தாயே தனது குழந்தைகளை கொலை செய்தால்???

பத்து மாதங்களே நிரம்பிய இரு பெண் குழந்தைகளை அண்மையில் பெற்ற தாயாரினால் அவர்களின் வீட்டின் கழிப்பறையில் வைத்து கழுத்து அறுக்கப் பட்டு கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தபின்னர் தாயார் தான் செய்தவற்றினை அதாவது தானே குழந்தைகளின் கழுத்தினை அறுத்து கொன்றதாக கணவனுக்கு கூறிய நிலையில் விடயம் மேலும் பரபரப்பாகியது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது தாயானவள் ஏற்கனவே ஒரு மனநோயாளி எனவும் அவரது மகன் ஒருவர் கடந்த ஆண்டு சலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததினை தொடர்ந்து அவரின் மனநிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்ததாகவும் அவர் உரிய மருத்துவ வசதிகளை பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெற்ற தாயே பச்சிளம் பாலகர்களை கொல்லும் சம்பவங்கள் முன்பும் அரிதாக நடைபெற்றுள்ளன. இவ்வாறு மனநிலை பாதிக்கப் பட்ட குழந்தைகளை பெற்ற தாய் (biological mother ) தனது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொல்லுதல் “infanticide” என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். முக்கியமாக இங்கு தாயானவள் ஏற்கனவே மனநோயாளியாக இருக்கலாம் அல்லது குழந்தை பேற்றின் காரணமாக / பாலூட்டுவதன் காரணமாக அவர் மனநோயாளியாக (unsound mind and disturbed)  இருக்க வேண்டும். இவ்வாறு மனநிலை குழம்பியதன் காரணமாகவே தாய் இவ்வாறான செயல்களை செய்வார். இது தவிர அவரின் மனதில் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற மனா உந்துதல் பொதுவாக இருப்பதில்லை.

சாதாரணமாக பிள்ளைப்பேற்றின் பின்னர் உடலில் சடுதியாக ஏற்படும் ஹோர்மோன் மாற்றம் காரணமாவும் பிள்ளை பேற்றினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாகவும் மேலும் பாலூட்டுவதன் காரணமாகவும் இதுவரை சாதாரணமாக இருந்த பெண்ணின் மனதில் பல்வேறு பட்ட மாற்றங்கள் நிகழும் அதன்காரணமாகவே அவர்கள் மனம் குழம்பிய நிலைக்கு உள்ளாகின்றனர். இந்த மனக்குழப்பம் ஆனது ஓரிரு நாள் நிலைத்து நிற்கும் சாதாரண மனக்குழப்பத்தில் (Postpartum Blues) இருந்து தீவிரமான மனநோய் (Postpartum Psychosis) வரை இருக்கலாம்.

சாதாரணமாக கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் இவ்வாறு ஹோர்மோனில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் மிக எளிதாக மனதில் மனதில் தைரியம் அற்றவர்களாக மாற்றம் அடைந்து விடுவார்கள். பொதுவாகவே சிறுசிறு குடும்ப சண்டைகளுக்கு எல்லாம் விபரீதமாக முடிவெடுக்க முனைவார்கள். விஞ்ஞான ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அண்மையில் பிள்ளைப்பேற்றிக்கு உள்ளான பெண்கள் ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆபத்திற்கு உரியவர்கள் (risk population for suicide) என்று வகைப்படுத்துகின்றன.

963

இதன் காரணமாகவே எமது முன்னோர்கள் ஓர் பெண் கர்ப்பிணி ஆகும் பொழுது அவளை தனது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு , பிள்ளைப்பேற்றின் பின்னர் குறித்த காலத்தின் பின்னரே கணவனின் வீட்டிற்கு திரும்பவும் அழைப்பார்கள். இதன் மூலம் பெண் ஆனவள் தற்காலிகமா மாமியார் கொடுமையில் இருந்து விடுபடவும், அந்நியமான சூழ்நிலையில் இருந்து தனக்கு பழக்கமான சூழ்நிலையில் வாழவும், பெற்றோரின் மற்றும் சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்க வழி ஏற்படும். இதன் காரணமாக பெண்ணிற்கு திடமான மனநிலை உண்டாகும் இதனால் மேற்குறிய ஆபத்தான நிலைகள் தடுக்கப்படும். தற்காலத்தில் இவை சாத்தியப்படாத பொழுது கணவர்மார் தமது மனைவியர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மனைவி ஏற்கனவே மனநோயாளி என்றால் அவரின் நோய் நிலை அதிகரிக்க வாய்ப்புண்டு அதனால் வைத்திய ஆலோசனை கட்டாயம் பெறவேண்டும்

தற்பொழுது இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு மனநிலை குழம்பிய தயாரினால் ஏற்படுத்தப்படும் மரணங்களுக்கு பொதுவாக கொலைக்குற்ற சாட்டு செய்யப்படுவதில்லை ஆனால் தாயானவள் கணிசமான காலம் மனநல வைத்திய சாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற நேரிடும். இவ்வாறன வழக்குகளில் சட்ட வைத்திய மனநல வைத்தியர்களினதும் (forensic psychiatrist) சட்ட வைத்தியர்களினதும் (forensic psychologist) பங்கு அளப்பெரியது. (Under the law it can be considered as a culpable homicide not amounting to murder. Exception 5 of Section 294 of the Penal code)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.