தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று பட்டம் ஏற்றுதல். குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல இளைஞர்கள் இதன்பால் அதித அக்கறை கொண்டுள்ளனர். இது தவிர வருடம் தோறும் நடைபெறும் இந்திர விழாவில் பட்டம் ஏற்றுவதற்காக போட்டி நடைபெற்று பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழமை ஆகும். பட்டம் ஏற்றி விளையாடுவது பொதுவாக ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். எனினும் தூரதிஸ்டவசமாக சில சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பினை பட்டம் ஏற்றுதல் ஏற்படுத்திவிடுகின்றது. நாம் எவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடைபெறுகின்றது என அறிந்து கொண்டால் அநியாய உயிர் இழப்புக்களை தடுக்கலாம். ஒவ்வோர் சந்தர்ப்பங்களாக நாம் நோக்குவோம்.

1. பொதுவாக பட்டம் விடல் ஆனது வயல் வெளிகளிலும் கடற்கரைகளில் கும் இடம் பெறுகின்றது. மேற்குறித்த பிரதேசங்களில் இருக்கும் பாதுகாப்பற்ற கிணறுகள், பாரிய குழிகள் போன்றவற்றில் இளைஞர்கள் தவறி வீழ்வதன் காரணமாக இறப்பு ஏற்படுகின்றது. மாரி காலங்களில் இவற்றில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக நீரில் மூழ்கியும் இறப்பு ஏற்படலாம்.
2. இவ்வாறே சிலர் மரங்களின் உச்சி, வீடுகளின் கூரைகள், வெளிச்ச வீடு போன்றவற்றில் இருந்து பட்டத்தினை ஏற்றுவார்கள் இதன்பொழுது அவர்கள் தவறி வீழ்ந்து இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
3. சிலர் பட்டத்தினை ஏற்றுவதற்கு உலோகத்தினால் ஆக்கப்பட்ட அல்லது கண்ணாடியினால் ஆக்கப்பட்ட சிறிய கம்பிகளை நூல் போன்று பாவிப்பர். இவை மின்சார கம்பிகளை தொடும் பொழுது அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படும். இதன் காரணமாக பட்டன் விடுபவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளவர். அத்துடன் அவருடன் கூட இருப்பவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியம் உண்டு.
4. இவ்வாறு மெல்லிய கம்பிகளை பயன்படுத்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் அது சிறுவர்களின் கழுத்தினை சுற்றி வளைத்து நெரிக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவ்வாறு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கு மிகமிக மெல்லிய ஆனால் ஒப்பீட்டளவில் பலமான கம்பி பாவிக்கபடுவதினால் அது கழுத்து பகுதியில் வெட்டு காயங்களினை உண்டு பண்ணும். எமது கழுத்து ப் பகுதியில் தோலின் கீழ் பாரிய இரத்த நாளங்களில் குறிப்பிட அளவு அழுத்தத்தில் குருதி பாய்வதன் காரணமாகக் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வகையான மாஞ்சா நூல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
5. சில சந்தர்ப்பங்களில் ஏறிய பட்டமானது திடீர் என நடு வீதியில் இறங்குவதன் காரணமாகக் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
6. சில சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் பட்டத்தினை ஏற்றுவதற்கு மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் மாஞ்சா நூல்களை பயன்படுத்தி செய்த பட்டங்களினை போலீசார் பறிமுதல் செய்வதினையும், மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி இறந்த சிறுமியின் படத்தினையும் காணலாம்.
முற்றும்

