தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒருசில தோண்ட படுகின்றன. யுத்தம் நிலவிய பிரதேசங்களில் இவ்வாறு புதைகுழிகள் கண்டுபிடிக்க படுகின்றமை உலக வழமையே. பெரும்பாலான மக்களிற்கு இவை ஏன் தோண்டப்படவேண்டும்? இவை தொடர்பாக ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும்? யார் யார் இவற்றில் ஈடுபடுகின்றனர்? இவ்ஆராய்ச்சியினால் என்ன பிரயோசனம் போன்ற விடயங்கள் தெளிவாக தெரிவதில்லை. அவற்றினை சிறிதளவாவது தெளிவுபடுத்தும் நோக்குடன் இது எழுதப்படுகின்றது. இங்கு மனித புதைகுழி என்பது பொதுவாக போர் அல்லது இயற்கை அனர்தங்களினால் இறந்த பல மனிதர்களின் உடல்கள் புதைக்கபட்டுள்ள இடமாகும். நடந்த சம்பங்கள் தொடர்பாக இணையதத்தளங்கள் மற்றும் முகநூல் பதிவுகளில் வந்ததினை இங்கு நினைவு கூறலாம்
- போர் உக்கிரமாக நடந்த போர்முனையில் ஒருசில மனித எலும்பு கூடுகள் மீட்க படுகின்றன. அவை எவ்விதமான அடையாளம் காணலும் இன்றி அதேயிடத்தில் வைத்து எரித்து அழிக்கபடுகின்றன (இணையதத்தள செய்தி).
- வடமாகாணத்தின் ஒரு பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தின் கட்டுமான வேலை நடைபெற்ற பொது ஒருசில மனித எலும்பு கூடுகள் அத்திவாரம் தோண்டப்பட்ட பொழுது வெளிவந்தன. மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம்காரணமாக அவை அப்படியே போடப்பட்டு அதன் மேல் கலாச்சார மண்டபம் எழுப்பபட்டுள்ளது. இவ்வாறே மன்னாரிலும் தேவாலயம் ஒன்றின் புனரமைப்பின் பொழுதும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பொழுதும் பொறுப்பான குருவானவர் அதனை மூடிமறைத்து தேவாலய கட்டுமான பணியினை முன்னெடுத்து முடித்துள்ளார் (இணையதத்தள செய்தி)
- அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தீவகத்தில் பல கிணறுகளில் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்(இணையதத்தள செய்தி).
- ஒரு அரசியல்வாதி தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை ஆராய்வதன் மூலம் நாம் “இனப்படுகொலை” யினை நிரூபிக்க முடியாது என்ற தொனிப்பட கருத்து தெரிவித்து இருந்தார்.
- ஒரு ஆசிரியர் தனது முகநூல் பதிவில் மனித புதைகுழிகளினை தோண்டுவதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் அது இறந்த மனிதர்களை மேலும் அவமரியாதைக்கு உட்படுத்தும் செயல் என விபரித்து இருந்தார்.
உண்மையில் புதைகுழிகள் தோண்டி ஆராய வேண்டுமா என்று யாரவது கேட்டால், நிச்சயமான பதில் “ஆம்” என்பதே ஆகும். புதைகுழிகள் யாரால் உண்டாகியவை , எக்காலப்பகுதியில் உண்டாகியவை, பாதிக்கப்பட்ட நபர்கள் யார் போன்ற அரசியல் இலாபம் தரும் விடயங்களை கருத்தில் கொள்ளாது மனித புதைகுழிகள் யாவும் பின்வரும் காரணங்களுக்காக விரிவாக ஆராயப்படவேண்டியவை.
- இறந்த மனிதர்களை மரியாதை செய்வதற்காக, அவர்கள் மிருகங்களிலும் கேவலமாகவே கொல்லப்பட்டு எவ்விதமான சமய சடங்குகளும் இன்றி புதைக்கப்படார்கள். அவர்களின் உறவினர்களுக்கு இறந்த தமது உறவினர்களை தமது சமய மற்றும் கலாச்சார முறைப்படி உரிய மரியாதை செய்வதற்கு சகல உரிமைகளும் உண்டு.
- இன்று அணுஅணுவாக வேதனைகளை அனுபவித்த வண்ணம் தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி வேண்டுகோள் விடுக்கும் காணாமல் ஆக்கப்படோரின் உறவினர்களுக்கு இவ்வாறன நிலையில் எவ்விதமான விசாரணைகளும் இன்றி மரண சான்றிதழ் அல்லது காணாமல் ஆக்க பட்டோர் சான்றிதழ் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அல்ல. எனவே இவ்வாறன நிலையில் புதைகுழி ஆராய்ச்சி அவசியம்.
- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் ஏன் இறந்தார்கள்? எவ்வாறு இறந்தார்கள்? அவர்கள் செய்த குற்றம் என்ன? … போன்றவற்றினை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு.
- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தம் உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இறந்து விட்டனரா? என்பதை அறிவதற்கு முழு உரிமையும் உண்டு
- மனித புதைகுழிகள் மற்றும் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மனித எச்சங்கள் மீடகப்படும் பொழுது அவர்கள் ஏன் இறந்தார்கள் (Cause of dead) என்பதினை போல் அவர்கள் யார் (Identification) என்பதுவும் மிக முக்கியமானது.
- இறப்பு சான்றிதழினை பெற, இதன்மூலமே இறந்தவரின் வங்கி கணக்கினை மூடி மீதமுள்ள பணத்தினை பெறலாம் மேலும் காப்புறுதி , மாதாந்த வேதனம் என்பவற்றினை பெறலாம்.
- இறப்பு சான்றிதழினை பெற்ற பின்னரே பரம்பரை சொத்துக்களை உறவினர்களுக்குக்கிடையே பிரித்து கொள்ளலாம்.
- இவற்றினை தாண்டிய மிக முக்கியமான விடயம்தான் இப்படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் ஆகும்.
