மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்…

கடந்த சில வருடங்களாக வட மாகாணத்தில் பல்வேறு காரணகளுக்காக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவற்றில் சில பின்வருமாறு செய்திகளில் தலைப்பில் வந்துள்ளன.
“ஆசிரியர் ஒருவர் மிகவும் ஏசியதால் மாணவர் தூக்கில் தொங்கி மரணம்”
“அதிபர் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்தமையால் ஆசிரியர் நச்சு அருந்தி தற்கொலை
“பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரியுடன் கடமை முரண்பாடு, அலுவலகத்தில் இளைஞன் தற்கொலை”
தனியார் துறைகளில் நடைபெற்ற இதேமாதிரியான பல்வேறு தற்கொலை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.
இலங்கையில் தற்பொழுது நாளாந்தம் 8 வரையான பேர்கள் பல்வேறு வகையான காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். உலக அளவில் தற்கொலை செய்து கொள்வோர்களின் பட்டியலில் இலங்கை 29 வது இடத்தில் இருக்கின்றது. இலங்கையில் அதுவும் வடமாகாணத்தில் கணிசமாக தற்கொலைகள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெறுகின்றன. நாம் தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் தான் நாம் அவற்றினை தடுக்க முடியும். தற்கொலைக்கு ஏதுவான காரணங்களில் சிலவற்றினை எம்மால் இலகுவில் தடுக்க முடியாது. ஆனால் தற்கொலைக்கு ஏதுவான பல காரணங்களை எம்மால் இலகுவில் தடுக்க முடியும்.
இவ்வாறான தடுக்கப்பட கூடிய பல காரணங்களில் ஒன்றே வேலைத்தளங்களில் ஏற்படும் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொள்ளல் ஆதல் ஆகும்.

முக்கியமாக இவ்வகையான தற்கொலைகள் மிக்க மனஅழுத்தம் காரணமாக நடைபெறுகின்றது. முக்கியமாக மேலதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அல்லது வன்மையான சொற் பிரயோகங்களை செய்வதாலும் மாணவர் மற்றும் ஏனையோர் இலகுவில் மனம் உடைந்து விடுகின்றனர். மேலும் மேலதிகாரிகள் பலர் இவ்வாறு அதிகாரத்தொனியுடனும் வன் சொல் பிரயோகத்துடனும் நிர்வாகம் செய்வது தான் சிறந்த நிர்வாகம் என்ற நினைப்பில் உள்ளனர். பாடசாலை மாணவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் வெவ்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் எதிர்வினைத் தாக்கமும் வேறுபட்ட தாகவே அமையும். மற்றும் மேலதிகாரிகள் தமக்கு கீழே வேலை செய்பவர்களின் மனத் திடகாத்திரத்தினை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப குறித்த வேலையினை வழங்க முடியும் அல்லது வேலையின் அளவினை மாற்ற வேண்டும். அதனை விடுத்து ஊழியருடன் கடிந்துகொள்வதில் பயனேதும் இல்லை. அவ்வாறே ஆசிரியரும் மாணவர்களின் மனநிலை, பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை போன்றவற்றினை அறிந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஏற்றவாறு கற்பித்தலில் மாற்றங்களை செய்யவேண்டும். அதனை விடுத்து இயந்திரங்கள் மாதிரி எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக கற்பித்தலினால் பிரயோசனங்கள் பெரிதாக வந்து விடப்போவதில்லை.
இன்றைய தினம் உலக தற்கொலையாளர் தடுப்பு தினம், நாளை மகாகவி பாரதியார் நினைவு தினம் இவற்றினை ஒட்டி இப்பதிவினை இடுகின்றேன்.

இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.