இன்றைய உலகில் பெண்கள் பல்வேறுபட்ட அழகு சாதனப்பொருட்களை தமது அழகினை மெருகூட்டும் முகமாக பாவிக்கின்றனர். பல நிறுவனங்கள் பல்வேறு விதமான பொருட்களை இதன் காரணமாக உற்பத்தி செய்கின்றன. மேலும் பல்வேறுபட்ட போலி உற்பத்திகளும் சந்தையில் உலாவுகின்றன. இவற்றில் முக்கியமாக பல்வேறு வகையான கொண்டைக்கு மாட்டும் கிளிப்புகள் (Hair clips) உள்ளடங்கின்றன.
அவள் ஏழு வயதான சிறுமி, தாயார் வேலை முடித்து வீடு வருவதினை கண்டதும் ஆசையோடு ஓடிச்சென்று தாயாரினை கட்டி அணைக்கின்றாள். தாயாரும் அவளினை தூக்கி அனைக்கின்றாள். சில வினாடிகள் தான் குழந்தை வீறிட்டு கத்துகின்றது. தாயார் பார்க்கும் பொழுது அவளது கொண்டையில் போடப்பட்டிருந்த கிளிப் ஆனது குழந்தையின் கழுத்து பகுதியில் முழுவதுமாக குத்தி உட்சென்று இருந்தது.
தாயாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, குழந்தையினை அசையாமல் வைத்திருந்தவாறு அவசர அம்புலன்ஸ் சேவையினை அழைத்து வைத்தியசாலைக்கு வந்தாள். அதிஸ்டவசமாக கழுத்தில் உள்ள பாரிய இரத்த குழாய்கள், களம், சுவாச குழாய் போன்றவற்றிற்கு எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் உள்ளே இருந்த கிளிப்பினை அகற்றி எடுத்தனர்.
மேலே படத்தில் உள்ள கிளிப்பே இவ்வாறு ஆபத்தினை ஏற்படுத்தியது. அதன் நுனிப்பகுதியினை உற்று நோக்குவோமானால் அது கூர்மையானதாக உள்ளது. மேலும் அதன் விளிம்புகள் சொர சொரப்பாக (serrated) உள்ளது இதன் காரணமாக இவ்வகையான கிளிப்புகள் குறைந்த விசையுடன் மிக இலகுவாக எமது தோலினை ஊடுருவி சென்று ஆபத்தினை விளைவிக்கும். எனவே இவ்வாறான கிளிப்புகளுடன் சிறுவர்கள் விளையாடுவது ஆபத்தில் முடியும்.
எமது உடலில் எலும்புக்கு அடுத்து ஊடுருவ அதிக விசை தேவைப்படுவது தோல் ஆகும். இங்குள்ள கிளிப்பின் நுனிப்பகுதி தோலினை இலகுவாக ஊடுருவும் அதன் பின்னர் உள் அங்கங்களினை ஊடுருவுவதற்கு பாரிய விசை தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது
