அண்மையில் இலங்கையில் மீரிகம பகுதியில் கசிப்பு அருந்திய பலர் கசிப்பு விசமானதன் காரணமாக இறந்துள்ளனர். தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 11 இணை எட்டியுள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.
முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல் (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால் என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.
நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.
கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது. ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.
ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.
உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.
இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால் கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.
இது தொடர்பான இன்னொரு பதிவு

One thought on “11 பேரினை பலிகொண்ட …..”