நம்மில் பலர் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றினை இறைச்சிக்காக வெட்டும் பொழுது ஈரலினை வேறாக எடுத்து கறி வைப்பார்கள். இவ்வாறே தற்பொழுது சூப்பர் மார்க்கெட்டுகளில் கோழியின் ஈரல் மற்றும் உள் அவயவங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் ஏனைய விலங்குகளின் ஈரல் போன்றவை விற்பனைக்காக வந்துள்ளன. நம்மவர் விலங்குகளின் ஈரலினை சிறுவர்களுக்கும், இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும் மிக்க சத்து நிறைந்தது என்று விசேட கறி கொடுப்பார்கள். உண்மையில் ஈரல் விற்றமின் மற்றும் கனியுப்புக்கள் நிறைந்தது. குறிப்பாக விற்றமின் A,B,E மற்றும் K போன்றனவும் கனியுப்புக்களான இரும்பு, பொசுபரசு, செம்பு மற்றும் மக்னிசியமும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் மனிதன் விலங்குகளின் ஈரலின் தொழில் என்னவென்றால் சமிபாட்டுத்தொகுதியில் இருந்து உடலில் உறிஞ்சுப்பட்டு வரும் உணவில் உள்ள எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றினை வடிக்கட்டி பித்தம் மூலம் மீளவும் சமிபாட்டுத்தொகுதிக்கு அனுப்பி அவற்றினை மலம் மூலம் உடலினை விட்டு வெளியேற்றுதலே ஆகும் (The liver detoxifies chemicals and metabolizes drugs). இந்நிலையில் விலங்குகளின் ஈரல் ஆனது எவ்வாறு மனித நுகர்விற்கு உகந்ததாக அல்லாமல் மாறியது என்பதே தற்போதைய கேள்வி ஆகும். மனிதன் எப்பொழுது வர்த்தக நோக்கம் கருதி கோழி, ஆடு மற்றும் ஏனைய விலங்குகளை உற்பத்தி செய்ய தொடங்கினானோ, அன்று தொடக்கம் இப்பிரச்சனை தொடங்கிவிட்டது. குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை அதாவது இலாபத்தினை பெறும் முகமாக மனிதனால் இவ்வாறு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் உணவாகவும் மருந்தாகவும் கொடுக்கப்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன ஈரலில் தேங்கி அதிக அளவில் உள்ளதால் அவை மனித நுகர்வுக்கு உகந்ததா என்ற கேள்வி எழுகின்றது. அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் புரொயிலர் கோழிகளின் மற்றைய உறுப்புகளை விட ஈரலில் ஆசனிக்கு என்ற பார உலோகம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக நோக்கம் கருதி வளர்க்கப்படும் விலங்குகளின் ஈரலில் எவ்வாறு மனிதனுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன சேர்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
- விலங்குகளின் குறிப்பாக வர்த்தக நோக்கத்தில் வளர்க்கப்படும் கோழிகளின் ஈரலில் உணவுச்சங்கிலி மூலமாகவும், வழங்கப்படும் உணவுகள் மூலமும் ஆசணிக் , கட்மியம் போன்ற பார உலோகங்கள் செறிவடைகின்றன. இவ்வாறே நீர்கொழும்பின் கடல்நீரேரியில் உள்ள மீன்களிலும், உள்ளூரில் விளைந்த சில அரிசி இனங்களிலும் மேற்குறித்த அதிகளவு பார உலோகங்கள் இருப்பது கன்டுபிடிக்கப்படுள்ளது.
- விலங்குகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயினை குணப்படுத்தவும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் அதிகளவில் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாவிக்கப்படும் மருந்துகளின் பக்கவிளை பொருட்கள் (metabolic products ) அதிகளவில் ஈரலில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக levamisole (drugs used to treat parasitic worms) என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் புரொயிலர் கோழியின் ஈரலில் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் விலங்கு இறைச்சி அதிலும் ஈரல் மூலம் மனிதனை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
- குறிப்பாக பன்றி மற்றும் ஏனைய மிருக வளர்ப்புகளில் அவற்றில் கொழுப்பின் அளவினை குறைத்து தசையின் அளவினை அதிகரிப்பதற்காக பல்வேறுபட்ட ஹோர்மோன் வகைகள் பாவிக்கப்படுகின்றன. முக்கியமாக zeranol என்ற செயற்கை ஹோர்மோன் மற்றும் 17β-oestradiol என்ற இயற்கையாக காணப்படும் ஹோர்மோன்கள் உள்ளடங்கும். முக்கியமாக இவை விலங்குகளின் ஈரல் மூலம் மனிதனை அடைந்து புற்று நோய் உட்பட்ட பல்வேறுபட்ட தாக்கங்களினை விளைவிக்கும் (Studies have shown that growth hormone residues in animal liver adversely affect human health including neurobiological, genotoxic and carcinogenic effect).
- விலங்குகளின் ஈரலில் அதிகளவு விற்றமின் A உள்ளது இதன் காரணமாக அதிகளவில் மற்றும் அடிக்கடி விலங்கு ஈரலினை உணவாக உட்கொள்ளுபவர்கள் விற்றமின் A நச்சாக்கத்திற்கு உட்பட்டதினை மருத்துவ அறிக்கைகள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார் இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அவர்களின் கருப்பையில் இருக்கும் குழந்தையும் விற்றமின் A நஞ்சாக்கத்தினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. மேலும் கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்களும் விலங்கு ஈரல் உணவினை தவிர்ப்பது நல்லது.
இறுதியில், ஈரல் கறி சாப்பிடலாமா அல்லது சாப்பிட கூடாதா என்னதான் முடிவு? விடை இதுதான், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
