அவனுக்கு இருத்திரண்டு வயது தான். அவனது சிறு வயதிலேயே பெற்றோர்கள் போரின் பொழுது இறந்துவிட்டார்கள். அதன் பின்னர் அவன் அவனது அக்காவின் அரவணைப்பிலேயே வளர்ந்தான். அதீத செல்லம் காரணமாக பாதியிலேயே பள்ளிக்கூட படிப்பினை கைவிட்டுவிட்டான். சிறிதுகாலம் வேலை எதுவும் அற்று இருந்துவிட்டு கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். இரு வாரங்களுக்கு முன்னர் தான் புதிய ரக மோட்டர் சைக்கிள் ஒன்றினை லீசிங் அடிப்படையில் வாங்கியிருந்தான். அன்று அவன் காலையில் வேலைக்கு வேகமாக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவன் குச்சொழுங்கை ஒன்றில் வேகமாக சென்ற பொழுது நாய் ஒன்று வேகமாக பாதையினை கடந்தது அவனும் அதன் மீது மோதலினை தடுக்கும் முகமாக பிரேக்கினை பிடித்தான். அப்பொழுது அவன் மோட்டர் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு வீதியில் தலை அடிபடும் படியாக விழுந்தவன் தான், அதன் பின்னர் மூச்சு பேச்சு எதுவும் இல்லை. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவனின் உயிரினை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் நடைபெறும் பொழுது அவன் தலைக்கவசம் அணிந்திருந்தான்.
அவனின் பிடரி பக்க எலும்பு உடைந்திருந்தது அத்தோடு மூளையின் முன்பக்க பகுதியில் பாரிய இரத்த கசிவு காயம் ஏற்பட்டிருந்தது. இவை தவிர சிறு சிறு சிராய்ப்பு காயங்களே உடலில் இருந்தன. உடலில் வேறு பாரிய காயங்கள் எதுவுமில்லை.

மேலுள்ள படம் மனிதனின் மண்டை ஓட்டின் உள்ள பல்வேறு எலும்புகளின் தடிப்பத்தினை விளக்குகின்றது

(மேலுள்ள படத்தில் மஞ்சள் அம்புக்குறியானது அமர்முடுகல் விசையினையும், நீல அம்புக்குறியானது சடுதியாக ஏற்படும் சுழற்சியினையும் பச்சை அம்புக்குறியானது தூக்கி வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தினையும் குறிக்கின்றது)

தற்பொழுது யாழ். குடாநாட்டில் ஸ்போர்ட்ஸ் (sports) அல்லது sports tourer வகையான மோட்டர் சைக்கிளினை இளைஞர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதுவும் இவற்றின் இன்ஜின் பவர் (RPM/ Torque) சாதாரண மோட்டார் சைக்கிளினை விட அதிகம் ஆகும். இவ்வகையான மோட்டர் சைக்கிளில் நாம் முன்னோக்கி சரிந்த வண்ணம்தான் செலுத்த முடியும். இவ்வாறு அதிவேகமாக செலுத்தும் பொழுது விபத்து நடைபெற்றால் மோட்டார் சைக்கிளின் வேகம் முதலில் பூச்சியமாகும், ஆனால் மோட்டார் சைக்கிளோட்டியின் வேகம் சிறிது நேரத்தின் பின்னரே (மில்லி செக்கன் ) பூச்சியமாகும். அப்பொழுது தாக்கும் அமர்முடுகள் விசை காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்படுவார். இச்செயற்பாடு மோட்டார் சைக்கிளோட்டியின் முன்னோக்கிய சரிவு காரணமாகவும், கை பிடியில் ஏற்படும் சுழற்சி காரணமாகவும் இலகுவாக்கப்படும். இவ்வாறு ஏற்படும் சுழற்சியினை மோட்டர் சைக்கிளோட்டி எதிர்பார்க்க மாடடார் அத்துடன் ஒரு வலது பக்கத்தில் இருக்கும் சுழலும் அக்ஸிலேட்டர் காரணமாக தடுப்பதும் கடினம். இதன் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தலை நிலத்தில் விழும் படியாக தூக்கி அடிக்கப்படுவார். இதனால் தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் இவ்வகையான தலையில் ஏற்படும் காயங்களினை தடுக்க முடியாது.

இங்கு மனிதனின் மண்டை ஓட்டில் மிகவும் தடிப்பான எலும்பான பிடரி எலும்பில் உடைவு ஏற்பட்டதினை மேலுள்ள படம் காட்டுகின்றது

மனிதனின் பிடரி பக்கத்தில் ஏற்பட்ட காயத்தினால் மூளையின் முன்பக்கத்தில் (contrecoup injury) ஏற்பட்ட பாரிய இரத்த கசிவு காயத்தினை மேலுள்ள படம் விளக்குகின்றது
முற்றும்

