அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ் எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள் இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன
- பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
- தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)
பொதுவான அடையாளம் காணல்
பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம் மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Antropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்
- Caucasoid (White) race.
- Negroid (Black) race.
- Mongoloid (Oriental/ Amerindian) race.
சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல் மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும் ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால் மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.
இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.
இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.
மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது
தனித்துவமான அடையாளம் காணல்
மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன
- கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
- பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
- DNA மூலம் அடையாளம் காணும் முறை
இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. மேலும் இங்கு காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.
