வடகிழக்கு பருவமழை காலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண பகுதிகளில் தீடீர் தீடீர் என்று முளைத்து, பூத்து குலுங்கும் சிறிய தாவரங்களில் (கொடி ) இதுவும் ஒன்று. மற்றைய காலங்களில் இது உயிருடன் இருந்தாலும் பொதுவாக பூப்பதில்லை. கடும் வறட்சியான காலங்களில் நிலத்தின் மேலான பகுதிகள் கருகினாலும் இது நிலத்தின் கீழ் உள்ள கிழங்கின் மூலம் உயிர்ப்பான முறையில் இருக்கும். இது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது செங்காந்தள் அல்லது காந்தள் (கார்த்திகைப் பூ). இதன் தாவரவியல் பெயர் Gloriosa superba என்பதாகும் . கார்த்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. எம்மில் பலருக்கு இது ஓர் நஞ்சு மிக்க தாவரம் என்று தெரியாது. இதன் பூ, இலை, தண்டு, கிழக்கு போன்றவற்றில் கோல்சிசின் (colchicine) என்ற நஞ்சு பொருள் உள்ளது. அதுவும் கிழங்கில் அதிகளவில் உள்ளது. ஒரு மனிதன் சாதாரணமாக 125 கிராம் கிழங்கினை உட்கொண்டால் நிச்சயம் இறப்பு ஏற்படும். இந்த நஞ்சானது மனிதனின் என்புமச்சை, சமிபாட்டுத்தொகுதி போன்ற விரைவாக பிரிந்து பெருகும் கலங்கள் அதிகளவு தொழில் பாட்டில் உள்ள தொகுதிகளில் செயலிழப்பினை ஏற்படுத்தும். இந்த நஞ்சானது முக்கியமாக கலங்களின் பெருக்கத்தினை தடுக்கும். கிழங்குகளில் உள்ள நச்சானது கிழங்கினை சமைத்தாலும் அழிவடையாத நிலையில் தொடர்ந்து காணப்படும்.
இந்த தாவரம் ஆனது பண்டைய காலங்களில் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக சித்த மற்றும் ஆயுர் வேத வைத்தியர்களினால் பயன்படுத்தப்பட்டது.இங்கு பொதுவாக மிக சிறிதளவான கிழங்கே பாவிக்கப்படுவதினால் (Sub Lethal Dose) அது மனிதனுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. எனினும் சிலசந்தர்ப்பங்களில் நஞ்சாதல் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
பொதுவாக மனிதர்கள் இதன் கிழங்கிணை வேறு தாவர கிழங்குகள் முக்கியமாக வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று தவறுதலாக உட்கொள்வர். சிலர் தற்கொலை செய்யும் நோக்கில் இதன் கிழங்கினை உட்கொள்வதுண்டு. சில சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் பாவிக்கப்படுவதுண்டு.
இதனை உட்கொண்ட பின்னர் பின்வரும் மாற்றங்கள் உடலில் ஏற்படும். உடனடியாக வாய், தொண்டை மற்றும் வயிற்று பகுதிகளில் எரிவு ஏற்படும்.அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றோட்டம் என்பன ஏற்படும். ஒரு சில நாட்களின் பின்னர் தலைமயிர் உதிரல், தோல் மேற்படை கழறுதல், வெளியேறும் சிறுநீர் அளவு குறைவடைதல் என்பன ஏற்படும். சில சமயங்களில் மனம் குழம்பிய நிலைமைகளும் ஏற்படும்.முக்கியமாக போதிய வைத்திய கண்காணிப்பு இல்லாத விடத்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி இறப்பிணை ஏற்படுத்தும்.
பண்டைய இலக்கியங்களில் இது பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
- இதன் பூ தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
- இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
- இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
- இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
- வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
- கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
- மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
- நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
- பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.
- கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.
காந்தள் மலரின் அழகு காரணமாகவும் கிழங்கின் மருத்துவ தேவைப்பாடு கருதியும் சில இடங்களில் இந்த தாவரம் வர்த்தக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றது.
