அவர் அரச உத்தியோகத்தில் அதிகாரமிக்க பதவியில் உள்ளவர். அவருக்கு சிறுவயது முதலே சலரோகம் உள்ளது. அதாவது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சலோரகம் உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவருக்கு நீண்டகாலமாக சலரோகம் இருந்ததன்காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரத்தொடங்கியது. காலில் கிருமித்தொற்று, சிறுநீரில் கிருமித்தொற்று.. என்றவாறு பல்வேறு பட்ட பிரச்சனைகள், அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதியாகி தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிர்ப்பந்தம்.
இவ்வாறு அவர் ஒருமுறை நான் வேலை செய்யும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பொழுது எனது உறவினர் ஒருவர் அவரினை போய்ப்பார்த்து வரும்படி வேண்டுகோள் விடுத்தார். வைத்தியராக வேலை செய்யும் பொழுது இவ்வாறன அன்புக்கோரிக்கைகள் சிலவேளைகளில் தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.
நான் அவரினை பார்வையிட சென்ற பொழுது வைத்தியசாலையின் கட்டிலின் அருகில் உள்ள சிறு அலுமாரியின் மேல் புதிய ஏழு நெஸ்டோமோல்ட் டின்கள் அடுக்கப்பட்டிருந்தன. நானும் என்னை அறிமுகப்படுத்தி அவரினை சுகம் விசாரிக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் நெஸ்டோமோல்ட் பாவிக்கக் கூடாது தானே என்று. அடுத்து அவர் கூறிய பதில் தான் ஆச்சரியத்தினை தந்தது. புதிதாக உள்ள நெஸ்டோமோல்ட் அனைத்தும் அவரது உறவினர்களும் மற்றும் அவரது அலுவலகத்தில் வேலை செய்யபவர்களும் தான் கொண்டுவந்தவை. மேலும் அவர் கூறியதாவது தான் அவற்றினை பாவிப்பதில்லை என்றும் இவ்வாறு தன்னை பார்க்க வருபவர்கள் தருபவற்றினை தான் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மனிதனாக பிறந்துவிட்டால் நோய்வாய்ப்படுவதும் காயங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளே. இவ்வாறே மனிதன் ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது வைத்தியசாலை செல்லவேண்டிய தேவை ஏற்படும்.
எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை பார்வையிட செல்லும் பொழுது எவ்வாறான உணவு பொருட்களை அல்லது பால்மாவகைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவதில்லை. பலர் ஏனொதானோ என்ற வகையில் வெறுமனே கடமைக்காக எதாவது ஒரு பொருளினை வாங்கிக்கொண்டு செல்வார்கள். வேறுசிலர் இலகுவாக எந்த பொருள் கிடைக்கின்றதோ அதனை வாங்கிக்கொண்டு செல்வார்கள். சிலர் கணக்கு பார்த்து வாங்குவார்கள். மேலும் சிலர் பழவகை போன்றவற்றினை வாங்கிச்செல்ல அது கௌரவக்குறைவு என்று நினைக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் வாங்கிக்கொடுக்கும் உணவு அல்லது பொருட்களை நோயாளி பயன்படுத்துவாரா? என்று கூட நாம் சித்திப்பதில்லை. இதனால் நாம் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராகவே போகும். தகுந்த பொருட்களை தெரிவுசெய்ய நாம் அதிகம் படித்திருக்க தேவையில்லை. நோயாளியின் நோய் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது. தேவையேற்படின் நோயாளியினை அல்லது அவர்களின் உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களின் தேவையினை கண்டறிந்துகொள்ளலாம்.
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
குறிப்பு – மேற்குறித்த நிறுவனங்களின் உற்பத்தியினை அல்லது நற்பெயரினை பாதிக்கும் நோக்கில் இப்பதிவு இடப்படவில்லை.
