இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டு வண்புணர்வுக் கொலை என சந்தேகிக்கப்பட்டு சந்தேக நபர்களாக நால்வர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில். அவர்கள் நால்வரும் பொலிசாரிடம் ஆயுதத்தை பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்ததாக அதேபொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது திட்டமிட்ட கொலை என்று நன்றாகவே எல்லோருக்கும் தெரியும். நான்கு பேரில் ஒருவரைக் கூட பொலிஸாரினால் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதே மிகப்பெரிய புதினம் ஆகும் .
இந்திய நீதித்துறை வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய இடத்தில் மக்கள் சந்தோசமாக கொண்டாடிதீர்க்கின்றார்கள் , அது போதாததற்கு இலங்கையிலும் பலர் மற்றும் சில படித்தவர்களும் கூட பொலிசாரின் இந்த சட்டமீறலை நீதியென நம்பி மகிழ்ச்சி கொள்கின்றனர். இலங்கையில் கூட இவ்வாறு என்கவுண்டர் என்றழைக்கப்படும் முறையில் சந்தேக நபர்கள் பொலிஸாரினால், சிறை காவலர்கள் மற்றும் ஆயுத படைகளினால் கடந்த காலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இனி நாம் ஏன் இவ்வாறான சம்பவங்களினை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

- ஒருவர் நீதிமன்றினால் நடாத்தப்படும் பூரண விசாரணையினை தொடர்ந்து தான் அவர் குற்றவாளியா அல்லது குற்றம் அற்றவரா என தீர்மானிக்க முடியும். அதுவரை அவர் சந்தேக நபராக தான் கருதப்பட வேண்டும். இங்கு நீதிமன்ற விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் போலீசார் நீதி வழங்கியுள்ளனர்.
- பொலிஸாருக்கோ, சிறைக்காவலருக்கோ அல்லது ஆயுத படைகளுக்கோ இவ்வாறு நீதி வழங்குவதற்கு எவ்விதமான அருகதையும் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான இலாபம் தரக்கூடிய விடயங்களையே செய்வர். இந்தியாவின் காஸ்மீரில் இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வேண்டும் என்ற ஆசையினால் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் இவ்வாறு நூற்றுக்கு கணக்கான இளைஞர்கள் கொல்லப்படடனர். இவ்வாறு சட்ட விரோத கொலைகளை செய்த பிடிபட்ட ஒருசில அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறே இலங்கையிலும் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட சகல சந்தேக நபர்களும் பயங்கர வாதிகளோடு தொடர்புடையதாக்கப்பட்டனர்.
- இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போலீசார் விஞ்ஞான ரீதியான புலனாய்வுகளை (scientific investigations) பெரிதும் மேற்கொள்வதில்லை. உதாரணமாக ஓர் சம்பவத்தில் பாரிய குற்ற செயல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர்கள் அநேகமான சந்தர்ப்பத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பொய் வாக்கு மூலம் பெறப்பட்டு அப்பாவியான ஒருவர் குற்றவாளியாக்கப்படுவர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் இருந்த பலர் பல வருடங்களில் பின்னர் குற்றவாளி அல்லர் என விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் நடைபெறும் நிலையில் ஒருவரினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் அவருக்கு மரண தண்டனை அளிப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.
- போலீசார் அரசியல் செல்வாக்குள்ள அல்லது பண வசதியுள்ள சந்தேக நபர்களினை கைது செய்தால் இவ்வாறு செய்யவர்களா? என்றால் பதில் நிச்சயம் இல்லை என்பதே ஆகும். எனவே இவ்வாறான சம்பவங்களில் நிச்சயம் பாதிக்கப்படுவது ஏழைகளும், அரசியல் செல்வாக்கற்ற சாதாரண பொதுமக்களும். இன்று பலர் தனக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற மனநிலையில் தான் உள்ளனர்.
- இன்று பலரும் கூறிக்கொள்வது யாதெனில் சந்தேக நபர்களினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினால் அவர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள் என்பதே ஆகும். இவர்கள் இவ்வாறு தப்புவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளில் ஒன்று பொலிஸாரின் பிழையான விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் சான்றுப்பொருட்டுகள் ஆகும். போலீசார் முதலில் மேற்குரியவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்துவத்தினை விடுத்து அப்பாவிகளை பழி வாங்குவது அல்லது அவர்களினை தமது பதவி உயர்வுக்கு பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு. பொலிஸாரின் விசாரணை செயற்பாட்டுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- இவ்வாறு கூட்டு வன்புணர்வு கொலை நடைபெறும் பொழுது அதில் சந்தேக நபர்களாக பெயரிடுபவர்கள் யாவரும் அந்த கொடூர செயலினை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் குற்ற செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்திருப்பர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு நீதி மன்றத்தில் வாதாடாமல், தீர்ப்பெழுதாமல் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி போன்றோர் செயற்படவேண்டும். இல்லாவிடில் உரிய நீதியினை நாம் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே வளர்ச்சியடைந்த மேலைத்தேச நாடுகளில் இவ்வாறன சம்பவங்களின் பொழுது பெரும்பாலும் விஞ்ஞான ரீதியான சான்றுகளை (scientific evidence) சமர்ப்பிக்கின்றனர். அதனை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். தேவை ஏற்படும் பொழுது எவ்வாறு சான்றுகள் சேகரிக்கப்பட்டன , ஆராயப்பட்டன என்று நீதிமன்றில் மீளுருவாக்கம் (reproducible) செய்யப்படுகின்றது.
- தண்டனை வழங்க முதல் உண்மையான குற்றவாளி அவர்கள் தானா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு நீதிமன்றமே எமக்குள்ள ஒரேயொரு தெரிவாகும். குற்றவாளிகளுக்கு போலீசாரே தண்டனை வழங்குவது என்றால் நீதிமன்றம் எதற்கு நீதிபதிகள் எதற்கு அவர்களுக்கு வீணாக சம்பளம் எதற்கு? சட்டம் குற்றவாளிகளுக்கு ஒழுங்காக தண்டனை வழங்குவது இல்லை என்றால் ஒழுங்கான சட்டத்தை உருவாக்கவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு நடைபெறும் சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க கூடாது.
எனவே வெறும் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறான சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அறிவு பூர்வமாக சிந்திப்போம் செயற்படுவோம்.
முற்றும்

