காப்பாற்ற குதித்தவனும் மாண்ட கதை

அது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம். அவனின் தொழில் வீடு வீடாக சென்று மண்ணெண்ணெய்யில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் கிணறுகளை துப்பரவாக்கி இறைத்து கொடுப்பதே. அவனுக்கு உதவியாள் என்று யாரும் இல்லை. போகும் இடத்தில் யாரையாவது உதவிக்கு அழைப்பான். அன்றும் வழமைபோலவே மாலைவேளை   70 அடி ஆழமான அக்கிணற்றினை இறைக்க ஆயத்தமாகினான். அக்காலப்பகுதி  சித்திரை மாதம் என்பதால் பெய்த சிறுமழையினால் கிணற்றில் கணிசமான அளவு நீர் நிறைந்து இருந்தது. அவனது மண்ணெண்ணெய்யில் வேலை செய்யும் இயந்திரதின் வலு நீரினை மேலிழுத்து இறைக்க போதாதது. அதனால் ஏறத்தாழ நடுவில் 30 அடி  ஆழத்தில் சீமெந்தினால் செய்யப்பட்டுள்ள தட்டு ஒன்று உள்ளது அதில் நீர் இறைக்கும் இயந்திரத்தினை இறக்கி அதனை இயக்கி தனது வேலையை ஆரம்பித்தான். அயலில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஏறத்தாழ நீர்முழுவதும் இறைத்து முடியும் நிலையில் இறங்கி கிணற்றினை சுத்த படுத்த தொடங்கினான். மேலே நின்ற  இளைஞன் ஒருவன் குப்பைகளை அள்ளி உதவி புரிந்தவண்ணம் இருந்தான். தீடீரென்று கிணற்றில் உள்ளே வேலைசெய்த வண்ணம் இருந்த நபர் வலிப்பு மாதிரி வந்த நிலையில் மயங்கி வீழ்கின்றான். அதனை தொடர்ந்து உதவி செய்த இளைஞன் கிணற்றின் உள்ளே இறங்குகின்றான். வீழ்ந்து கிடந்தவனை தூக்கி நிறுத்திய படி சொன்னான். தனக்கும் மயக்கம் மாதிரி வருகின்றது என்று சிலவினாடிகள் தான் தாமதம் இருவரும் தடாலடியாக மீண்டும் வீழ்ந்தனர்.  மேலே நின்றவர்கள் செய்வதறியாது கத்தினார்கள். அவர்களில் ஒருவன் மேலே இருந்து நீரினை ஊற்றி இயங்கிய வண்ணம் இருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தினை நிற்பாட்டினார்கள்.

ஏறத்தாழ 30 நிமிடங்களின் பின்னர் அவர்களின் உடலையே மேலே கொண்டுவர முடிந்தது. உறவினர்களிடம் விபரங்களினை பெற்ற பின்னர் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொண்டேன்.  அவர்களின் சொண்டின் உள் பகுதி சிவந்திருந்தது. இரத்தமும் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது. அவர்களில் உயிர் ஆபத்தினை ஏற்படுத்த கூடிய காயங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இருவருமே இள வயதினர் என்பதினால் மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைகளும் காணப்படவில்லை. மேலும் நீரில் மூழ்கி இறந்தமைக்கான சான்றுகளும் இல்லை. இந்நிலையில் அவர்களின் இரத்தம் மற்றும் ஏனைய அவசியமானவற்றினை மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பு ஆய்வு திணைக்களத்திற்கு அனுப்பினேன். முடிவில் அவர்களின் இரத்தத்தில் கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயு அளவுக்கு மீறி கலந்து இருப்பதாக முடிவு வந்திருந்தது.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான்.

முக்கியமாக நீர் இறைக்கும் இயந்திரத்தினை வைத்திருந்த நபரின் உறவினர்கள் என்னிடம் கேட்டார்கள் முன்பும் இவ்வாறன சந்தர்ப்பங்களில் அவர் நீர் இறைப்பு வேலை செய்தது உண்டு. அவ்வாறு இருக்க ஏன் அன்று இத்துயர சம்பவம் நடைபெற்றது? என்று நான் அவர்களுக்கு பின்வருவனவற்றினை விளங்க படுத்தினேன்.

  1. இயந்திரத்தில் குறை தகனம் இயங்க ஆரம்பித்த உடனேயே நடைபெறாது. விதிவிலக்காக காபறேற்றில் பழுது இருந்தால் குறைதகனம் நடைபெறும்.
  2. இயந்திரம் நீண்ட நேரம் அதிக பளுவுடன் வேலை செய்யும் பொழுது குறைதகனம் நடைபெறும்.
  3. இயந்திரம் இயங்குவதற்கான ஒக்சிசன் கிணற்றின் ஆளப்பகுதியில் குறைவாக காணப்படும்பொழுது இயந்திரத்தில் குறை தகனம் நிகழும் சாத்தியக்கூறு அதிகம்.
  4. கிணற்றின் ஆளப்பகுதியில் ஒக்சிசன் குறைவாக காணப்படும்பொழுது கார்பன் மொனோக்சைட்டு வாயுவின் பாதிப்பு அதிகம்.
  5. மேலும் குறைதகனத்தின் பொழுது கார்பன் மொனோக்சைட்டு தவிர வேறு பல மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் வெளியேறி அவ்விருவரின் மரணத்தினையும் துரித படுத்தி இருக்கும்.
  6. மேலும் ஆழ் கிணறுகளில் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத மீதேன், கார்பன் டயோக்சிட் .. போன்ற வாயுக்கள் அதிகளவில் தேங்கி நிற்பதுவும் இத்தகைய மரணங்கள் ஏற்பட ஏதுவாகின்றது.

wp-15841865674796858912672646381447.jpg

நவீன காலத்தில் வலு கூடிய நீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றின் வெளியில் வைத்தது பாவிப்பதன் மூலம் அல்லது நீரினுள்ளும் (Submersible water pump)  மின்சாரத்தினால் வேலை செய்யும் நீர் இறைக்கும் இயந்திரங்களை பாவிப்பதன் மூலம் இவ்வாறான அநியாய உயிரிழப்புகளை தடுக்கலாம்.

                                                              முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.