நீர் நிலை ஒன்றில் இருந்து ஓர் பெண்ணின் உடல் எடுக்கப் பட்டால் எவ்வாறு மரணம் ஏற்பட சூழ்நிலை கண்டறியப்படுகின்றது என்பதை பற்றிய விளக்கமே இப்பதிவாகும். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது கொலை, தற்கொலை, விபத்து மற்றும் இயற்கை மரணம் என்பதினை குறிக்கும்.
முதலில் “கொலை” என்பது நீதிமன்ற விசரணைகளின் முடிவிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப் படும். “கொலை” என்ற சொற்பதத்தினை மற்றையவர்கள் கையாளும் பொழுது மிக்க அவதானம் தேவை . நீர் நிலை ஒன்றில் பெண்ணின் சடலம் காணப்படும் பொழுது அதுவும் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு காணப்படும் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுவது வழமையே. “கொலை ” என்பது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation), உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகள்(postmortem investigation), ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations), சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence), நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) என்பனவற்றின் அடிப்படையிலேயே நீதிபதி அவர்களினால் தீர்மானிக்கப்படும்.
மேலும் முக்கியமாக குற்றவியல் வழக்கு விசாரணையின் பொழுது குற்றமானது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நீருபிக்கப் படவேண்டும். நம்மவர்களில் பெரும் சந்தோஷமான செயற்பாடு ஒன்றுதான் எதுவிதமான ஆதாரங்களும் இன்றி குற்றசாட்டுகளை சுமத்தி மற்றவர்களை மனவேதனையில் ஆழ்த்துவதுதான்.
இனி ஒவ்வொரு விடயத்தினையும் தனித்தனியாக பார்ப்போம். குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலனாய்வு முடிவுகள் (crime scene investigation) எனப்படும் பொழுது கொலை நடந்த பிரதேசத்தில் காணப்படும் DNA சான்றுகள், இரத்த கறைகள் (Bloodstain Pattern Analysis -BPA), கொலையாளி பயன்படுத்திய ஆயுதங்கள், கொலையாளி பயன்படுத்திய வேறு பொருட்கள், கொலையாளின் கைரேகை, பாத ரேகை (Foot print ) போன்றன பெறப்படும்.
அடுத்து மிக முக்கியமான உடற் கூறாய்வு பரிசோதனை பற்றி பார்ப்போம். முதலில் இறந்தவரின் உடலில் இருந்து நிகத்தின் நுனிப்பகுதி, பெண்ணுறுப்பு பகுதி , மலவாசல் பகுதி , கடிகாயங்கள் , காணப்படும் இரத்த மற்றும் ஏனையவற்றில் இருந்து சான்று பொருட்கள் எடுக்கப்படும். அடுத்து அவரில் உள்ள வெளிக்காயங்கள் மற்றும் உட்காயங்கள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்படும். முக்கியமாக காயங்கள் காணப்படும் பொழுது அவை உயிர் ஆபத்தினை அல்லது மனிதனை தொழில்படா நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை உடையவையா (whether injuries are sufficient to cause to death or incapacitate the person) என்று சட்ட மருத்துவ ரீதியில் அலசப்படும். மேலும் காயங்கள் எவ்வகையான செயற்ப்பாட்டின் பொழுது உருவானது என்பது பற்றியும் ஆராயப்படும். மேலும் இறந்தவருக்கு ஏதாவது இயற்கையான நோய் நிலைகள் இருந்ததா எனவும், இறந்தவரின் இரைப்பையில் அதாவது நஞ்சு மற்றும் சாராயம் உள்ளதா என பார்க்கப்படும். பெண்களுக்கு குறிப்பாக அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்களா என்று ஆராய விசேட முறைகள் (pelvic dissection) கையாளப்படும். ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் (ancillary investigations) எனப்படும் பொழுது இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் உள்ளனவா என்று ஆராயப்படும்.
சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் (circumstantial evidence) எனப்படும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் காணப்படும் CCTV பதிவுகள், இறந்தவரின் தொலைபேசி உரையாடல்கள் போன்றன தேவை கருதி ஆராயப்படலாம்.
இவற்றிக்கு மேலதிகமாக நேரில் கண்ட மற்றும் உறவினர்களின் சாட்சியங்கள் (witnesses) பொலிஸாரினால் பதியப்படும். நீதிமன்றில் குறுக்கு விசாரணை நடைபெற்று சாடசியங்களின் நம்பகத்தன்மை (credibility) பரீட்ச்சிக்கப்படும். தேவையேற்படும் பொழுது இறந்தவர்களின் உறவினரிடத்து இறந்தவர் இறுதியாக என்ன மன நிலையில் இருந்தார் என அறிய விஞ்ஞா ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட psychological autopsy போன்றனவும் செய்யப்படலாம்.
மேலும் வழக்கு விசாரணையின் பொழுது போலீசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் நம்பகத்தன்மையும் பரீட்ச்சிக்கப்படும். இறுதியில் நீதிபதி மேற்குறிய எல்லாவற்றிலும் ஓர் ஒத்திசைவுத்தன்மை (corroboration) இருக்கும் பட்சத்தில் மாத்திரமே கொலை என்று தீர்மானிக்கப்படும்.
முக்கியமாக முன்னைய காலங்களை போலல்லது தற்பொழுது விஞ்ஞா ரீதியான ஆதாரங்கள் (scientific evidence) குற்றங்களை உறுதி செய்ய பெரிதும் உதவுகின்றன மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் அதிகமாகும்.
இவற்றினை எல்லாம் விடுத்து கைகளை கட்டி கிணத்தில் தள்ளிவிட்டால் அது தற்கொலையா? உடலில் காயங்கள் இல்லாமல் ஒருவரை அரைமயக்கத்துக்கு கொண்டு வந்த பின்னர் கைகளை கட்டி கிணத்துக்குள் தூக்கிப்போட்டிருக்கலாம் தானே? (இவ்வாறு போட்டிருந்தால் இறந்தவரின் இரத்தம், மூத்திரம், பித்தம், இரைப்பையின் உள்ளடக்கம் போன்றவற்றில் ஏதாவது நச்சு அல்லது மனிதரை சுயநினைவில்லாமல் ஆக்கும் மருந்துகள் நிச்சயம் காணப்படும்)
அப்படி செய்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இல்லையா? (சாத்தியக்கூறு எனப்படும் பொழுது குற்றவியல் வழக்கில் அது 100% மாக இருக்க வேண்டும்) என்று முகநூலில் பதிவுகள் பல இடலாம் . ஆனால் நிஜத்தில் நீதிமன்றிலோ அல்லது திறந்த மரண விசாரணையின் பொழுதோ சாத்தியகூறினை நீருபிப்பது கடினமாகும் அவை நிச்சயம் நிராகரிக்கப்படும்.
