பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

அறிமுகம்

முன்பொருபோதும் இல்லாதவாறு பாலியல் துஸ்பிரயோக, கொலை  மற்றும் ஏனைய குற்றவியல் வழக்குகள் நடைபெறும்போது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுசனங்கள் இடையிலும்  DNA   பரிசோதனை முடிவுகள் சம்மந்தமாக பெருமளவு கதைக்கப்படுக்குகின்றது. DNA பரிசோதனை முடிவானது தகுந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் சந்தேகநபர்கள் தண்டனையில் இருந்து விடுதலை பெறவும் உதவும். DNA பரிசோதனை சரியான முறையில் மேற் கொள்ளப்பட்டால் எத்தகைய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினாலும் அவ்வழக்கில் வெற்றி பெறுவது சவாலானது.

DNA என்றால் என்ன?

Deoxyribo Nucleic Acid என்பதன் சுருக்க பதமே DNA ஆகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் தமது கருவினுள் மேற்படி பதார்த்தத்தினை கொண்டிருக்கும். DNA ஆனது சாதரணமாக உமிழ்நீர் மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றில் காணப்படும்.

சாதரணமாக குற்றம் ஒன்று நடைபெறும் பொது மேற்படி பொருட்களின் பரிமாற்றம் பாதிக்கப்பட்ட நபர்,  சந்தேகிக்கப்படும் நபர் அல்லது குற்றவாளி  மற்றும் குற்றம் நடைபெற்ற பிரதேசம் என்பவற்றுக்கிடை யில் பரிமாற்றப்படும். இதன் மூலம் குற்றவாளி அல்லது சந்தேகநபர் ஆனவர் குற்றம் நடைபெற்ற பிரதேசத்துடன் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியான தொடர்பில் இருந்துள்ளார் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படும்.

DNA பரிசோதனை ஏன் தனித்துவமானது?

பின்வரும் காரணஙகளுக்காக DNA பரிசோதனையானது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது

  1. ஒவ்வொரு மனிதர்களும் கொண்டிருக்கும் DNA ஆனது தனித்துவமானது. அதாவது ஒரு மனிதனில் இருக்கும் DNA ஆனது இன்னொரு மனிதனில் காணப்படாது. விதிவிலக்காக ஒத்த இரட்டையரில் (Identical twins) ஒரே மாதிரியான DNA காணப்படும்.
  2. DNA ஆனது வயதுடனோ அல்லது வேறு எந்த செயன்முறை மூலமோ மாற்றம் அடையாது. பிறப்பில் இருந்து இறக்கும் வரை ஒரே வகையான DNA காணப்படும்.
  3. DNA பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் மாதிரி பொருட்களை பல வருடங்களுக்கு இலகுவாக சேமித்து வைத்திருக்க முடியும்.
  4. சில வளர்ச்சி அடைந்த நாடுகளில் அந்நாட்டின் சகல பிரசைகளினதும் DNA ஆனது சேகரித்துவைக்கபட்டிருக்கும் (Combined DNA Index System – CODIS). அத்தரவுகளில் இருந்து குற்றவாளியினை இலகுவாக கண்டுபிடித்து விடலாம் .

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

பாலியல் வல்லுறவு அல்லது வேறு வகையான  பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறும் போது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம் நடந்த பிரதேசம் என்பவற்றுக்கிடையில் சாட்சிய பொருட்களான  உமிழ்நீர், மயிர், இரத்தம், என்பு மற்றும் விந்து என்பவற்றின் பரிமாற்றம் நிகழும். DNA பரிசோதனையின் ஆரம்ப கட்டிடமாக சந்தேகநபர் அல்லது குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குற்றம்  நடந்த பிரதேசம் என்பவற்றில் இருந்து மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின்    பிறப்பு உறுப்பு, மலவாசல், கடி காயங்கள், உள்ளாடைகள் மற்றும் விரலின் நகக்கண்  ஆகிய உடற்பகுதிகளில்  இருந்து  மாதிரி பொருட்களை சேகரிக்கவேண்டும்.

மாதிரி பொருட்களை உரிய முறையில், உரிய அளவில் சேகரிக்கவேண்டும்.அத்துடன் மாதிரி பொருட்களை சப்பவம் இடம்பெற்ற பின்பு இயலுமானளவு விரைவாக சேகரிக்கவேண்டும். ஏன்னெனில் மாதிரிபொருட்களின் உள்ள DNA வேறு பொருட்களுடன் கலக்கலாம் அல்லது இயற்கையாகவே அழிந்து போகலாம். மாதிரி பொருட்களை சேகரிக்கும் நபரினது மயிர், எச்சில் போன்றன மாதிரி பொருட்களில் கலக்கா வண்ணம் சேகரிக்கும் நபர் கையுறை, தலைக்கவசம் மற்றும் முகமூடி என்பவற்றை அணிந்துதிருப்பார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து 72 மணித்தியாலங்களுக்குள் மாதிரிகளை சேகரித்தால் சிறந்த முடிவுகளை பெறமுடியும். 72 மணித்தியாலங்களிற்கு பிறகு சேகரிக்கப்படும் மாதிரிகளில் இருந்து பெறப்படும் முடிவுகள் எதிர்மறையானா முடிவாக இருப்பதற்கு சாத்தியக்கூறு கூட உண்டு. மாதிரி பொருட்களில் உள்ள DNA ஆனது வெப்பம் மற்றும் ஈரலிப்பு என்பவற்றால் அழிவடைந்து போகும் . எனவே இம்மாதிரி பொருட்கள் உலர்த்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மிகமிக சிறிதளவு DNA கிடைத்தாலும் நவீன தொழில் நுட்ப உதவிமூலம் (Polymerase Chain Reaction – PCR) எமக்கு தேவையான DNA இணை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் DNA ஆனது குற்றவாளியிடம் அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து பெறப்படும் DNA உடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உண்மையான குற்றவாளி இனம்காணப்படுவர்.

இலங்கைல் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் (Section 122 of CPC amended by 14 of 2005 and Section 45 of the Evidence Ordinance) DNA சான்றானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறு DNA தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோகண்டர வழக்கு, நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கு மற்றும் சிறுமி சேயா கொலை வழக்கு என்பவற்றை குறிப்பிடலாம். கூட்டு பாலியல் வல்லுறவு நடைபெறும் போதும், பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை என்று தெரியாதபோதும் DNA பரிசோதனை மூலம் குற்றவாளிகளை இலகுவாக இனம் காணலாம்.

DNA பரிசோதனையின் வெற்றியானது மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்ட நேரம், முறை, கழஞ்சிய படுத்தப்பட்ட முறை, பரிமாற்றம் செய்யப்பட்ட முறை (chain of custody) மற்றும் சேகரிப்பவரின் அனுபவம், திறமை என்பவற்றில் தங்கி உள்ளது.

 

One thought on “பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.