அன்று காலையிலேயே எனது அலுவலகத்தின் முன்னால் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கூட்டமாக நின்றார்கள். அவர்களை விலத்தியவாறு ஒருவாறு உள்நுழைந்தேன். அலுவலக உதவியாளர் தயங்கியபடி கூறினார், சேர் உங்களை சந்தித்து கதைக்க குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலையோடு சம்பந்தமானவர்கள் வந்திருக்கின்றனர் என்றார். அது வடமாகாணத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள ஓர் பாடசாலை அங்கு கடந்த வாரத்தில் அங்கு நடைபெற்ற ஓர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பாகவே அவர்கள் கதைக்க வந்திருப்பது தெரிந்தது. உடனே அலுவலக உதவியாளருக்கு கூறினேன் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவியினை பரிசோதித்து விட்டேன். இது சம்பந்தமாக அவர்களுடன் கதைக்க வேண்டிய தேவையில்லை அவர்களை வெளியே அனுப்பும்படி கூறினேன். அலுவலக உதவியாளர் நீண்ட பகீர பிராயத்தனதின் பின்னர் அவர்களை வெளியே அனுப்பிய பின்னர் என்னிடம் கூறினார் சேர் இது அவர்களுக்கு ஒரு சின்ன கேஸாம் அதாவது அவர்கள் சம்பத்தப்பட்ட பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு முத்தமிட்டது தொடர்பானது. குறித்த ஆசிரியர் மிகவும் நல்லவராம் அத்துடன் பாடசாலை அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றவராம். எனவே மருத்துவ அறிக்கையினை வடிவாக பார்த்து அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்து சென்றனர். மேலும் நான் எனது உதவியாளர் மூலம் அறிந்து கொண்டது யாதெனில் முத்தம் கொடுத்தல் என்பது பாலியல் துஷ்பிரயோகங்களில் பாரதூர மற்ற சாதாரண விடயம் எனவே இவ்வாறான விடயங்களை பெரிதாக்கவும் கூடாது, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கூடாது என்பதே.
இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் முத்தம் இடல், கட்டியணைத்தல் போன்ற பல்வேறு உடல் தொடுகைகளுடனான துஸ்பிரயோகம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் (Grave sexual abuse) என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது குதத்தினுள் அல்லது உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். (பிரிவு-365ஆ- குற்றவியல் கோவை)
இங்கு பாலியல் துஸ்பிரயோகத்தின் தன்மையினை விட அப்பெண்ணிற்கு இவ்வாறான சமூக, கலாச்சார விடயங்களுக்கு ஒவ்வாத செயற்பாடு மூலம் ஏற்படும் உளத்தாக்கம் அளவிடமுடியாது. இதன்காரணமாக பல ஆண்டுகள் கழித்தும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் அதன் தாக்கத்தினை அனுபவிப்பர். மேலும் குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறன சந்தர்ப்பத்தில் பெண்ணின் மனநிலையானது விசேட மனநல வைத்தியர் ஒருவரினால் அலசி ஆராயப்படும். பாதுகாப்பான காவல் உள்ள இடங்களில் (custodial place ) அதாவது சிறுவர் அல்லது பெண் ஒருவர் வேறு ஒருவரின் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இடங்களான பாடசாலை, சிறைச்சாலை, புனர்வாழ்வு முகாம்… போன்றவற்றில் ஒருவர் தனது அதிகாரத்தினை பாவித்து அச்சுறுத்தி செய்யும் பாலியல் துஸ்பிரயோகங்கள் மிகவும் பாரதூரமானவை.
இறுதியாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் என்றாலே எல்லாம் பாரதூரமானவை தான். அவற்றில் மன்னிக்க கூடியது அல்லது மன்னிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. மேலும் இவ்வாறான குற்ற சாட்டுக்கள் எழும் பொழுது பாடசாலை நிர்வாகம் பூரணமான நடுநிலைமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
