அவளுக்கு இருபத்தி இரண்டு வயது தான். தலை நகரின் பெண்களுக்குக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் கடமை ஆற்றுகின்றாள். அன்று காலையில் அவளின் ஆண் நண்பனின் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வரும் பொழுதுதான் அந்த விபரீதம் நடைபெற்றது. அவர்கள் வரும் பொழுது நாய் ஒன்று வீதியின் குறுக்காக செல்ல முற்பட்ட வேளையில் அவளின் ஆண்நண்பன் மோட்டார் சைக்கிளின் பிரேக்கினை சடுதியாக பிரயோகித்தான். மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் இரு கால்களும் ஒரே பக்கமாக அமைந்த வண்ணம் பிரயாணம் செய்த அவள் சடுதியான பிரேக்கின் பிரயோகத்தில் நிலை தடுமாறி ரோட்டில் வீழ்ந்தாள். அவளுக்கு முகத்திலும் முழங்காலிலும் உரஞ்சல் காயங்கள் தான் ஏற்பட்டன. நல்ல வேளையாக என்பு முறிவுகளோ, பிளவுக் காயங்களோ (Laceration) இல்லை. அவளுக்கோ ஒரே கவலை அதாவது தனது முகத்தில் காயம் வந்துவிட்டது அது தழும்பாக மாறிவிட்டால் அவள் வேலை செய்யும் கடையில் வேலையில் இருந்து நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் வேறு.

நான் எனக்கு தெரிந்த மொழியில் என்னால் ஆன மருத்துவ விளக்கங்களினை கொடுத்தேன். முக்கியமாக உரஞ்சல் காயமானது எமது தோலின் மேலாக கரடுமுரடான மேற்பரப்பு ஒன்று பட்டு இழுபடும் பொழுது உண்டாகின்றன. இதன் பொழுது பொதுவாக எமது தோலின் மேற்பகுதி தான் அகற்றப்படும். இதன் காரணமாக இவ்வகையான காயங்கள் ஆறும் பொழுது பொதுவாக தழும்புகள் உருவாக்குவதில்லை. விதி விலக்காக கிருமித்தொற்று ஏற்படும் பொழுதோ அல்லது காயம் தோலின் உட்படைக்கு செல்லும் பொழுதோ தழும்புகள் உருவாகும்.
நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை அணிப்பவர்களுக்கு இருபக்கமும் பிரச்சனை தான். பெண்களில் பலர் தங்களின் கால் தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா? என்று பார்ப்போம்.
இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.
(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)
