அவனுக்கு பதினேழு வயது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கின்றான். குடும்ப வறுமைநிலை காரணமாக இரு வாரங்களுக்கு முன்னரே மேசன் உதவியாளராக கொழும்புக்கு வேலைக்கு வந்திருந்தான். அன்று காலையில் 6வ வது மாடியில் அவன் குறுக்கு சுவர்களுக்கான கொங்கிறீட் கற்களை சுமந்து வரும் பொழுதுதான் தவறுதலாக அத்தளத்தில் இருந்த துவாரத்தின் ஊடாக தரையில் வீழ்ந்தான். அவனது சக தொழிலாளர்கள் கீழ் தளத்தினை நோக்கி ஓடினர் ஒருசில வினாடிகள் தான் தண்ணீர் என்று கேட்டு முனகினான். அதன் பின்னர் அசைவொன்றும் இல்லை. மேலதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் தொழிலாளரினை நோக்கி சொன்னார்கள் “அவன் இறந்துவிட்டான் நீங்கள் உங்கள் வேலையினை தொடருங்கள்” என்று. அவர்களுக்கும் வேறு வழி இல்லை. சிறிது நேரத்தில் போலீசார் வந்தனர் அவனுடன் ஒரேதளத்தில் வேலை செய்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். உடல் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவனது உடலை அவனது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவனது குடும்பத்தினரிடம் காசு வசதி இல்லை. ஏன் அவனது தாய் மற்றும் தந்தை கொழும்பிற்கு வருவதற்கு பணம் கூட இல்லை. அவனது சக தொழிலார்கள் தங்களால் இயன்ற பணத்தினை சேகரித்து உடலை ஊருக்கு அனுப்பினர்.
இன்றைய கால கட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல இளைஞர்களும், மலையகத்தினை சேர்ந்த பலரும் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பல மாடி கட்டிட தொகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுவாக மேசன் வேலை, மின்சார வயர்களை மற்றும் நீர்க்குழாய்களை பொருத்தும் வேலை, டைல் பதிக்கும் வேலை, பெயிண்ட் அடிக்கும் வேலை, அலுமினிய பிட்டிங் வேலை …. போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். பலர் சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவும் ஒருசிலர் மட்டும் தொழில்வாண்மை மிக்க வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்ப வறுமை காரணமாகவே பாடசாலை படிப்பினை இடையில் விட்டுவிட்டு இவ்வாறான வேளைகளில் பகுதியாகவோ அல்லது முழுநேரமாகவோ ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு ஒரு தொடர் மாடி அமைக்கும் பொழுது நடைபெறும் பல்வேறு பட்ட வேலைகளும் உப ஒப்பந்ததாரர்கள் மூலமே நடைபெறும். இவ்வாறே வேலைக்காரர்களும் பல்வேறுபட்ட தரகர்கள் மூலமே சேர்க்கப்படுகின்றனர்.
ஓர் தொடர் மாடித்தொகுதி கட்டிடம் கட்டப்படும் பொழுது லிப்ட் போன்றவற்றினை பொருத்துவதற்காகவும் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் ஒவ்வொரு தளத்திலும் தரைப்பகுதியில் பல்வேறுபட்ட அளவுகளில் (floor openings) துவாரங்கள் இருக்கும். தொழிலார்கள் இத்துவாரங்களை ஒவ்வொரு தளங்களிலும் வேலைகளின் பொழுது உருவாகும் பல்வேறுபட்ட கழிவுகள் அடித்தளத்தினை நோக்கி போட பயன்படுத்துவார்கள் , மேலும் இரவு நேரங்களில் பல்வேறு தளங்களில் தங்கிநிற்கும், மது போதையில் இருக்கும் வேலைக்காரர்கள் வெறுமையான பியர் டின்கள், உணவு பொதிகள் போன்றவற்றினை இவற்றினுடாக வீசுவார்கள். பல சந்தர்ப்பங்களில் போதையில் மூத்திரம் கூட பெய்வார்கள்.
இனி விடயத்திற்கு வருவோம், இத்துவாரங்களினால் என்னதான் பிரச்சனை? பொதுவாக பல தொழிலார்கள் இவ்வாறு அமைக்கப்பட்ட துவாரங்கள் ஊடாகவே உயரமான கட்டிடங்களில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளார்கள். முக்கியமாக இத்துவாரங்களை சூழ தற்காலிக தடுப்புக்கள் வேலிகள் அமைக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அவ்வாறு அமைக்கப்படுவதில்லை இதன் காரணமாகவே இவ்வாறன அகால மரணங்கள் நிகலுகின்றன. பல விபத்துகள் மதுபோதையில் நிகழுகின்றன. அநேகமாக புதிதாக வேலைக்கு வரும் உயரமான கட்டிடங்களில் வேலைசெய்து அனுபவம் அற்றவர்கள் இரவு வேளைகளில் நடமாடும் பொழுது தவறுதலாக இந்த துவாரங்கள் ஊடாக தவறி விழுகின்றனர்.
(மேலே உள்ள இரு படங்களும் பாதுகாப்பு அற்ற துவாரத்தினையும், இளைஞன் தவறி விழுந்த இடத்தினையும் காட்டுகின்றன)
இது தவிர சில சந்தர்ப்பங்களில் கொங்கிறீட் தட்டுகள் உடைந்து விழுவதினாலும், தொழிலாளர் வேலை செய்யும் கம்பிகளாலான தட்டுகள் உடைந்து விழுவதினாலும் இறப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு வேலைத்தளங்களில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக காப்புறுதி செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக இறந்த பின்னரோ அல்லது காயப்பட்ட பின்னரோ காப்புறுதிப்பணம் கிடைப்பதில்லை. தொழிலாளரும் இது பற்றி அலட்டி கொள்வதில்லை. மேலும் தொழிலாளருக்கு உயரமான கட்டிடங்களில் வேலை செய்யும் பொழுது எவ்வாறு விபத்துக்களை தவிர்ப்பது என்பது பற்றி பயிற்சி வழங்கப்படுவதில்லை அத்துடன் உரிய தற்பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படுவதில்லை. தொழிலாளருக்கு தமது உரிமைகள் மற்றும் தொழிலார் சட்டங்கள் போன்றவற்றில் போதிய அறிவு இல்லாதவரை இவ்வாறான சம்பவங்கள் தொடரும்.
