காலை 10 மணியளவில் எனதுஅலுவலகம் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். ஓர் பல்கலை கழக புதுமுக மாணவியை பெண் போலீசார் அழைத்து வந்திருந்தனர். போலீசார் கூறினார்கள் ” சேர், பல்கலை கழகத்தில் நடைபெற்ற ராக்கிங்கின் பொழுது இவ்மாணவியின் கையினை சிரேஷ்ட மாணவிகள் வெட்டியுள்ளார்கள்”. மேலும் அவர்கள் இச்சம்பவம் மீடியாக்களில் வந்து பிரச்சனையாக இருப்பதாகவும், நீங்கள் இம்மாணவியினை பரீட்சிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு பெண் பரிசாரகரின் முன்னிலையில், பொலிஸாரினால் குறிப்பிடடசம்பவம் பற்றி என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது ? பாவிக்க பட்ட ஆயுதம் என்ன? போன்ற விபரணங்களை கேட்டேன். அம்மாணவி கூறிய சம்பவம் இதுதான், “தான் விடுதியில் உள்ள குளியறையில் குளித்து கொண்டிருக்கும் பொழுது இரவு சிரேஷ்ட மாணவிகள் சிலர் அத்துமீறி உள்ளே புகுந்து தனது இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாகவும் அதன் பின்னர் தான் மயங்கி வீட்டதாகவும், மீண்டும் விழித்த பொழுது தான் விடுதி அறையில் உள்ள கட்டிலில் படுத்து இருந்ததாகவும்” கூறினார். மேலும் அவர் தனது சக மாணவிகள் இது பற்றி பல்கலை கழக நிர்வாகத்தில் முறையிடத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். அவரின் காயங்களின் இயல்புகளை பார்த்த உடனேயே எனக்கு விளங்கி விட்டது அதேபோல் அருகில் நின்ற அனுபவம் மிக்க பெண் பரிசாராருக்கும் விளங்கி விட்டது அதாவது இக்காயம் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டது (Deliberate self-harm (DSH), self- inflicted injury (SII), nonsuicidal self-injury (NSSI)). நான் அம்மாணவியிடம் எனது கருத்துக்களை கூறி ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டேன். அம்மாணவி அதனை முற்றாக மறுத்து தனக்கு சிரேஷ்ட மாணவிகள் இடது கையில் பிளேடினால் பலமுறை வெட்டியதாக உறுதியாக கூறினார். பெண் என்ற ரீதியில் அருகில் நின்ற சிரேஷ்ட பரிசாராரும் எனது மேலதிகாரியும் ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டனர். அவள் அம்மாணவி மீண்டும் மீண்டும் சம்பவத்தினை மறுத்தாள் . இறுதியாக அவள் கடும் மன உளைச்சலில் இருப்பதனால் அவளை உளவள ஆலோசனைக்கு அனுப்பிவைத்தேன். பொலிஸாருக்கு அம்மாணவியில் காணப்பட்ட காயங்கள் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டதால் ஏற்பட்டது என்று அறிக்கையிட்டேன். சில வாரங்களின் பின்னர் வேறு அலுவலாக வந்த போலீஸ் அதிகாரி கூறினார், கடைசியில் மாணவி எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டார் பின்னர் நடைபெற்ற விசாரணைகள் முடிவுறுத்த பட்டுள்ளன என்று.
எம்மில் பலர் மன நெருக்கீடான நேரங்களில் எம்மை நாமே காயப்படுத்தும் வழக்கத்தினை கொண்டுள்ளனர். வேறு சிலர் சில சம்பங்களில் இருந்து தப்பிவிக்கவும், சம்பவங்களை திசைதிருப்பவும் இவ்வாறு செய்கின்றனர். சிலர் சிலரிடம் இருந்து அனுதாபத்தினை பெறவும் அல்லது அவர்களை பயப்படுத்தவும் இவ்வாறு செய்கின்றனர். ஓர் சட்ட வைத்திய அதிகாரி இக்காயங்களில் காணப்படும் பின்வரும் இயல்புகளை கொண்டு அவற்றினை இலகுவாக இனம் காணுவார்.
- பொதுவாக பெண்களே இவ்வகையான காயங்களை தமக்கு தானே ஏற்படுத்துவார்கள்.
- காயங்கள் பொதுவாக தனது கைகளுக்கு எட்ட கூடிய இடங்களான கையின் முற்புறம், தொடையின் முற்புறம், வயிறு மற்றும் நெஞ்சின் முற்புறம் என்பவற்றில் காணப்படும்.
- காயங்கள் அநேகமாக வெட்டு காயமாக இருக்கும், இதேவேளை அவை தோலின் ஆழத்திற்கே காணப்படும் மேலும் காயங்கள் ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக காணப்படும்
- மேலும் இவர்களை பரீட்சிக்கும் பொழுது முன்பு ஏற்படுத்திய இவ்வகையான காயங்களின் தழும்புகள் காணப்படும்
- இக்காயங்கள் காணப்படும் ஆண்கள் சிலவேளைகளில் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
- சிலர் ஒருவித மனநோயினால் பாதிக்க பட்டவர்களாக இருப்பார்கள்.
மார்ச் 1ம் திகதி உலகளாவிய ரீதியில் இவ்வகையான காயங்களை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாகும்.
