ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும்?

இலங்கை சனாதிபதி கையெழுத்து இட்டதினை தொடர்ந்து அடுத்த வாரம் அளவில் ஒரு சில மரண தண்டனை கைதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் மரணதண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரணதண்டனைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. இதனால் தான் சர்வதேச நாடுகள் பலவும் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பலருக்கு ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. இதற்கு அண்மையில் நடந்த ஓர் சம்பவத்தினை எடுத்துக்கூற விரும்புகின்றேன். கடந்த வருடத்தில் மாவீரர் தினத்தினை ஓட்டி வவுணதீவில் நடைபெற்ற சம்பவத்தில் இரு போலீசார் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் தடுப்பில் வைக்க பட்டார். அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பினை தொடர்ந்து கைது செய்யப் பட்டவர்களில் நடந்த விசாரணைகளின் படி அவர் குற்றம் அற்றவர் என்று விடுதலை செய்ய பட்டுள்ளார். இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழாது விடின் அவர் கொலைக்குற்றவாளி ஆக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது பல வருட சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டிருக்கலாம் அல்லது சிறையிலேயே இறந்திருக்கலாம்

இவ்வாறு ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், சட்ட வைத்திய அதிகாரி உரிய சான்று பொருட்களை சேகரிக்காமல் விடலாம் அல்லது நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம், சட்ட தரணி உரிய முறையில் வாதாடாமல் இருக்கலாம், பிரபல குற்றவியல் சட்ட தரணியின் சேவை கிடைக்காமல் விடலாம், மற்றும் சிலவேளைகளில் நீதிபதி உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பு வழங்கலாம்.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்ட வழக்கினை விஞ்ஞான ரீதியில் மீளாய்வு செய்ய வசதிகள் இல்லை, இவ்வாறான நிலையில் பல மனித உயிர்கள் மரணதண்டனை மூலம் பலியாக வாய்ப்புள்ளது. மேலும் மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.