அந்த சிறுமியின் தாய் பிரதேச செயலகம் ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றுகின்றார். தகப்பனார் ஆசிரியர். அன்று காலையிலேயே தகப்பனாரும் மூத்த பிள்ளையான அண்ணனும் பாடசாலை சென்றுவிட்டனர். தாயார் சமையல் வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு, அச்சிறுமியை அவளது அப்பம்மா வீட்டில் விடும் நோக்கில் ஸ்கூட்டியில் அழைத்து சென்ற பொழுதுதான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தாயார் ஸ்கூட்டியினை செலுத்தும் பொழுது சிறுமி தாயாரின் கால்களுக்கு இடையில் ஸ்கூட்டியின் முன்புறத்தில் இருந்தவாறு பிரயாணித்தாள் . அவள் சிறிது வேகமாகத் தான் சென்றாள் ஏன்னெனில் அன்று ஒரு முக்கிய கூட்டம் காலையில் இருந்தது. அவர்கள் பிரதான வீதியில் நுழையும் பொழுது ஓர் வாகனம் அதிவேகமாக அவர்களை நோக்கி வந்ததது. தாயார் சடுதியாக பிரேக்கினை போட்டார். வாகனம் மோதவில்லை ஆனால் சிறுமியின் முகம் பலமாக ஸ்குட்டியின் ஹெட் (head) உடன் மோதி சில பற்கள் உடைந்து விழுந்தன கீழ் உதடு கிழிந்து தொங்கியது. மொத்தத்தில் சிறுமியின் முகம் ஒரு கோணலாகியது.
நான் அவளினை பார்வையிடும் பொழுது அவள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். சிறுமியின் ஏக்ஸ்ரே ஆனது அவளது கீழ் தாடை எலும்பு உடைந்து இருந்ததினை வெளிப்படுத்தியது. நல்ல வேலையாக தாயாருக்கு எவ்விதமான காயமும் இல்லை. தாயாரும் சிறுமியின் அருகே அழுதவாறு காணப்பட்டாள்.
இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் அதிகளவான மக்கள் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளினை பாவித்து வருகின்றனர். முக்கியமாக பெண்கள் இதனை விரும்பி பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக ஓடமுடியும். மேலும் ஆண்களும் அதிகளவில் பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக பொருட்களை கொண்டு செல்லலாம். அதாவது கால்கள் இடையேயும், இருக்கையின் கீழேயும் வைக்கலாம். அண்மைக்காலமாக சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் பல சிறுவர்களுக்கு இவ்வாறன வகை காயங்கள் ஏற்படுவதினையும், அவை அதிகரித்து செல்வதினையும் அவதானித்து உள்ளேன். இவ்வாறான காயங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி சிறிது நோக்குவோம்.
நாம் பலரும் சிறுவர்களை மோட்டர் சைக்கிளில் ஏற்றி செல்லும் பொழுது அவர்கள் நித்திரை கொண்டு வீழ்ந்து விடுவார்கள் என்றே பெரும்பாலும் சிந்திப்போம். ஆனால் இங்கு சிறுமிக்கு காயமானது சடுதியான அமர்முடுகல் (deceleration force)காரணமாகவே ஏற்பட்டது என்பதை சிந்திக்க மறந்து விடுவோம். அதாவது இங்கு ஸ்கூட்டியின் வேகமானது ஒருசில செக்கன்களில் பூச்சிய நிலைக்கு வரும்பொழுது ஸ்கூட்டியின் கால்கள் வைக்கும் இடத்தில் நிக்கும் சிறுவர் முன்னோக்கி அதி விசையுடன் தள்ளப்படுவர் இதன்பொழுது அவர்களின் தலை ஸ்கூட்டியின் ஹெட் பகுதியுடன் பலமாக மோதும். இங்கு சிறுவர்கள் எனப்படும் பொழுது நான் 5 தொடக்கம் 6 வயதுக்கு உட்பட்டவர்களையே குறிப்பிடுகின்றேன் ஏன்னெனில் அவர்களின் உயரம் மிக குறைவானது அத்துடன் அவர்களின் தலைப்பகுதி மட்டுமட்டாக ஸ்கூட்டியின் ஹெட் உயரத்துடன் உடன் நிற்கும், சடுதியான அமர்முடுகளின் பொழுது தலையானது ஸ்கூட்டியின் ஹெட் உடன் மோதும். மேலும் சிறுவர்களின் கைகளில் போதிய பலம் இல்லாததன் காரணமாகவும் சிறுவர்கள் விபத்தினை எதிர்பாக்காததன்( not anticipate) காரணமாகவும் அவர்களின் தலை வேகமாக மோதும். இவ்வகையான விபத்துக்களினை எவ்வாறு குறைக்கலாம்? உண்மையில் சிறுவர்களை ஸ்கூட்டியின் முன்பகுதியில் நின்றவாறு வைத்துக்கொண்டு பிரயாணம் செல்வதினை குறைக்க வேண்டும் மற்றும் வேகத்தினையும் குறைக்க வேண்டும்.

மேலே உள்ள படம் எவ்வாறு அமர்முடுகல் விசையானது ஸ்கூட்டியின் கால் வைக்கும் இடத்தில் (foot rest) நின்றவாறு பிரயாணம் செய்யும் சிறுவர்களை தாக்கி காயத்தினை உண்டாடக்குகின்றது என்பதினை விளக்குகின்றது.
