யாழிற்கு புதிய அச்சுறுத்தல்

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் குளவியின் தாக்கம் காரணமாக இருவர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயும் ஒருவர். அவரின் சிசுவும் இறந்த நிலையில் பிறந்தது. இது தவிர பலர் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். முன்னைய காலங்களில் பொதுவாக மலையக தேயிலைத் தோட்டங்களை அண்டியும் சிகிரியா போன்ற காட்டுப்புறங்களிலுமே இத்தகைய காட்டுக்குளவியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு குளவிகளின் தாக்கம் பரவியுள்ளது.
இப்பதிவில் இக்குளவியின் தாக்கத்திர்ற்கு உள்ளான ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என்பது பற்றி சட்ட மருத்துவ ரீதியில் அலசுவோம்.

பல நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பொழுது வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதில்லை உதாரணமாக முதலில் தேனீ தான் குத்தியது  என்பார்கள் சிறிது நேரத்தில் உறவினருடன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு கூறுவார்கள் டொக்டர் தேனீ அல்ல குளவியே குத்தியது என்பார்கள். கீழே உள்ள படமானது தேனிக்கும் குளவிக்கும் உள்ள உருவவியல் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றது.

பொதுவாக தேனீயானது மனிதன் ஆனவன் அதன் கூட்டினை கலைக்கும் பொழுது தான் தாக்கும் . ஆனால் குளவியானது மனிதனை தேடிச்சென்று தாக்கும் இயல்பு உடையவை.குளவியானது மனிதனை தாக்கும் போது தேனீயினை விட அதிகளவு நச்சினை உட்செலுத்தும் அத்துடன் அதன் நச்சானது மிக்க வீரியம் கூடியது. எனவே சிகிச்சை அளிக்கும் வைத்தியர்ளுக்கு என்ன குத்தியது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். குளவியானது வாயினால் கடித்தும் உடலின் பின்புறத்தில் உள்ள கொடுக்கு (A sting is delivered by a posterior, tapered, needle like structure designed to inject venom). மூலமும் மனித உடலில் நச்சிணை உட்செலுத்துகின்றன.

04
அடுத்து குளவி குத்தி மரணம் எவ்வாறு நிகலுகின்றது என்பது பற்றி பார்ப்போம். உண்மையில் மரணமானது உட்செலுத்தப்பட்ட நச்சானது உடலில் ஏற்படுத்தும் ஒவ்வாமை தாக்கத்தினாலும் அதன் நச்சியல் இயல்பினாலும் ஏற்படுகின்றது. அதாவது சில மரணங்கள் ஒவ்வாமையினால் மட்டுமே ஏற்படும் சில மரணங்கள் நச்சியல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால் பல இறப்புக்கள் மேற்கூறிய இரண்டினதும் சேர்க்கைகள் காரணமாகவே ஏற்படுகின்றது.
ஒவ்வாமைத் தாக்கம் எனப்படும் பொழுது சாதாரணமாக தோலில் ஏற்படும் எரிவு, வீக்கம் (local allergic reaction) போன்றவற்றில் இருந்து சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும் தாக்கம் ( anaphylatic shock) வரை இருக்கும். இங்கு ஒவ்வாமையினால் மரணம் நிகழும் பொழுது உட்செலுத்தப்பட்ட கொடுக்குகளின் எண்ணிக்கை அதாவது குத்திய குளவிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்காது. ஒருசில குளவிகள் குத்தினாலே மரணம் சம்பவிக்கும்.

03
மாறாக குளவியின் நச்சின் (Toxic effect) இயல்பால் மரணம் நிகழ வேண்டும் எனில் குறிப்பிடத்தக்க அளவில் குளவிகள் குற்ற வேண்டும். உதாரணமாக மனிதனை 500 தொடக்கம் 1200 வரையான தேனீக்கள் குற்றினாலே செலுத்தப்பட்ட நஞ்சின் விளைவாக மரணம் சம்பவிக்கலாம் (The human LD50 for honey bee stings has been estimated to be between 500-1200 stings)
இவ்வாறு அதிகளவு குளவிகள் குற்றும் பொழுது அதிகளவு நஞ்சேற்றல் (mass envenomation) ஏற்பட்டு உடனடியான சிறுநீரக செயலிழப்பு (acute kidney injury), தசைகளில் ஏற்படும் அழற்சி (rhabdomylysis),  மற்றும் இரத்தம் அழிவடைதல் (Haemolysis) போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு குளவியனது குற்றும் பொழுது அவர்களுக்கு புதிதாக மாரடைப்பு அல்லது இருதய துடிப்பில் ஒழுங்கின்மை (arrhythmia) போன்றன ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
இது தவிர குளவியானது கலைத்து கலைத்து குத்தும்  பொழுது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகி அல்லது கிணறு போன்ற குழிகளில் விழுந்து அல்லது பனை போன்ற உயரமான மரங்களில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு.
குளவிகள் குற்றின் நோயாளியை வீட்டில் வைத்து குற்றிய இடத்திற்கு சுண்ணாம்பு அல்லது புளி பூசுதல் அல்லது விச கடி வைத்தியர்களின் சிகிச்சை போன்ற பாரம்பரிய முறைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் பல சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்தினை உண்டு பண்ணியுள்ளது. ஏனெனில் நான் இங்கு விஞ்ஞான ரீதியில் உடலியல் தொழில் பாடுகளை கண்காணிக்க முடியாமையே ஆகும். மேலும் இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக வைத்தியசாலையில் காலதாமதமாகவே அனுமதிக்கப்படுவர் இதன் காரணமாக அவர்கள் உயிர் ஆபத்திணை எதிர்நோக்குவர்.

மேலும் சிறுவர்களும் வயோதிபர்களும் குளவி கலைத்து குத்தும் பொழுது அவர்களால் இலகுவில் தப்பி ஓட முடிவதில்லை இதன் காரணமாக குளவிகளின் தாக்குதலினால் இவர்களே அதிக பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.