முதலில் அண்மைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு இப்பதிவினை எழுத தொடங்குகிறேன். அண்மைய குண்டு வெடிப்பினை தொடர்ந்து பல சிதிலமடைந்த, உயிரிழந்த மனித உடல்கள் எனது அலுவலகத்திற்கு உடற் கூராய்வு பரிசோதனைக்குகாக கொண்டு வர ப்பட்டிருந்தன. இந்நிலையில் பலரிடம் இருந்து குறிப்பாக அரசியல் வாதிகள், சக வைத்தியர், மத தலைவர்கள், சக வைத்திய சாலை பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து அதிகமான தொலை பேசி அழைப்புகள் . அவர்கள் யாவரின் வேண்டுதலும் விரைவாக உடற் கூராய்வு பரிசோதனையை முடித்து தரும்படியே ஆகும். ஓர் அரச அதிகாரி கேட்டார் டாக்டர் உங்களுக்கு மரணத்திற்கான காரண தெரியும் தானே? நீங்கள் ஏன் போஸ்ட் மொட்டம் செய்ய வேண்டும்? மரணத்திற்கு ஏதுவான காரணத்தை (Cause of dead) கொடுத்து உடலினை ரிலீஸாகக்கலாம் தானே என்று. இவ்வாறு பலர் நினைத்து கொண்டு உள்ளார்கள்.
இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல மனித உயிர்கள் பறிக்கப்படும் சம்பவங்களில் குற்றவியல் புலன் விசாரணையின் (Criminal investigation) பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் (JMO – Judicial Medical Officer) பங்குகள் பற்றி விளக்குவதே இப்பதிவின் நோக்கம். மேலும் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு ஓர் குற்றவியல் புலன் விசாரணை நடைபெறுகின்றது என்பதையும் இப்பதிவு விளக்குகின்றது.
- இவ்வாறன சம்பவங்கள் நடைபெற்ற உடனேயே சட்டவைத்திய அதிகாரி, இரசாயன பகுப்பு திணைக்களத்தின் குண்டுகள் தொடர்பான நிபுணர், போலீஸ் திணைக்கள விசாரணை அதிகாரிகள் போன்றோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைக்கபடுவர். இது ஒரு குழு வேலை ஆகும். இங்கு சட்ட வைத்திய அதிகாரி மனித தசைத் துண்டங்களின் குவியலுக்கிடையே தேவையான சான்று பொருட்களை தேடி சேகரிப்பர்.
இவர் வெடித்த குண்டின் சன்னங்கள், இறந்த மனிதர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான பொருட்கள் போன்ற வற்றை சேகரிப்பர். மனித மனதினை மிகவும் நிலை குலையவைக்கும் இவ்வாறன சம்பவங்களில் ஓர் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரால் தான் திறமையாக மனம் தளராமல் கடமையாற்ற முடியும். இங்கு சன்னங்கள் (Shrapnel) எனப்படும் பொழுது இரு வகைப்படும். முதலாவது வகை வெடிகுண்டு ஆக்க பயன்பட்ட உலோகம் மற்றும் அதனுள் அமைந்த உலோக குண்டுகள் ஆகும். இரண்டாவது வகை குண்டு கொண்டு வரப்பட்ட கொள்கலன் அல்லது பொருள் போன்றவற்றின் பகுதிகளை குறிக்கும். இவை மிக முக்கியமானவை எனெனில் இவை மூலம் வெடித்த குண்டு எது, அது எவ்வகையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளது, எதனுள் மறைத்து கொன்டு வரப்பட்டுள்து போன்றவர்றை கண்டுபிடிக்கலாம். மேலும் சட்ட வைத்திய அதிகாரி உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இவற்றினை கவனமாகக் சேகரிப்பார். - ஓர் குண்டு வெடிப்பு தாக்குதல் ஆனது சனநடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெறும் பொழுது இறுதியில் அவ்விடத்தில் தசைகளினதும் எழும்புகளினதும் ஓர் குவியலே எஞ்சும். இவற்றில் இருந்து எத்தனை மனிதர்கள் இறந்தார்கள்? அவர்கள் யார்? என்பதை கண்டு பிடிப்பதும் ஓர் சட்ட வைத்திய அதிகாரியின் பிரதான வேலை ஆகும். அவர்கள் முதலில் குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் உள்ள தனித்துவமான சான்றுபொருடகள் மூலம், கைரேகை, பற்களின் அமைப்பு (forensic odentology) மூலம் அடையாளம் காண முற்படுவார்கள். தேவை ஏற்படும் போது DNA தொழில் நுட்ப முறையும் பாவிக்கப்படும். இதுவே மிகவும் சரியான முறை ஆகும்.
- தற்கொலை குண்டு தாக்குதல்களில் இறந்த மனிதர்களில் யார் குண்டுதாரி என்று கண்டு பிடிப்பதும் சட்ட வைத்திய அதிகாரி அவர்களின் பணிகளில் ஒன்று. அவர் பொதுவாக இறந்தவர்களில் காணப்படும் காயங்களின் தன்மையை வைத்து கண்டறிவார். பொதுவாக தற்கொலை குண்டுதாரி குண்டுகளை ஜாக்கெட் வடிவில் நெஞ்சு, தொடை அல்லது வயிற்று பகுதிகளில் அணிந்து இருப்பர். மற்றும் இங்கு பயன்படுத்த படுவது சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பதால் குண்டுதாரியின் தலை கழுத்து பகுதியுடன் வேறாக்கபட்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் காணப்படும்.பல சமயங்களில் தலை பல மீட்டர் தூரம் வீசப்பட்டு காணப்படும். அதிலிருந்து வெளித்தோற்ற இயல்பு, பற்களின் அமைப்பு மற்றும் DNA போன்ற வற்றின் மூலம் குண்டுதாரியை அடையாளம் காண்பர்.

- சட்ட மருத்துவத்தில் இவ்வாறு குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் குற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பதை மீண்டும் ஒருமுறை அறிவியல் ரீதியில் அமைத்து பார்த்தல் அதாவது reconstruction of the crime. இதன் மூலம் பாதுகாப்பு ஒட்டைகளினை கண்டு பிடித்து அவற்றினை சீர் செய்து எதிர் காலத்தில் அவ்வாறு நடைபெறாது தடுத்தல் ஆகும்.
- மேலும் இறந்தவர்களின் மற்றும் காயப்படவர்களின் உடல்களில் உள்ள காயங்களின் தன்மையை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வகையான காயங்களை தடுக்கும் உபகரணங்களை உருவாக்க உதவுதல் ஆகும் (personal protective equipment)
- மேலும் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்று ஆராய்தல் ஆகும். சாதாரணமாக இவ்வாறு குண்டு வெடிப்பின் போது ஏற்படும் காயங்கள் காரணமாக பெரும்பான்மையானவர் இறப்பர். மேலும் அதிர்ச்சி காரணமாக ஏற்கனவே உள்ள இருதய நோய்கள் காரணமாகவும் இறப்பு ஏற்படலாம். மேலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து அதன் மூலமும், மேலும் மின்சாரத் தாக்குதல் மூலமும் இறப்பு ஏற்படலாம்.
மேலும் அரிதாக குண்டுதாரி எய்ட்ஸ் அல்லது ஹெப்படைட்டிஸ் B போன்ற நோய்களால் பாதிக்கபட்டிருப்பின் அவர்களின் இரத்தம் மூலம் காயம் அடைந்தவர்களுக்கு அந்த நோய்கள் தோற்ற கூடிய அபாயம் உள்ளது. இவற்றினை கண்டறிவதும் சட்டவைத்திய அதிகாரி ஒருவரின் கடமை ஆகும்.
இவற்றிக்கு மேலதிகமாக இவ்வாறன திடீர் மரணங்கள் நிகழும் பொழுது இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கட்டாய உடற் கூராய்வு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது.
