- 5G தொழில் நுட்பம் தொடர்பான அறிவியல் ரீதியற்ற பதிவுகள் அதிகமாக உள்ளதற்கு காரணம் என்ன?
நேற்றைய தினம் 5G சம்பந்தமாக ஓர் பதிவினை இட்டத்தினை தொடர்ந்து பலர் எனது உள்பெட்டியில் வந்து 5G மிகவும் ஆபத்தானது நீங்கள் ஏன் நல்லது என்று பதிவுட்டுளீர்கள் என்று கேட்டு பல ஆதாரங்களை அனுப்பியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் ரீதியான விளக்கம் அற்றவை. எம்மில் பலர் நினைக்கின்றனர் இன்டர்நெட்டில் வருவதெல்லாம் அறிவியல் சார்ந்தது என்றும் உண்மை என்றும். எம்மில் பலர் எவ்வாறு மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றார்களோ அவ்வாறே வெளிநாடுகளில் உள்ள பலரும் இருக்கின்றார்கள். அவர்களால் தான் இவ்வாறு பல ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஒருசில ஆக்கங்கள் மறைமுகமாக தமது விற்பனையினை ஊக்குவிக்கும் முகமாக ஒருசில கம்பெனிகளால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக கீழே உள்ள லிங்கில் உள்ள ஆக்கம்
https://www.radiationhealthrisks.com/5g-cell-towers-dangerous/
இது கதிரியக்க தாக்கத்தினினை குறைக்கும் என நம்பப்படும் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணையத்தளம் இதில் அவர்கள் தமது உற்பத்தியினை (Wifi guard) அதிகரிக்கும் முகமாகவே 5G பற்றிய தவறான பல கருத்துக்களை இட்டுள்ளனர்.மிக அண்மைக்காலத்திலேயே தான் மேற்படி தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டு சந்தைக்கு வந்தது. இதன் காரணமாக இவற்றின் மீதான அறிவியல் ரீதியான ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்துள்ளன. அதன்காரணமாகவே அறிவியல் ரீதியற்ற பதிவுகள் அதிகமாக உள்ளது.
2. 5G தொழில் நுட்பம் மீதான அறிவியல் ரீதியான ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்துள்ள நிலையில் எவ்வாறு அறிவியல் ரீதியாக அது பாதுகாப்பான தொழில் நுட்பம் என்று எவ்வாறு கூறலாம் ?
தற்போதைய அறிவியல் அறிவின் பிரகாரம் 5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் அயனாக்கும் தன்மை அற்றவை இதன் காரணமாக அவை நிறமூர்த்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் உண்டுபண்னாது, ஆனால் நீண்ட காலப்போக்கின் விளைவு என்ன? என்பது பற்றி கண்டறிய பல வருடங்கள் செல்லலாம். இதன் காரணமாகவே National Radiological Protection Board (NRPB) of the United Kingdom, World Health Organization (WHO), International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP) போன்ற பல்வேறு அமைப்புக்கள் பல வரையறைகளை அறிவித்துள்ளன. இதன் பிரகாரம் 0 – 300GHz அதிர்வெண் பொதுவாக அனுமதிக்க படுகின்றது.
உசாத்துணை
(1) International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP). Statement on the “Guidelines for limiting exposure to time-varying electric, magnetic and electromagetic fields (up to 300 GHz)”, 2009.
(2) Institute of Electrical and Electronics Engineers (IEEE). IEEE standard for safety levels with respect to human exposure to radio frequency electromagnetic fields, 3 kHz to 300 GHz, IEEE Std C95.1, 2005.
3. யார்தான் கருத்து கூறலாம்
சாதாரணமாக ஒருசில வைத்தியர்களை தவிர ஏனையோர் சட்ட மருத்துவ துறையில் மேற்படிப்பு மேற்கொள்வதை விரும்புவதில்லை. ஏன்னெனில் தினமும் இறந்தவர்களை பரிசோதனை செய்யவும் காயங்களை பரிசோதிக்கவும் நேரிடும் என்பதுவும் ஓர் காரணம். சட்ட மருத்துவ துறையில் மேற்படிப்பினை மேற்கொள்ளும் பொழுது பாடத்திட்டத்தில் INJURIES DUE TO PHYSICAL AGENTS, WARFARE INJURIES என்ற இரு பாடங்கள் உண்டு இதில் பல்வேறுபட்ட கதிரியக்கங்கள் எவ்வாறு எமது உடலை பாதித்து உடலில் காயத்தினை அல்லது மரணத்தினை ஏற்படுத்துகின்றது என்பதை பற்றியதே ஆகும்.
மேலும் WARFARE INJURIES என்ற பாடத்தில் யுத்தத்தில் எவ்வாறு இரசாயன, உயிரியல் மற்றும் கதிரியக்க ஆயுதங்கள் உடலில் காயத்தினை உண்டு பண்ணி இறப்பினை உண்டு பண்ணுகின்றது என்பது பற்றியது ஆகும். இங்கு கதிரியக்க ஆயுதங்கள்/ உபகரணங்கள் எனப்படும் பொழுது சாதாரண மைக்ரோ wave oven மற்றும் கைத்தொலைபேசியில் இருந்து அணுகுண்டு வரையானவற்றில் எவ்வையான கதிரியக்கம் நிகழுகின்றது அவற்றினால் மனித உடலுக்கு எவ்வகையில் தீங்கு ஏற்படும் என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது. மேலும் நான் சட்ட மருத்துவ துறையில் நச்சியல் (Forensic Toxicology) சம்பந்தமாக விசேட கற்கை நெறியினை மேற்கொண்டுள்ளேன். இப்பாடத்திட்டத்தில் Radio toxicity என்ற பெரிய பாடமே உள்ளது இதில் சாதாரணமாக இயற்கையில் காணப்படும் கதிரியக்கத்தினை காலும் மூலகங்கள் தொடக்கம் தொலைத்தொடர்பு சாதனங்கள், அணு ஆயுதங்கள் வரை அவற்றின் கதிரியக்கமும் அதனால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி விலாவாரியாக குறிப்பிட பட்டுள்ளது.நான் தொழில்முறையில் தொலைதொடர்பாடல் பொறியியலாளர் அல்ல. ஆனால் வைத்தியர் என்ற அடிப்படையிலேயே உடல் நலத்திற்கு 5G தொழில் நுட்பம் தீங்காகுமா? என்ற கருத்தினை இடுகின்றேன்.
இனி விடயத்திற்கு வருவோம் 5G தொழில் நுட்பம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்று கருத்து தெரிவிக்க எத்தகைய கல்வி அறிவு தேவை? கருத்து தெரிவிப்பவர் ஆராய்ச்சிகள் பல செய்ய வேண்டுமா? 5G தொழில் நுட்பம் ஆனது ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பல நாடுகளில் பல ஆராச்சிகளின் பின்னர் அறிமுக படுத்தப்பட்டு பாவனையில் உள்ளது. இங்கு எவ்வகையான அலைகள் பாவிக்கப் படுகின்றன, அவை அயனாக்கும் திறன் உடையவையா, மனித கலம் ஒன்றின் நிறமூர்த்ததில் மாற்றத்தினை உண்டு பண்ணுமா போன்ற விடயங்கள் தெரிந்தாலே போதுமானது. அதாவது பௌதீகவியல் மற்றும் உரியல் அறிவு உள்ள கல்வி பொது தராதர உயர் தரத்தில் கல்வி கற்கும் திறமையான மாணவன் ஒருவனாலேயே முடியும்.
இங்கு கீழ் உள்ள படத்தில் காணப்படுவதை விளங்கிக் கொண்டாலே பலவற்றிக்கு விடை கிடைக்கும்.


5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் உண்மையாகவே சக்தி குறைந்தவை அதாவது நீண்ட தூரம் பயணிக்க மாட்டாது மேலும் சுவர்கள் போன்றவற்றையும் ஊடுருவ மாட்டாது. மேலும் இவை ஒருசில நூறு மீட்டர்களே செல்லும் அதன் காரணமாகவே ஸ்மார்ட் லாம்ப் போல் (smart lamp pole) குறுகிய தூர இடைவெளியில் போடப்படுகின்றது. மாறாக தொலைத்தொடர்பு கோபுரங்களில் ட்ரான்ஸ்மிட்டர்களினால் காலப்படும் அலைகள் அதிக சக்தி கொண்டவை. இவை ஒருசில கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அத்துடன் சுவர் போன்றவற்றினையும் ஊடுருவும். அதன் காரணமாகவே தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைக்க பட்டுள்ளன.
இலங்கையில் இத்தொலை தொடர்பு கோபுரங்களில் இருந்து காலப்படும் அலைகளின் அதிர்வெண் போன்றவற்றினை இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவே கண்காணிக்கின்றது. முக்கியமாக அவை அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும். ஆனால் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலாப நோக்கம் கருதி அதிக தூர இடைவெளியில் கோபுரங்களை பராமரிப்பதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலான அளவில் அலைகளை வைத்திருப்பதுண்டு. அவ்வாறு வைத்திருந்தால் தான் எல்லா இடமும் Coverage வரும் இலங்கை போன்ற நாட்டில் இவற்றினை கண்டு பிடிப்பதுவும் தடுப்பதுவும் கடினமே.
4. 5G ஆபத்தானது என கூக்குரல் ஈடுபவர்கள் என்ன செய்யலாம்?

Ericsson நிறுவனத்தின் 5G தொழில் நுட்பம் ஏற்கனவே தொழில் படுநிலையில் உள்ள சில நாடுகளை மேற்படி படம் காட்டுகின்றது.
5G தொழில் நுட்பம் இலங்கையில் கொழும்பில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளநிலையில் யாழ்ப்பாணத்தில் கொண்டுவர முற்படுகின்றனர். இலங்கையில் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது குறித்த தொலைபேசி நிறுவனம் TRC எனப்படும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் அனுமதி பெறவேண்டும். இது சம்பந்தமாக RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் ? பயன்படுத்தப்படும் அலை கதிர்வீச்சின் விபரம்? அனுமதிக்க ப்பட் ட அளவு? எவ்வாறு கண்பாணிப்பார்கள்? உலக அளவில் அனுமதிக்க பட்ட கதிர்வீச்சின் அளவு? இலங்கையில் அனுமதிக்க ப்பட்ட கதிர்வீச்சின் அளவு போன்ற தகவலைகளை பெற்று உரிய வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வழக்கினை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும். அதை விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தனிப்பட்ட ரீதியில் இலாபம் தரும் வகையில் செயற்பட கூடாது.
5. யாழ்ப்பாணிக்கு 4G தொழில் நுட்பம் போதுமா?
சிலர் கூறுகின்றனர் தங்களுக்கு ஆளில்லா வாகன வசதி தேவையில்லை, ஏற்கனவே உள்ள 4G வசதியினை ஒழுங்கான முறையில் தந்தால் போதுமானது என வாதிடுகின்றனர். உலகில் ஒவ்வொருவரும் தமது கல்வி, தொழில் தகமைகளுக்கு ஏற்பவே தொழில் நுட்பத்தினை தெரிவு செய்கின்றனர். உதாரணமாக இன்று பலர் அதிக வசதிகளுடன் கூடிய கைத்தொலை பேசிகளை வைத்திருந்தாலும் எல்லாரும் எல்லா வசதிகளையும் பயன்படுத்துவதில்லை.
எனது வெளிநாட்டு நண்பன் அடிக்கடி தொலை பேசியில் கூறும் விடயம் தனது இலங்கையில் தாய் மற்றும் தகப்பனாரை அவதானிக்க பூட்டிய CCTV கேமரா அடிக்கடி struck ஆகுது என்பதே. சுருங்க சொன்னால் slow motion இல் தான் வீடியோ வினை பார்க்க முடிகின்றது. மேலும் நான் உரிய வல்லுநர்கள் மூலம் ஆராய்ந்த பொழுது தெரியவந்த விடயம் யாதெனில் இலங்கையில் தற்பொழுதுள்ள இன்டர்நெட் வேகம் போதாமையே ஆகும்.

இப்பதிவில் நன்மைகள் பற்றி பட்டியல் இடாமல் நான் 5G தொழில் நுட்பத்தினால் உடல்நலக்கேடு உண்டாகுமா? என்பது பற்றித்தான் ஆராய்ந்துள்ளேன்.+

One thought on “5G – சில தெளிவு படுத்தல்கள்”