பஸ்ஸில் உங்கள் ஆசனம் பாதுகாப்பானதா?

அவள் முதன் முதல் கொழும்பு பல்கலைகழகம் செல்வதற்காக தனது தாயாருடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தாள். அவளின் தாயார் பஸ்ஸின் சாரதி இருக்கைக்கு நேரடி பின்னாகவும் அவள் தாயாரின் அருகிலும் அமர்ந்திருந்தாள். அவள் தாயாருடன் தனது எதிர்கால படிப்பு சம்பந்தமாகவும் தனது விடுதி வசதி தொடர்பாகவும் உரையாடியவண்ணம் இருந்தாள் . தாயாரும் தனது பங்குக்கு அவளுக்கு அறிவுரைகள் கூறியவண்ணம் இருந்தாள். பஸ்ஸானது ஆணையிறவினை தாண்டி யாழ் – கண்டி வீதியில் கடும் இருட்டினுள் மிகவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று பாரிய சப்தம்   அதனை தொடர்ந்து அவளுக்கு என்ன நடந்தது என்னெவென்று தெரியவில்லை. அவள் கண் விழித்தபொழுது வைத்தியசாலையில் இருந்தாள். அவளின் தாடை எலும்பு மற்றும் பற்கள் உடைந்து இருந்தன. தாயாரும் படு காயத்திற்கு உள்ளாகி இருந்தார்.

கடந்த மாதத்தில் மட்டும் யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் 3 பஸ்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன. இதனால் ஒருசில உயிரிழப்புக்களும் பல பேர் படுகாயங்களுக்கும் உள்ளார்கள். இப்பதிவில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை அன்றி எவ்வாறு ஒரு பாதுகாப்பான இருக்கையினை பஸ்ஸில் தெரிவு செய்வது பற்றி சட்ட மருத்துவ அடிப்படையில் ஆராயப்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் நடைபெறும் பொழுது பஸ்சின் முகப்பு பக்கத்திலேயே அதிக விசை தாக்கும் (head on collision/front impact) இதன் காரணமாக தற்பொழுது சொகுசு பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய முகப்பு (Windscreen) கண்ணாடி, ஏனைய அதனோடிணைந்த பொருட்கள் மற்றும் நம்மவர்களால் பொறுத்தப்பட்ட கடவுள் படங்கள், சிலைகள் மற்றும் தொலைக்காடசி என்பன பலத்த விசையுடன் உள்நோக்கி நகரும் அதேவேளை சாரதி, சாரதிக்கு பக்கத்தில் இருப்பவர் அல்லது மிதிப்பலகையின் நின்று கொண்டிருப்பவர் ஆகியோரும் முன்னோக்கி நகர அவர்களுக்கு கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். இவ்வாறே சாரதிக்கு பின்னான இருக்கையில் இருப்பவர்களுக்கும் எதிர் நிரையில் முதலாவதாக இருப்பவர்களுக்கும் கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். பஸ்சின் முற்பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் தடுப்பு இருந்தாலும் கணிசமான விசை தாக்கும். மேலும் கண்ணாடியிலான அல்லது தகட்டிலான தடுப்பு இருந்தால் அவை உடைந்து அதிக காயங்களை ஏற்படுத்தும்.

vehicle_safetyseats_bus

பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்களில் நடுவில் இருப்பருக்கு முன்பாக எவ்விதமான தடுப்பும் இல்லை. இதன் காரணமாக விபத்தின் பொழுது வாகனத்தின் மிகக்குறைந்த நேரத்தில் வேகம் சடுதியாக பூச்சியமாக வரும் (Deceleration) இதன் காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டு அதிக காயங்களுக்கு உள்ளவார்.

மேலும் பஸ்ஸானது நிறுத்த பட்டிருக்கும் பொழுது பின்பக்கமாக வரும் வாகனம் மோதும் பொழுது பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்கள் அதிக காயங்களுக்கு உள்ளவார். குறிப்பாக பஸ்ஸின் பின் பக்கத்தில் எதுவித இரும்பாலான குறுக்கு சட்டங்களும் (Iron cross bars) இல்லாததினால் விசையானது நேரடியாக தாக்கி அதிக சேதாரங்களை ஏற்படுத்தும்.

மேலும் பஸ்சின் எரிபொருள் தாங்கி உள்ள இடத்திற்கு மேலே உள்ள இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்தின் காரணமாக தீ ஏற்பட்டால் அவருக்கு அதிக காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் விபத்தின் காரணமாக எரிபொருள் தாங்கி வெடிக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

மேலும் சாரதி இருக்கையின் பின்னாக உள்ள நிரையில் உள்ளவர்கள் எதிர் பக்கத்தில் இருந்து வரும் வாகனம் வேக கட்டுப்பாடினை இழந்து மோதும் பொழுது அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படும் (side impact) சாத்திய கூறு உண்டு. எனினும் இரும்பாலான குறுக்கு சட்டங்கள்  (Iron cross bars) இருப்பதன் காரணமாக காயங்கள் குறைவாக இருக்கும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.