக இறுதியில் உரிய விவசாயினை கண்டறிய முடிந்தது. அவன் தான் பழங்களை பிடுங்குவதற்கு முதல் நாள் குறித்த வகையான பூச்சிக்கொல்லி மருந்து விசிறியதினை ஓப்புக்கொண்டார். அவர் மேலும் கூறினார் தான் வெள்ளரிக்காய் வெடித்து இருந்ததினை கவனிக்கவில்லை என்று. இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளினால் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் பாவிக்கபடுவதினால் உணவு நஞ்சாதல் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவா, லீக்ஸ் போன்ற மரக்கறி வகைகள் இலகுவாக நஞ்சடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றது. எனவே அவற்றினை நுகரும் பொழுது அவதானமாக இருக்க வேண்டும்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.