அது ஒரு சிறிய குடும்பம். அவர்களின் வசிப்பிடம் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஓர் தொடர்மாடி வீட்டுத்தொகுதி. கணவன் மற்றும் மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகம் மற்றும் இரு பிள்ளைகள். வேலைகாரி என்று யாரும் இல்லை. அன்றும் அவள் அதிகாலை எழுந்த உடனேயே சென்று தேநீர் தயாரிக்கும் நோக்குடன் சமையலறைக்கு சென்றாள் . அங்கு சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் வாசனை அவளது மூக்கை சிறிதளவு அரித்தது. அவளும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு மின்சார சுவிட்ஸினை ஒன் பண்ணினாள். ஒருவினாடிதான் அவளின் உடை மற்றும் சமையலறையில் இருந்த துணி மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. அவள் அவலக் குரல் எழுப்பினாள். கணவன் மற்றும் பிள்ளைகள் தீயினை பகீர பிரயத்தனத்தின் பின்னர் அணைத்தனர். வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்ட பொழுது தீ அவளது உடலின் மேற்பரப்பின் 70 சதவீதத்தினை (Total Body Surface Area) இல்லாமல் செய்திருந்தது. ஒரு சில நாட்கள் அதிதீவிர சிகிச்சையின் பின்னர் அவள் இறந்தாள்.
சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து காஸ் கசிவடைந்து வெளியேற பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலும் இரவில் சமையலறையில் யாரும் இல்லாத பொழுது வாயு கசிவினை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் மேலும் இரவு வேளைகளில் யன்னல்கள் யாவும் பூட்ட பட்ட நிலையில் கசிவடையும் வாயு ஆனது அறையில் தேங்கி நிற்கும்.இவ்வாறு தேங்கி நிற்கும் வாயு ஆனது துணி, ஈரமான பொருட்கள் போன்றவற்றுடன் பௌதிக ரீதியாக இணைந்திருக்கும். இவ்வாயுவானது மின்சார ஆளிகளை செயற்படுத்தும் பொழுதும், சிகரெட் லைட்டரினை பற்ற வைக்கும் பொழுதும், வாயு அடுப்பினை பற்ற வைக்கும் பொழுதும் உண்டாகும் மிகச்சிறிய தீப்பொறி காரணமாக தானாகவே தீப்பற்றி எரியும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் யன்னல் மற்றும் கதவினை திறந்து காற்றோட்டத்தினை ஏற்படுத்தி தேங்கிய வாயுவினை வெளியேற்ற வேண்டும் அல்லது ஐதாக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை பின்னரே ஆராய வேண்டும்.
இன்றைய நவீன காலத்தில் பலர் தமது நவீன வடிவமைப்பில் வீடுகளை கட்டும் பொழுது சமையலறையில் புகை போக்கிகளை வைப்பதில்லை அதற்கு அவர்கள் கூறும் காரணம் எரிவாயுவிலும் மின்சாரத்திலும் சமைக்கும் பொழுது புகை வாராது தானே என்பது தான். உண்மைதான், ஆனால் இவ்வாறு எரி வாயு கசிவு நிகழும் பொழுது புகை போக்கிகள் தேங்கிய எரி வாயுவினை வெளியேற்ற அல்லது ஐதாக்க பெரிதும் உதவும்.
தமிழரின் வாழ்வியலோடு புகைக்கூடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது புக்காரா வரும் பொழுது ஓடி பதுங்கிய இடமும் அது தான், கள்ளவன் வீட்டுக்குள் நுழைவதும் அதனால் தான், முன்னோர் விதை தானியங்களை கட்டி சேமித்து வைப்பது அது தான். தமிழ் பிரதேசங்களில் நான் அவதானித்த விடயம் யாதெனில் பெரும்பாலான வீடுகளில் சமையலறையில் GAS குக்கர் ஆனது புகை போக்கியின் (புகைக்கூடு ) கீழ் அல்லாது வேறு ஒரு இடத்தில் தொழில் படுநிலையில் இருக்கும். இந்நிலை வாயுக் கசிவின் பொழுது ஆபத்தினை விளைவிக்க கூடியது. இன்னொரு சந்தர்ப்பத்தில் gas குக்கர் இல் எவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுகின்றது அதனை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி குறிப்பிடுகின்றேன்.
மேலே உள்ள வீடியோவில் கசிந்துள்ள வாயு எவ்வாறு பற்றி எரிந்து ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை பார்க்கவும். (ஆரம்பத்தில் விபரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இங்கு காட்டப்பட்ட விடியோவிற்கும் தொடர்பில்லை, ஆனால் அதனை ஒத்த ஓர் சம்பவம்)
