சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

இலங்கையில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இறப்பின் பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை சட்ட வைத்தியர்களினால் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்த நபரின் உறவினர்களுக்கு சட்ட வைத்தியரிடம் இருந்து எவ்வாறன தகவல்களை பெறலாம் என்பது தெரிவதில்லை. அவற்றினை தெளிவுபடுத்தும் நோக்குடன் இப்பதிவானது வெளியிடப்படுகின்றது.

  1. அவரின் மரணத்திற்கான காரணம் (Cause of dead) என்ன?
  2. மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்ன?
  3. மரணம் ஏற்பட்ட அண்ணளவான காலப்பகுதி (Time since dead) என்ன?
  4. காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனில் காயம் ஏற்படட பின்பு எவ்வளவு உயிர் வாழ்ந்தார் (Period of survival)?
  5.  அவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் எத்தனை?
  6. எவ்வகையான காயங்கள்(type of injuries) காணப்பட்டன?
  7. உடலில் எப்பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன?
  8. உடலின் உள் அங்கங்களில் காயங்கள்(internal injuries) காணப்பட்டனவா? எவ்வங்களில் காணப்பட்டன?
  9. கழுத்து, தலை, நெஞ்சு மற்றும் விதைப்பை ஆகியவற்றில் காணப்படட காயங்கள் யாவை? ஆண்களில் விதைப்பையில் காயம் காணப்பட்டதா என்று ஏன் விசாரிக்கவேண்டும் எனில் சில சந்தர்ப்பங்களில் விதைபையில் தாக்கும் பொழுது குறித்த நபர் மயக்கமடைவர் (Vasovagal syncope) அதன் பின்பு அவரினை அவர்கள் தூக்கில் தொங்கவிட்டு குறித்த நபர் தற்கொலை செய்ததாக சொல்வார்கள்
  10. மூளையில் எதாவது இரத்த கசிவு இருந்ததா (stroke) ?
  11. இருதயத்தின் முடியுரு இரத்த நாடியில் கொலெஸ்ட்ரோல் அடைப்பு (Coronary artery atherosclerosis) இருந்ததா? அது இறப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததா (Is it significant to cause to dead?) ? முக்கியமாக 70% விட அதிகமாக கொலஸ்ட்ரால் அடைப்பு இருக்கும் பட்சத்திலேயே மரணம் சம்பவிக்கும் சாத்தியக்கூறு அதிகம்
  12. இருதயத்தின் வால்வுகள் (Valves conditions – ? stenosis/ prolapse) என்ன நிலையில் இருந்தது? முக்கியமாக பலர் தவறாக புரிந்து கொண்டுள்ள விடயம் யாதெனில் இருதயத்தின் வால்வில் வரும் நோய்களுக்கும் (stenosis/ prolapse) முடியுரு குருதி நாடிகளில் வரும் கொலெஸ்ட்ரோல் அடைப்பு ஒன்று என்பதே
  13. உடலின் ஏனைய உள் அங்கங்களில் காணப்பட்ட இறப்பை ஏற்படுத்தும் நிலையில் காணப்படட நோய் நிலைமைகள் யாவை (Other significant pathological conditions)?
  14. என்ன மாதிரிகள் (இரத்தம், இரைப்பையின் உள்ளடக்கம், உடல் அங்கங்கள் ..) உடலில் இருந்து மேலதிக பரிசோதனைகளுக்காக (toxicological and histo pathological analysis) எடுக்கப் பட்டன? சில சமயத்தவர்  இப்பரிசோதனைகள் முடிந்த பின்பு இவ்வாறு பெறப்பட்டவரை மீள பெற்று உரிய சமய சடங்குகளை செய்வர் . அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.
  15. அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (government analyst department and Medical research institute) போன்றவற்றிக்கு அனுப்பப்பட்ட  மாதிரிகள் யாவை? என்ன பரிசோதனைக்காக அனுப்பட்டன?
  16. அவரின் இரைப்பை , குடல் ஆகியவற்றில் இருந்த நஞ்சு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பற்றிய விபரங்கள் யாவை ?
  17. பலசமயங்களில் வைத்திய தவறுகள் காரணமாக இறப்புகள் ஏற்படுகின்றன. உறவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறையில் திருப்தி இல்லாவிடில் அவர்கள் இது பற்றி சட்ட வைத்திய அதிகாரி இடம் வினவலாம். குறிப்பாக அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள், ஏற்பட்ட பிரதிகூலமான விளைவுகள் (Complications) யாவை? இறந்தவரினை வேறு வசதியுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிர் பிழைத்து இருப்பாரா? போன்றவற்றினை தயக்கம் இன்றி கேட்கலாம்
  18. சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நீரிழிவு, இருதய நோய் போன்ற நோயநிலைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் விபத்தினால் அல்லது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமை ஏற்பட்ட காயம் காரணமாக தீவிரமடைந்து இறப்பு ஏற்படும். இவ்வாறன நிலைமைகளில் எதனால் மரணம் ஏற்பட்டது என்று (காயத்தினாலா/ ஏற்கனவே உள்ள நோயினாலா) சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றினை தவிர அவரின் இறப்பு சம்மந்தமாக உறவினர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றினை  தயக்கம் இன்றி கேட்கலாம். கேட்கப்படும் கேள்விகளும் விடைகளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப   வேறுபடும் (case specific).

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.