அண்மைய செய்திகளில் இலங்கையில் சிறுநீரக வியாபாரம் அதாவது மனிதன் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு சட்ட விரோதமான முறையில் சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் மாற்றீடு செய்யப்படுவதாக இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 60 பேர் அவயவ மாற்று சிச்கிசைக்கு உள்ளாகின்றனர். அதேவேளை 13 பேர் உரிய உறுப்பு கிடைக்காமை காரணமாகக் இறக்கின்றனர். இலங்கையின் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டில் 400பேர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட வேளையில் ஏறத்தாழ 2000 பேர் உரிய சிறுநீரகம் கிடைக்காமல் மரணத்தினை தழுவினர். இதன் காரணமாகவே சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்றீடு சிகிச்சைக்காக பலர் அரச வைத்திய சாலையில் காத்து இருக்கின்றனர். இவ்வாறு உரிய உறுப்புகள் கிடைக்கமையே பல்வேறுபட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கின்றது. சாதாரணமாக முற்று முழுதாக சிறுநீரகம் பழுதடைந்த ஒரு நோயாளி தனக்குரிய சிறுநீரகத்தினை பின்வரும் வழிமுறைகளில் பெற்று கொள்ளலாம்
- இறந்த ஒரு நபரின் உடலில் இருந்து
- மூளை இறப்பு ஏற்பட்ட ஒரு நபரின் உடலில் இருந்து
- உயிர் உள்ள ஓர் நபரின் உடலில் இருந்து
இப்பொழுது பேசு பொருளாக இருப்பது இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட பிரதேசங்களில் இருந்து இளவயது இளஞர்களின் உடலில் இருந்துசிறுநீரகம் பலவந்தமாக அல்லது ஏமாற்று முறையில் அகற்றப்படுவது பற்றியதே.
இலங்கையில் இவ்வாறு ஒரு மனிதனின் இருந்து இன்னொரு மனிதருக்கு அவயவங்களினை மாற்றீடு செய்யும் பொழுது அவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது Transplantation of Human tissues act No 48 of 1987 (certified on 11th December 1987) என்ற சட்டம் ஆகும் அத்துடன் சுகாதார அமைச்சின் சில சுற்றறிக்கைகள் Director General Health (DGHs) circulars of Ministry of health ஆகும்.
இங்கு முக்கியமாக உயிர் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து எவ்வாறு சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இன்னொருவருக்கு மாற்றீடு செய்யப்படுகின்றது என்பது பற்றி பார்ப்போம். பல்வேறுபட்ட காரணகளினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பொழுது நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் அப்பொழுது சிகிச்சை அளிக்கும் வைத்தியர் நோயாளிக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் சிறுநீரக மாற்றீடு செய்வதால் வரும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்து கூறுவார் அத்தோடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக மேற்கொள்ளும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் சாதக பாதகங்களை எடுத்து கூறுவார் அதன் பின்னரே நோயாளி தனக்கு எந்தவிதமான சிகிச்சை வேண்டும் என்பதை தீர்மானித்து சிகிச்சையை பெறுவார். இங்கு வைத்தியர் உரிய மற்றும் தேவையான தகவல்களை தெரிவிக்க முடிவெடுப்பது நோயாளிதான்.
அடுத்த கட்டமாக நோயாளி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விரும்பினால் அவர்தான் தனக்குரிய சிறுநீரக வழங்குநரை கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிடில் அவரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர் முளை இறப்பு அடைந்த ஒருவரின் சிறுநீரத்திற்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருப்பது என்பது நிச்சயமாக ஒருசில நாட்களோ மாதங்களோ அல்ல. நிச்சயமாக ஒருசில வருடங்கள் செல்லும் அந்த காலப்பகுதியில் நோயாளி ஒழுங்கான முறையில் வாரத்தில் ஒருசில தடவைகள் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். நோயாளி பல்வேறு காரணங்களினால் இறப்பினை சந்திக்கவும் நேரும். இவ்வாறான பாதக விளைவுகளை தவிர்க்கவே நோயாளி ஒருவர் தனது பழுதடைந்த சிறுநீரகத்திற்கு மாற்று சிறுநீரகத்தினை தேடுவர்.
முதலில் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் கொடுக்க முயற்சி செய்வார்கள். அது சரிவராது பட்சத்தில் வேறு ஓருவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்யவார் அப்பொழுதுதான் பிரச்சினைகள் எழுவதற்கு ஆரம்பிக்கும். இலங்கையில் தற்பொழுது உள்ள சட்டத்தின் பிரகாரம் உயிர் உள்ள ஒருவர் அல்லது இறந்து ஒருவரின் பின்னுருத்தாளிகள் வியாபார நோக்கம் கருதி உடல் உறுப்புக்களை விற்பனை செய்ய முடியாது. அன்பின் அல்லது பாசத்தின் காரணமாவே உறுப்புக்களை தானம் செய்யாலாம். எனவே வெளி நபர் ஒருவருக்கு பணத்தினை அல்லது வேறு பெறுமதியான பொருட்களை கொடுத்து அவரின் பூரண சம்மதத்துடன் அவரின் சிறுநீரகத்தின் பெறுவார்கள். இவ்வாறு சிறுநீரகம் போன்ற உறுப்புக்களினை பெறல் organ trafficking என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். இவ்வாறு சிறுநீரகத்தினை பெற பத்திரிகைகள் மூலம் விளம்பர படுத்துவார்கள் அல்லது இதற்கான தரகர்களை அனுகுவார்கள்.
- எவ்வாறான மனிதர்கள் தமது சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை தானம் செய்வார்கள் ?
மிகவும் வறுமையில் இருப்பவர்கள் தமது வறுமையினை போக்க நினைத்து தமது சிறுநீரகத்தினை வழங்குவர் மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முளை வளர்ச்சி குறைந்தவர்கள் போன்றவர்கள் இவ்வாறு பணத்திற்காக வழங்க முற்படலாம். இதுபோன்றே சில பெண்கள் வாடகை தாயாக செயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வெளிவந்த செய்திகளின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று ஒருவர் கூட இலங்கை போலீசில் முறைப்பாடு செய்யவில்லை.
- ஏன் இதுவரை சட்ட நடவடிக்கைகளை பெருமளவில் எடுக்க முடியாது உள்ளது?
இங்கு கவனிக்கத்தத்தக்க விடயம் என்னெவெனில் இவர்கள் யாவரும் 18 வயதினை அடைந்தவர்களே மேலும் இவர்கள் சுயவிருப்பதின் பேரில் சிறுநீரகத்தினை வழங்குவதால் பொலிஸாரினால் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கமுடியாமல் போகும். பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தானம் செய்யபவர்கள் உரிய பணத்தினை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு அவற்றிலும் அவர்கள் போலீசில் முறைப்பாடு செய்வதில்லை. மேலும் இவ்வகையான செயற்பாடுகளில் பல உயர் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஈடுபடுவதினால் அவர்களை பொலிஸாரினால் இலகுவில் அடைய முடியாது.
- வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?
ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளி சிறுநீரக வழங்குநர் ஒருவரினை பலத்த சிரமத்தின் மத்தியில் அழைத்து வரும் பொழுது மருத்துவ நிபுணர்கள் வழங்குனரின் குருதி வகை, அவருக்கு எயிட்ஸ், ஹெப்பட்டைட்டிஸ் போன்ற பல நோய்கள் இருக்கின்றதா என பரிசோதிப்பார்(சிறுநீரகத்தினை மாற்றும் பொழுது ஒத்துபோகுமா என அறிய பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்). அவற்றில் பிரச்சனைகள் எதுவும் இல்லை எனில் தொடர்ந்து சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிபாரிசு செய்யப்படும். இலங்கையில் உள்ள பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரில் பெரும்பாலானோருக்கு போதிய மருத்துவ அறிவின்மையாலும், உரிய தீர்மானம் எடுக்கும் திறன் இன்மையாலும் வைத்தியரின் முடிவினையே ஏற்கின்றனர். மேலும் குறித்த வைத்தியருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் (success rate) நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு அவர் ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரினை சிபாரிசு செய்வார். தொடர்பாடல் முறைகளில் ஏற்பட்ட தவறுகளினால் (Communication error) தான் பெரும்பாலான மக்கள் சிபாரிசு செய்யும் வைத்தியர்கள் ஆதாயம் அடைவதாக நினைக்கின்றார்கள். அது உண்மையில் தவறான எண்ணம் ஆகும்.
- உண்மையில் உறுப்பு மாற்றீடு சிகிச்சை முறையில் தவறுகள் நடக்கவில்லையா?
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியர் சிலர் இலங்கையில் வந்து சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு இலங்கையரின் சிறுநீரகமே பொறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணைகளின் பின்பு இலங்கையில் வெளிநாட்டவரின் உறுப்பு மாற்று சிகிச்சை தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை பெறுவதற்காக காத்திருப்பிப்போர் பட்டியலில் உள்ளோர் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கினை பாவித்தும், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கி விரைவாக சத்திர சிகிச்சை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் நடந்துள்ளன. ஆதாரங்கள் இன்றி குற்றசாட்டுகளினை சுமத்துவது இறுதியில் எதுவும் அறியா நோயாளிகளினையே இறுதியில் பாதிக்கும்.
