அண்மையில் இரத்னபுரி மேல் நீதிமன்றினால் வைத்தியர் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 2016ம் ஆண்டு 16 வயது சிறுவனும் காலில் காயமடைந்த நிலையில் அவனது சகோதரனுடன் வைத்தியசாலைக்கு மருந்து கட்டிட சென்றான். அப்பொழுது குறித்த வைத்தியர் தனது விடுதியில் இருந்துள்ளார். அவரின் அறிவுறுத்தல்கள் படி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அச்சிறுவனை வைத்தியரின் விடுதிக்கு அனுப்பியுள்ளார். அங்கு அக்குறித்த வைத்தியர் அச்சிறுவனை தனது அறையில் வைத்து காயத்திற்கு கட்டுப்போடும் சாக்கில் அவனது ஆடைகளை களைந்து பாலியல் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்படுத்த முயன்ற வேலை அவரின் பிடியில் இருந்து சிறுவனும் சகோதரனும் தப்பி ஓடி, போலீசாரிடம் முறையிட்டனர் அதனைத்தொடர்ந்து மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு இலங்கையில் மேலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன உதாரணத்திற்கு 2007ம் ஆண்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரினால் 23வயது நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு 6ம் மாடியில் இருந்து தள்ளி விழுத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தவிர நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.
சாதாரண பொதுமக்களில் பலருக்கு வைத்தியர்கள் தவறு செய்ய மாடடார்கள் என்ற அதீத நம்பிக்கையும், வைத்திய பரிசாதனைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்மையுமே இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற காரணமாக அமைந்து விடுகின்றன.
வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது பொதுவாக ஆண் நோயாளியாயின் ஆண் உதவியாளர் (Chaperone) ஒருவரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளர் ஒருவரும் துணை இருத்தல் வேண்டும். இங்கு உதவியாளர் என்பவர் பொதுவாக வைத்தியசாலை ஊழியர் ஒருவராக இருப்பார் அவ்வாறு இல்லாத பட்ஷத்தில் நோயாளியுடன் கூட வருபவர் வைத்தியரின் அனுமதியுடனும் நோயாளியின் அனுமதியுடனும் உதவியாளராக செயற்படலாம்.
அந்தரங்கமான வைத்திய பரிசோதனைகளை (intimate medical examinations) உதாரணமாக இனப்பெருக்க உறுப்புக்களை பரிசோதித்தல் மற்றும் மார்பகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும்பொழுது ஆண் நோயாளி ஆயின் ஆண் உதவியாளரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளரும் கூட இருத்தல் கட்டாயமானதாகும். மேலும் இவ்வாறான பரிசோதனைகள் ஓர் மறைவான இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் வேறு வைத்திய சாலை ஊழியர்கள் பிரசன்னமாயிருப்பின் அவர்களை அப்பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூற நோயாளிக்கு முழு உரிமையும் உண்டு. நோயாளி அவ்வாறு கூறுவாராயின் வைத்தியர்கள் அக்கூற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் நோயாளிகள் குறித்த வைத்தியருடன் எவ்வாறான சோதனைகளை எவ்வாறு மேற்கொள்ளுவீர்கள் என கேட்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நோயாளி கேட்கும் பொழுது வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும். அண்மையில் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கட்டு ஒன்றுடன் வைத்திய பரிசோதனைக்கு சென்ற பொழுது வைத்தியர் போதிய விளக்கங்கள் கொடுக்காமல் அவரின் மார்பங்களை பரிசோதனை செய்து பெரும் சர்ச்சையில் மாட்டினார். உண்மையில் மருத்துவ ரீதியாக அவ்வைத்தியர் மார்பில் ஏதாவது கட்டி இருக்கின்றதா எனவும், அது கழுத்து பகுதிக்கு பரவியதா எனவும் அறியவே அப்பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நோயாளிக்கு வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.
சாதாரண வைத்திய பரிசோதனைகளை விட சட்ட வைத்திய பரிசோதனைகள் (Medico – legal examination) மேற்கொள்ளப்படும் பொழுது போலீசாரே, இராணுவத்தினரோ அல்லது சிறைக்காவலரோ சோதனை மேற்கொள்ளப்படும் நபரின் அருகில் இருக்க அனுமதிப்பதில்லை.
இது தவிர வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினை நோயாளிக்கு கொடுப்பதுவும், தொழில் முறையற்ற ரீதியில் உரையாடல்களை மேற்கொள்ள முனைவதும் தொழில்முறை துஸ்பிரயோகமே.
வைத்தியசாலை தவிர வைத்தியரின் விடுதி, வீதியோரங்கள், வைத்தியரின் வாகனம் அல்லது வீடு அல்லது போலீசாரின் வாகனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகள் மிகவும் சர்ச்சைக்கு உரியவை. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
