ஒரு வாகன விபத்து நடைபெறும் பொழுது அதில் சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருந்தவர் யார் என்பதினை சரியாக கண்டறியவேண்டும். பொதுவாக விபத்தின் பின்னர் ஆள் மாறாட்டம் இடம் பெறும். இருவரும் விபத்தில் உயிர் தப்பினாலோ, ஒருவர் அல்லது இருவரும் இறந்தாலோ அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியவேண்டும். சட்ட மருத்துவ பரிசோதனையில் அல்லது பிரேத பரிசோதனையில் அவர்களின் வாகன இருக்கை நிலை எவ்வாறு கண்டறியபடுகின்றது என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.
இங்கு முக்கியமாக அவர்களில் ஏற்படும் காயத்தின் இயல்புகளை வைத்தே அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியப்படுகின்றது. அநேகமான வீதி விபத்துக்கள் வாகனத்தின் முன்பகுதி இன்னோர் வாகனத்துடன் அல்லது வேறு ஒரு பொருளுடன் மோதுவதினால் ஏற்படுகின்றது. இவ்வாறு மோதும் பொழுது வாகன சாரதி உட்பட வாகனத்தில் பிரயாணம் செய்பவர்கள் முன்னோக்கி வீசப்படுவார்கள். அதே சமயம் வாகனத்தின் பிரேக், ஸ்டியரிங் வீல் போன்றன உள்நோக்கி வரும் இதன்காரணமாக பின்வரும் வகையில் காயங்கள் ஏற்படும்
- சாரதியில் ஏற்படும் காயங்கள்
விபத்து ஏற்படும் பொழுது சாரதி முன்னோக்கி வீசப்படுவார் மேலும் ஸ்டியரிங் வீல் உள்நோக்கி வரும் இதன்காரணமாக ஸ்டியரிங் வீல் சாரதியின் நெஞ்சு பகுதியில் தாக்கி கண்டல் காயம், எலும்பு முறிவு, உரஞ்சல் காயம் போன்றவற்றினை ஏற்படுத்தும். இங்கு ஏற்படும் காயமானது சிலவேளை ஸ்டியரிங் வீல் இணை உருவமைப்பில் ஒத்து இருக்கலாம். விசை அதிகமாக இருக்கும் பொழுது நெஞ்சில் உள்ள நுரையீரல் இருதயம் போன்றவற்றிற்கும் வயிற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஈரல், மண்ணீரல் மற்றும் இரைப்பை போன்றவற்றிற்கும் பாரிய காயங்கள் ஏற்படலாம். இவ்வாறு தூக்கி வீச முற்படும் பொழுது சீற் பெல்ற் ஆனது சாரதியில் குறிப்பிடத்தக்க வகையில் உரஞ்சல் காயத்தினை ஏற்படுத்தும். மேலும் நெற்றி மற்றும் தலைப்பகுதி ஆனது டாஸ் போட்டில் பலமாக அடிப்பதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளில் பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படும். பிரேக் மற்றும் கிளச் போன்றன பலமாக உள்நோக்கி வரும் பொழுது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் அதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் பிளவு காயங்கள் (laceration), எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு சாரதியில் ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி இலகுவாக சாரதியினை அடையாளம் காணுவார்.
(மேற்குறித்த படங்கள் சீற் பெல்ட்டினால் மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவற்றினால் ஏற்பட்ட காயங்களை குறிக்கின்றது)
(மேற்குறித்த படங்கள் சாரதியிலும் முன்னிருக்கையில் பயணிப்பவருக்கும் எவ்வாறு காயங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றன).
சில சந்தர்ப்பங்களில் சாரதியின் பாதணியின் அடிப்பகுதியில் பிரேக்கினை பலமாக அழுத்தியதன் காரணமாக ஏற்படும் தவாளிப்பு அடையாளம் (imprint mark) காணப்படும்.
- முன்னிருக்கையில் பயணம் செய்பவருக்கு ஏற்படும் காயங்கள்
ஓர் வாகனத்தில் முன்னிருக்கையில் பயணம் செய்யபவருக்கும் சாரதியில் ஏற்படும் காயங்கள் போலல்லாது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் அல்லது கால் பகுதியில் பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருப்பவருக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி அவற்றினை இலகுவாக அடையாளம் காணுவார்.
மேலும் சாரதியிலும் முன்னிருக்கையில் இருப்பவருக்கும் சீற் பெல்ட் இனால் வரும் காயங்கள் எதிர்மாறான பக்கங்களில் இருக்கும். இறுதியாக விபத்துக்குள்ளான வாகனத்தினை சட்ட வைத்திய அதிகாரி பார்வை இடுவதன் மூலம் காயம் அடைந்தவர் அல்லது இறந்தவர் வாகனத்தில் விபத்து நடைபெற முன்னர் வாகனத்தின் எந்த ஆசனத்தில் இருந்தார் என்பதினை இலகுவாக கண்டுபிடிப்பார்.
