தற்கால இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தூக்கில் தூங்கி யாராவது இறந்தால், கொலை செய்து தூக்கியதாகவே செய்திகள் வெளியிடுகின்றனர். அதுவும் கால்கள் நிலத்தை தொட்ட நிலையில் அவர் தூங்கிக் காணப்பட்டால் சொல்லி வேலையில்லை. இவ்வாறான சம்பவங்களில் பலரும் பலவாறாக தமது அபிப்பிராயங்களினை முன்வைப்பர். முக்கியமாக பலர் கூறுவது யாதெனில் கால்கள் தொட்ட நிலையில் தூக்கில் தொங்கி இறக்க முடியாது, யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இழுத்து வந்து தூக்கில் கொழுவியிருப்பார்கள் என்பதே.
சட்ட மருத்துவ ரீதியாக தூக்கில் தொங்கி இறத்தல் என்பது என்பது இறப்பவர் தனது முழு அல்லது பகுதி அளவிலான உடல் எடையினை விசையாக பயன்படுத்தி கழுத்தினை நெரித்து இறத்தல் ஆகும். பகுதி அளவிலான உடல் எடையினை பயன்படுத்தல் Partial hanging எனப்படும். இதன்பொழுது பொதுவாக கால் தரையினை தொட்ட வண்ணம் இருக்கும். தூக்கில் தொங்கி இறத்தல் சம்பவம் ஒன்றின் பொழுது மரணம் ஏற்பட்ட முறை மற்றும் சந்தர்பம் (cause and circumstance of death) ஏனைய காரணிகள் விலக்குவதால் அடையப்படும் (exclusion of other conditions). சிறைச்சாலைகள், போலீசின் தடுப்பு அறைகள் போன்றவற்றில் இருக்கும் தடுப்பு கைதிகள் கதவின் கைபிடியில் தூக்கு மாட்டி இறந்த சம்பவங்கள் நிறைய உண்டு.
