சிசு மரணம் – வைத்தியர் காரணமா?

இது அவளுக்கு இரண்டாம் பிரசவம். முதல் பிரசவம் சுகப்பிரசவமாய் தான் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இம்முறை அவள் மகப்பேற்று நிபுணரை ஓர் தனியார் கிளினிக்கில் சந்தித்து காட்டியிருந்தாள். அவளின் கணவர் கூலி வேலை செய்பவர் என்பதால் அவர்களிடம் வெளியே உள்ள தனியார் வைத்திய சாலையில் பிரசவம் பார்க்க முடியவில்லை என்பதால் அரச வைத்திய சாலையில் அனுமதியாகியிருந்தாள். வெளியில் அவள் காட்டும் பொழுது ஒவ்வோர் முறையும் மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து சொல்லுவார் இம்முறை ஆண் பிள்ளை எதுவித பிரச்சனையும் இல்லை என்று, அதை கேட்டு அவளும் சதோசமாக இருந்தாள். அன்று மாலை அவளுக்கு மெதுவான வயிற்று குற்று தொடங்கியது. அவளும் உடனடியாக அரச வைத்திய சாலையின் குறித்த விடுதியில் அனுமதியானாள். அடுத்த நாள் அவளுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியது. பிறந்து அரை மணித்தியாலங்களில் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது. குழந்தை உடனடியாக பேபி ரூமில் அனுமதிக்கப்பட்டது, அடுத்த மணித்தியாலத்தில் குழந்தை இறந்த செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு நுரையீரல் இல்லாமை காரணமாகவே இறந்தது என்று தாயாரிடம் கூறினார். குழந்தையின் உறவினர்களுக்கும் தந்தையாருக்கு பலத்த சந்தேகங்கள், மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நன்றாக இருப்பதாக கூறினார்கள் இது எவ்வாறு? மற்றும் நுரையீரல் இல்லாமல் குழந்தை பிறக்கும் வரை 3kg நிறை உடையதாக குழந்தை வளர்ந்தது எவ்வாறு? இறுதியாக இறந்த குழந்தையினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையினை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் கடடளையிட்டது. பல இழுபறிகளுக்கு பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடற் கூராய்வின் பொழுது குழந்தையின் வயிற்று பகுதியில் உள்ள அங்கங்கள் பிரிமென்தகட்டில் இருந்த பாரிய ஓட்டை ஊடாக சென்று நெஞ்சறை பகுதியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறான நோய் நிலைமை மருத்துவத்தில் DIPHARMATIC HERNIA என்று அழைக்கப்படும். அதாவது இது ஓர் வகையான ஓர் ஹெர்னியா ஆகும். அத்துடன் குழந்தையின் இரு நுரையீரல்களும் பகுதியளவிலே தான் விருத்தி அடைந்திருந்தமை (HYPOPLASIA) கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வயிற்று அங்கங்களின் நெருக்குவாரம் காரணமாக நுரையீரல் பொதுவாக விருத்தி அடையாமல் இருக்கும்.

இந்த நோய் நிலைமை உயிரோடு பிறக்கும் 10000 குழந்தைகளில் ஒருவருக்கு எற்பட வாய்ப்புக்கள் உண்டு. மேலும் குழந்தை தாயின் கருவறையில் வளரும் பொழுது சுவாசிக்க அதன் நுரையீரல் தேவைப்படாது. தொப்புள் கொடி மூலமே குழந்தைக்கு தேவையான ஓட்ஸிசன் போன்றவை கடத்தப்படும். குழந்தை பிறந்த உடனேயே சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதால் அதற்கு நுரையீரலின் தொழில்பாடு அவசியமாகின்றது. இதனால் குழந்தை சாதாரண குழந்தைகள் போன்றே பிறக்கும் வரை வளர்கின்றன. மகப்பேற்று நிபுணர்கள் ஸ்கேன் செய்து இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் போதிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அல்லர் மாறாக NEONATAL RADIOLOGIST/ RADIOLOGIST போன்றவர்களே இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

                                                                        முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.