கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஒருவர் மயக்கமுற்ற நிலையில் குழியினுள் விழுந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்றச் சென்ற ஏனைய மூவரும் மயக்கமுற்று குழியினுள் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த நால்வரையும் காப்பாற்ற காவலாளி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நால்வரையும் குழியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.
இலங்கையில் கொல்களங்களில் இருந்து வெளியேற்றப்படும் கொல்லப்பட் ட மிருகங்களின் கழிவுகள் ஏறத்தாழ முற்றாக அடைக்கபட்ட நிலக்கீழ் அமைந்த பெரிய குழிகளில் சேகரிக்க பட்டு குறித்த கால இடைவெளிகளில் அப்பிரதேசங்களிற்கு பொறுப்பான உள்ளுராட்ச்சி சபைகளினால் gully பவுசர் மூலம் வெளியேற்றப்படும். இங்கு தொழிலார்களின் இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது? என்று பார்ப்போம்.
நச்சு வாயுக்கள் எனப்படும் பொழுது இவை மனிதனால் உட்சுவாசிக்க படும் பொழுது அவை நுரை ஈரலில் மனித இரத்தத்துடன் கலந்து சாதாரணமாக உடலில் நடைபெறும் ஓட்ஸிசன் காவும் செயற்பாட்டினை பாதிப்பன உதாரணமாக Hydrogen Sulphide, Nitrogen dioxide, Sulphur dioxide, carbon monoxide போன்ற வாயுக்கள். நச்சு அல்லாத வாயுக்கள் எனப்படும் பொழுது இவை சாதாரணமாக குறைந்த செறிவில் இருக்கும் பொழுது எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது. ஆனால் அதிக செறிவில் உயிராபத்தினை விளைவிக்கும். உதாரணமாக Methane ,Ammonia, Carbon-dioxide போன்றனவாகும். இவ்வாறு கழிவுத்தொட்டியில் காணப்படும் வாயுக்கள் Sewer gas என்று அழைக்கப்டும்.
கழிவுகளுடன் நீரும் சேர்க்க படுவதன் காரணமாக இவ்வகையான வாயுக்கள் அதிக அளவில் நொதித்தல் (fermentation) மூலம் உருவாகும். இவை பொதுவாக கழுவுத்தொட்டியின் உள்ளே கழிவுகளின் மேற்பரப்பில்தான் அதிக செறிவில் காணப்படும், மேலும் இவை வளியில் உள்ள ஓட்ஸிசனை இடம்பெயர்த்து காணப்படுவதால் கழிவுத்தொட்டியின் உள்ளே ஒப்பிட்டளவில் ஓட்ஸிசன் பற்றாக்குறை காணப்படும்.


இவ்வாறான இறப்புக்களினை எவ்வாறு தடுக்கலாம்
- கழிவுகளை அதிக நாட்களுக்கு விடாமல், குறைந்த நாட்களில் அகற்றுவதன் மூலம். இதன்போது வாயுக்கள் குறைந்த அளவிலேயே தோற்றம் பெற்றிருக்கும்
- கழிவுத்தொட்டிகளினால் குளோரின் போன்ற கிருமிக்கொல்லிகளை போடுவதன் மூலம் இவ்வாயுக்கள் தோற்றம் பெறுவதினை குறைக்கலாம்.
- மேலும் கழிவுகளை அகற்ற முதல் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கழிவுத்தொட்டியின் மூடிகளை திறந்து விடுவதன் மூலம். இதனால் இவ்வாயுக்கள் வெளியேறும்.
- பொதுவாக தொழிலார்கள் தொட்டியினுள் இருக்கும் திண்ம கழிவுகள் நீர்க்குழாயினை அடைக்கும் பொழுது தொழிலார்கள் தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும்பொழுதுதான் அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமாக தொழிலார்கள் குழியினுள் இறங்காமல் அதிசக்தி வாய்ந்த நீரினுள் வேலைசெய்யும் (High power Submersible Water Pump) நீர்பம்பிகளை பாவிக்க வகைசெய்ய வேண்டும்.
- மனிதன் ஒருவன் இவ்வாயுக்களினை சுவாசிக்கும் பொழுது அவனுக்கு மயக்கம் மற்றும் தலைச்சுற்று போன்றன வந்து அவன் நினைவிழந்து கழிவு நீரினுள் வீழ்வதன் காரணமாக அதாவது நீரில் மூழ்கியே (Drowning) இறப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பொழுது சகதொழிலாளர் உணர்ச்சி வசப்பட்டு தொட்டியினுள் குதிக்காமல் புத்தி சாதுரியமாக செயற்படவேண்டும்.
- தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உரிய முகமூடிகள் மற்றும் ஏனைய தனி நபர் பாதுகாப்பு சாதனங்களை (Personal protective equipment) அணிவதன் மூலமும் அநியாய இறப்பினை தடுக்கலாம். இவை கணிசமான விலை கூடியவை மற்றும் இவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியது.
இவ்வாறு விஷவாயுக்களினால் இறப்பு நடந்த வேறு இரு சம்பவங்களினை இங்கு தருகின்றேன்.
