இன்றைய உலகில் நன்னீர் பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் வரட்சி, பருவ மழை வீழ்ச்சி போதாமை. கட்டுப்பாடற்ற நிலக்கீழ் நீர்ப்பாவனை போன்றவற்றினால் நன்னீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி போத்தல் குடிநீர் விற்பனை நிறுவனங்கள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்தி பெருமளவு இலாபம் ஈட்டி வருகின்றன என்பது உண்மை . மேலும் பொதுமக்களில் பெரும்பாலானோர் போத்தல்களில் வரும் குடி நீர் மிகவும் பாதுகாப்பானது என எண்ணுகின்றனர். அத்தோடு சிலர் அதனை கெளரவமாக வேறு கருதுகின்றனர். இது இவ்வாறு இருக்க சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் மண்பானைகளில் நீரினை சேகரித்து அருந்துவது மிகவும் பாதுகாப்பானது என அவ்வப்போது பல பதிவுகள் இடப்படுகின்றன. அவற்றின் உண்மை தன்மையினை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.
சாதாரணமாக ஓர் திண்மத்தினை நாம் ஓர் திரவம் ஒன்றில் இட்டால் அது அத்திரவத்தில் கரையக்கூடிய திண்மம் எனில் முற்றாகவோ பகுதியாகவோ கரையும், கரைய முடியாத திண்மம் எனில் அது எமது வெற்று கண்ணுக்கு கரையாத மாதிரி தோன்றும் ஆனால் அதன் மேற்பரப்பில் இருந்து மிகமிக சிறிதளவு திண்மம் அதாவது நனோ கிராம் அல்லது மைக்ரோ கிராம் அளவில் தொடுகையில் உள்ள திரவத்தில் கரையும்.
இவ்வாறே மண் பாணையில் நீரினை சேமித்து வைக்கும் பொழுது அந்த மண்பாணை ஆக்கப்பட்டுள்ள மண்ணில் உள்ள உலோகங்கள் மற்றும் உப்புக்கள் என்பன நீரில் கரையும். அதன் மூலம் அவை மனிதனை அடையும் . அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இவ்வாறு மண்பானைகளில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பானைகள் குறிப்பாக இலங்கையின் வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள மண்ணில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறித்த மாகாணங்களில் அளவுக்கு அதிகமான ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் நீரில், அங்கு உற்பத்தி செய்யப்படும் சில உணவு வகைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேற்குறித்த மாவட்டங்களில் அதிகளவு சிறுநீரக செயலலிழப்பு நோயாளிகள் உருவாவதற்கு இவையும் ஒரு காரணம் என்று நம்பப்படுகின்றது.

இவ்வாறு மிகமிக சிறிய அளவில் இவ்வாறன பார உலோகங்கள் உடலில் சேர்வதினால் மனிதனின் உடல் நலத்திற்கு கேடு உண்டாவது சாத்தியமா? நீண்ட காலப்போக்கில் இவ்வாறு மிகமிக சிறிய அளவில் சேரும் இவ்வாறான உலோகங்களினால் நிச்சயம் பாதிப்பே. அதுவும் சிறுவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். இதற்கு சிறந்த உதாரணம் பண்டைய ரோம சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி. அண்மையில் விஞ்ஞானிகள் ரோம ராச்சியத்தில் மக்கள் ஈயத்தில் செய்யப்பட்டுள்ள பாத்திரங்கள், நீர்க் குழாய்கள் போன்றவற்றினை அதிகளவில் பயன்படுத்தியமையினாலும் மேலும் மருந்தாக ஈயத்தினை பயன்படுத்தியமையினாலும் அவர்கள் ஈயத்தினால் நஞ்சாதலுக்கு (Chronic lead poisoning) உட்பட்டு நீண்ட காலப்போக்கில் உடல் ஆரோக்கியம் குறைந்தமையே ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு ஏதுவான காரணங்களில் ஒன்று என கண்டு பிடித்துள்ளனர். இது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் அதிகளவு ஈயம் இருப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மண் பானையில் சேமித்து வைத்திருக்கும் நீரினை அருந்தும் பொழுது ஏற்படும் மன திருப்திக்கு அளவே இல்லை. அப்படியென்றால் இவற்றுக்கு என்னதான் தீர்வு? மண்ணிலாலான பாத்திரங்களை வாங்கி பாவிக்கும் முதல் அதனுள் நீரினை இட்டு ஒருசில தடவைகள் கொதிக்கும் வரை நன்றாக சூடாக்க வேண்டும். அதன் பின்னர் கொதித்த நீரினை வெளியே ஊற்றவேண்டும். இவ்வாறு தொடுகையில் இருக்கும் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது மண் பாத்திரத்தில் உள்ள பார உலோகங்களான ஆர்செனிக், கட்மியம் போன்றன நீரில் அதிகளவு கரையும். இதன் பின்னர் மண் பாத்திரத்தில் ஆர்செனிக், கட்மியம் போன்றவற்றின் அளவு இல்லாமல் போகும். மேலும் மண் பாத்திரத்தில் நீரினை சேமிக்கும் பொழுது அந்த நீரானது இயற்கையாகவே கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது என்ற கருத்தெல்லாம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
