பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சாதாரண ஊஞ்சல் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உயிர்களை பறித்துவிடும். இருதினங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் துயர சம்பவம் பொகவந்தலாவ பிரதேசத்தில் நடைபெறுள்ளது. குறிப்பாக பெரியவர்கள் யாரும் அற்ற நிலையில் தனியே ஊஞ்சல் ஆடிய சிறுமியை இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் வருடம் ஒன்றில் சில சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே. ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன , எவ்வாறு இந்த சம்பவங்களை தடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.. ஊஞ்சல் ஆடுதல் என்பது தமிழரின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விடயம் ஆகும். தமிழரின் கடவுள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடியிருப்பர். வித்தியாசம் பாவித்த பொருட்கள் மாத்திரமே. எம்மில் பலர் அம்மாவின் சேலை, மாடு கட்டும் நைலான் கயிறு, பொச்சு கயிறு போன்றவற்றினை பாவித்து ஊஞ்சல் ஆடியிருப்போம். இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு இவ்மரணங்கள் நிகழுகின்றது? என்பதே.



சட்ட மருத்துவத்தில் இவ்வாறு நடைபெறும் மரணங்கள் தற்செயலாக தூங்கிய மரணங்கள்(accidental hanging) என்ற வகைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகத்தில் இவ்வாறு பல மரணங்கள் சம்பவித்துள்ளமையினை உரிய விஞ்ஞான அறிக்கைகள் மூலம் அறியலாம். முக்கியமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பின்னணியினை பார்த்ததால் சிலவிடயங்கள் எமக்கு புலனாகும். அவையாவன
1. நீண்ட கயிற்றில் ஊஞ்சல் ஆடல் – ஊஞ்சல் கயிறு இலகுவாக முறுக்கி கழுத்தினை சுற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு
2. மேலும் கீழுமாய் (pendulum movement) ஆடாமல் ஒரே இடத்தில் இருந்து சுற்றுதல் – ஒரே இடத்தில் சுற்றுவதால் ஊஞ்சல் கயிறு இலகுவாக சுற்றுப்படும் மேலும் ஊஞ்சல் ஆடுபவரும் தலை சுற்றல் ஏற்பட்டு விழ அல்லது கயிற்றில் அகப்பட சாத்தியக்கூறு அதிகம் உண்டு
3. பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி அதிக நேரம் ஊஞ்சல் ஆடுபவர்கள்.
4. ஊஞ்சலில் இருக்காமல் நின்றுகொண்டு அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடுபவர்கள்
5. முக்கியமாக இங்கு கழுத்தினை சுற்றி முடிச்சு வருவதில்லை மாறாக கயிறானது முறுக்கி இறுக்குவதே காரணம் ஆகும்.
இவ்வாறு ஊஞ்சல் ஆடும் பொழுது தன்னிச்சையாக கயிறு திரிந்து சிறுவர்களின் கழுத்து போன்ற பகுதிகளை இறுக்குவதை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்
1. ஊஞ்சலில் இருக்கை பகுதி கதிரை போன்றவற்றினால் அல்லது மரப்பலகையினை குறுக்காக வைத்து செய்தல் – இதன் காரணமாக கயிறு சிறுவர்களை நெருக்காது.
2. ஊஞ்சலில் மேலே கட்டிடப்படும் கயிறுகள் இரண்டும் குறித்த தூரத்தில் இருக்கத் தக்கவாறு கட்டல் அல்லது ஊஞ்சலில் மேற்பகுதியில் கயிறுகள் இரண்டுக்குக்கும் இடையில் பலகை ஒன்றினை வைத்து கயிறுகள் இரண்டினையும் ஒன்று சேராது தவிர்த்தல்.
3. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை ஊஞ்சல் விளையாட விடல்.
4. சிறுவர் பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல் போன்று இரும்பு சங்கிலியால் ஆன ஊஞ்சலில் சிறுவர்களை விளையாட விடல்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது சிறுவன் ஒருவனின் கழுத்து பகுதியானது இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் இறுக்கப் பட்டு இருந்தாலே மூளை இறப்பு (hypoxic brain death) ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
எனவே சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடும் பொழுது பெரியவர்கள் ஆகிய நாம் அவதானமாய் இருப்போம், அநியாய உயிரிழப்புக்களை தடுப்போம் .
நன்றி
