தற்பொழுது தேர்தல் காலம் நெருங்குவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல உறுப்பினர்கள் தமக்கு நிதியினை கொண்டு கோவில்களின் வெளி வீதிக்கு தார் ஊற்றி கார்ப்பெட் வீதியாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சுகாதார சம்பந்தமான பிரச்சனைகளை இப்பதிவு ஆராய்கிறது. முக்கியமான சிலபிரச்சனைகளை இங்கு பார்ப்போம்
- இயற்கையில் ஒவ்வொரு சூழல் தொகுதியிலும் காணப்படும் பல்வேறுபட்ட நுண்ணங்கிகளே அங்கு சேரும் கழிவுகளை உக்கி அவற்றினை சூழலில் இருந்து அகற்றுகின்றது. நாம் சாதாரணமாக கோவிலின் வெளிவீதியில் இருக்கும் மணலிலான வீதியினை அகற்றிவிட்டு தார் ஊற்றும் பொழுது மணலில் உள்ள நுண்ணங்கிகள் இல்லாமல் போகும். இதனால் தாரின் மேற்பரப்பில் தங்கும் கழிவுகள் அதிக காலத்தின் பின்னரே உக்கி அழிவடையும். இதன் காரணமாக தாரின் மேற்பரப்பில் நாய் போன்ற மிருகங்களின் மலக்கழிவுகள் கழிவுகள், தாவரங்களின் இலை போன்ற கழிவுகள், மனிதர்களால் போடப்படும் போன்ற கழிவுகள் கழிவுகள் நீண்டகாலமாக தங்கி நிற்கும். இவை வெளி வீதியில் அங்க பிதிஷ்டை செய்யும் அடியவர்களின் உடலினை அடையும் சந்தர்ப்பம் அதிகமாகும். சாதாரணமாக நல்லூரில் வெளிவீதியில் போடப்படும் மணல் வீதியில் இருந்தே நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் மலத்தில் இருக்கும் ஒட்டுண்ணி புழு ஆனது வெளி வீதியில் அங்க பிரதிஸ்டை செய்த அடியவர்களை தாக்கி நோய் நிலையினை உண்டாக்கிய சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- போடப்படும் தார் கறுப்பு நிறத்திலேயே இருக்கும். அதனால் இப்பொழுது என்ன பிரச்சனை? கறுப்பு நிறமானது குறைந்த நேரத்தில் அதிகளவு வெப்பத்தினை உறிஞ்சும் அதேவேளை உறிஞ்சிய வெப்பத்தினை அதிகளவில் காலும் தன்மையுடையது. இந்த பௌதீகவியல் விளக்கம் பௌதீகவியல் படித்த யாவரும் அறிந்ததே. இதனால் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் அதிகளவு வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாவர். மேலும் நீர் அடித்து வீதியினை குளிர்மை படுத்த முயன்றால் மணல் வீதி மாதிரி நீர் தரையினுள் உள்ளிறங்காது, மேற்பரப்பில் தங்கிநிற்கும்பொழுது ஏற்கனவே உள்ள மலக்கழிவுகள் அதில் கரைந்து அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்கள், வெளிவீதியால் நடந்து செல்பவர்கள் ஆகியோரில் படிவடையும்.

- திருவிழாக்காலங்களில் மாலை நேரங்களில் சிறுவர்கள் பொதுவாக வெளிவீதியில் ஓடி விளையாடுவார்கள். இவ்வாறு மணல் விளையாடும் பொழுது சிறுவர்கள் பலசந்தர்ப்பங்களில் சறுக்கி விழுந்த சந்தர்ப்பங்கள் உண்டு. மணலில் இவ்வாறு விழும் பொழுது பொதுவாக காயம் வராது ஆனால் தார் வீதியில் விழும் பொழுது காலில் பலத்த உரசல் காயம் ஏற்பட சாத்தியக்கூறு உண்டு.
- மாலை நேரங்களில் வெளிவீதியில் அதுவும் மணலில் குந்தி இருந்து கதைத்த கதைகளை சாதாரண மனிதன் ஒருவனால் மறக்க முடியாது. அதிக வெப்பம் காரணமாக தார் வெளிவீதியில் குந்தி இருக்க கூட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே சிறுவர்கள் மணலில் சிற்பம் அல்லது சிலை போன்றவற்றினை செய்து காட்சிப்படுத்துவதும் காலப்போக்கில் இல்லாமல் போகும்.
ஒட்டு மொத்தத்தில் தார் வீதி இடுவதினால் அல்லது சீமெந்து தரை இடுவதினால் ஏற்படும் நன்மைகளை விட பல்வேறுபட்ட தீமைகளே ஏற்படும். அத்துடன் அங்க பிரதிஸ்டை செய்யும் அடியவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.
