பணமும் பிணமும்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் வடமாகாணத்தின் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் பிணப் பரிசோதனை ஒன்றினை நடாத்துவதற்கு அவ்வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் இறந்தவரின் உறவினரிடம் பணம் கேட்டமையினையும் அதனை இறந்தவர்களின் உறவினர்கள் கொடுக்க மறுத்ததினை தொடர்ந்து அவ்ஊழியர் விடுமுறையில் நின்றதினை தொடர்ந்து பிணப்பரிசோதனை ஒரு நாள் தள்ளி போனதோடு மட்டும் அல்லாது அவரது உடல் அழுகிய நிலையில் இரு நாட்களின் பின்னர் பிண பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
இப்பதிவின் மூலம் அரசாங்க வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களும் அதனைத் தொடர்ந்து பிணப் பரிசோதனை நடைபெறும் பொழுது எவ்வாறு பொதுமக்களிடம் இருந்து அதாவது இறந்தவரின் உறவினரிடம் இருந்து எவ்வாறு பணம் மோசடியான முறையில் பெறப்படுகின்றது என்பதினை வெளிப்படுத்துவதே.
1. சில சந்தர்ப்பங்களில் இறந்தபின் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. பொதுவாக அடுத்த நாளே செய்யப்படும். இவ்வாறான சந்த்ப்பங்களில் வைத்தியசாலை ஊழியர் இறந்த உடலினை குளிர்ப் பெட்டியில் வைத்து பாதுகாக்க பணம் கேட்பார்கள் கொடுக்கவிடில் உடலினை வெளியே வைப்பார்கள். அது தானாகவே அழுகிய நிலையில் பின்பு உறவினரிடம் ஓப்படைக்கப்படும் அல்லது எலி மற்றும் கரப்பான் போன்ற விலங்குகள் சேதப்படுத்திய நிலையில் ஒப்படைக்கப்படும்.

2. உடலினை வைத்திய சாலை விடுதியில் இருந்து பிரேத பரிசோதனை அறைக்கும் அதிலிருந்து வைத்திய சாலையின் வெளிப்புறம் கொண்டு வந்து தருவதற்கு பணம் கேட்பார்கள்.
3. சில வேளைகளில் விரைவாக பிரேத பரிசோதனையை முடித்து தர சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாருக்கு பணம் தேவை என வைத்திய சாலை ஊழியர் பணம் பெற்ற சந்தர்ப்பம் உண்டு
4. மரண விசாரணையிணை மேற்கொள்ளும் பொலிஸார் தான் வேறு கடமையில் இருப்பதாகவும் அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி வர காலதாமதம் ஆகும் என்றும் விரைவாக முடிக்க வேண்டும் எனில் சப்பொட் பண்ணுமாறும் கேட்டதுண்டு.
5. மரண விசாரணைக்கு வந்த பொலிஸார் தான் சாப்பிடவில்லை எனக்கூறி உறவினர்களை அழைத்து சென்று விலை உயர்ந்த கடையில் கோழிப் பிரியாணி சாப்பிட்டதுடன் ஒரு சிகரெட் பாக்கெட்டை முழுமையாக வாங்கிய சம்பவமும் நடந்ததே.
6. சட்ட வைத்திய அதிகாரி போன்று பதில் கடமையாற்றும் சில வைத்தியர்கள் இறந்தவரின் உறவினரிடம் வைத்தியசாலை ஊழியர்கள் மூலம் கொத்து ரொட்டியும் மெகா சோடா போத்தல் ஒன்றும் வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
7. தீடீர் மரண விசாரணை அதிகாரி தனக்கு மரணம் நடந்த இடத்திற்கு வருகை தருவதற்கு பணம் வேண்டும், வாகன வசதி வேண்டும் என்று அடம் பிடித்த சம்பவங்கள் உண்டு. அவ்வாறு செய்ய மறுத்த நிலையில் வேண்டும் என்றே தாமதமாக வந்தமையும் போலீஸ் ரிபோட்க்கு என்று உறவினரிடம் காசு வேண்டியமையும் நடந்துள்ளது.
8. பெட்டிக்கடைகாரன் (சவப்பெட்டி ) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் தருவாயில் இருக்கும் உறவினரிடம் வந்து விசிட்டிங் காட் கொடுத்து தன்னிடம் வரும்படி கோரிக்கை விடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
9. விடுதி வைத்தியர் ஒருவர் சட்ட மருத்துவ ரீதியாக தீடீர் மரண விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத மரணம் ஒன்றிற்கு உறவினரிடம் வேண்டும் என்றே மரண விசாரணையினை இல்லாமல் செய்ய காசு வேண்டும் என்று கேட்டமையும் நடந்துள்ளது.
10. பிரேத பரிசோதனை செய்த வைத்தியசாலை ஊழியர் பணம் கொடுக்க மறுத்த சந்தர்ப்பத்தில் உடலினை உரிய முறையில் தைக்காமல் கொடுத்த சந்தர்ப்பமும், அண்மையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவரின் உடலில் இருந்து பெறுமதியான தங்க ஆபரணம் இணை கொள்ளை இட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இவற்றிற்கு என்னதான் தீர்வு? இலங்கையின் அரசவைத்திய சாலைகளில் நடைபெறும் தீடீர் மரணவிசாரணை மற்றும் அதனோடு இணைந்த உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றிக்கு எவ்விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதே. பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.