இன்றைய நவீன உலகில் சினிமாவின் தாக்கம் அளப்பரியது. அதிலும் தொலைக்காட்சி தொடர்களின் சமூகம் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்த வரையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும் இந்திய தமிழ் சினிமாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். அதில் காட்டப்படும் சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் போன்றவற்றை எம்மில் பலர் ஏற்று கொண்டுள்ளனர், அத்தோடு மட்டும் அல்லாது அவற்றினை நடைமுறைப்படுத்த விழைகின்றனர். அதன் பொழுதே பிரச்சனைகள் உருவாகின்றன.அதில் குறிப்பிட்ட தக்க விடயம் என்னவென்றால் சில படித்தவர்கள் கூட இதற்கு அடிமை. இவ்வாறே தமிழ் சினிமாவில் காட்டப்படும் குற்றம் சம்பந்தமான காட்சிகளையும் சிலர் உண்மை என்று நம்பி அதனை செயற்படுத்த நினைக்கின்றனர். உதாரணமாக அண்மையில் கிளிநொச்சியில் கணவன் தனது மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்தார். அச்சம்பவம் நடைபெற்ற குறுகிய நேர இடைவேளையில் பொலிஸார் உரிய குற்ற வாளிகளை கைது செய்தனர். இது முக்கியமாக தொலைபேசி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாலேயே முடிந்தது.
இதேபோன்று இந்திய சினிமாவில் பொதுவாக காட்டப்படும் இன்னொரு காட்சி தான் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் இருக்கும் ஒருவரை மின்சார ஆளியினை நிறுத்தி அல்லது அவரது சுவாச குழாயை கழற்றி கொலை செய்வது. அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது தாயார் இலங்கையில் இவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகித்து என்னிடம் இதுபற்றி வினவியிருந்தார். இலங்கையில் அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்தியாலையில் இவ்வாறான சமல்வங்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் பல வைத்தியர்கள், தாதியா உத்தியோகத்தர்கள், சிற்றோழியர்கள் போன்றோரின் கண்காணிப்பில் 24 மணிநேரமும் இருக்கும். இது தவிர வெளியில் பெரும்பாலும் ஓர் காவலாளி கடமையில் இருப்பார். பாஸ் அனுமதி நடைமுறை வேறு அமுலில் இருக்கும் அதுவும் ஒரு நாளைக்கு இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படும். மேலும் பல சந்தர்ப்பங்களில் CCTV கேமராவின் கண்காணிப்பு வேறு இருக்கும் . இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற வாய்ப்புக்கள் மிக மிக அரிது.இவ்வாறே போதை மருந்து மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்துபவர்களும் இலகுவில் மாட்டிக்கொள்கின்றனர்.
மேலும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தொழில் நுட்ப அறிவு மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளின் திறன், எண்ணிக்கை என்பன கிட்டதட்ட நாடு பூராவும் சமனான முறையில் பரவி இருக்கும் அத்துடன் ஒருசில நூறு கிலோமீட்டர் தொலைவில் எல்லா இடங்களும் இருப்பதால் குற்றவாளிகள் இலகுவில் தப்பிக்க முடியாது.
ஆங்கில க்ரைம் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் பெரும்பாலானவை உண்மையானவை. ஆனால் தமிழ் சினிமாவில் வருபவை அவ்வாறானவை அல்ல, இந்த வித்தியாசத்தினை நாம் உணரவேண்டும்.
