அவள் 42 வயதான இல்லத்தரிசி, கணவன் பல்வேறுபட்ட கூலி வேலைகளை செய்பவர். இவர்கள் தங்கள் மேலதிக வருமானத்திற்காக அவர்களின் வீட்டில் ஏறத்தாழ 30 கோழிகளை வளர்த்து வந்தனர். அவள் கடந்த மூன்று நாட்களாக கடுமையான காச்சல், தலைவலி போன்றவற்றினால் அவதிப்பட்ட நிலையில் பிரதேச வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்தாள். அவள் மரணமடைந்ததிற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் அவளது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது தான் சில அதிர்ச்சிகரமான விடயங்கள் தெரியவந்தன, அவையாவன அவளின் மார்பு பகுதியில் சிறிய எரிகாயம் போன்ற ஓர் காயம் காணப்பட்டது. இதனை வைத்தியர்கள் Eschar என்பர். இது உண்ணி கடித்த இடமே ஆகும். உண்மையில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளில், சிறு புதர் பற்றைகளில் உள்ள Leptotombidium mite larvae (chiggers) என்ற உண்ணி கடிக்கும் பொழுது அதனுடாக Orientia tsutsugamushi என்ற நுண்ணங்கி மனித உடலில் உட்செலுத்தப்படும். மேலும் உடற்கூராய்வின் பொழுது அவளது நுரையீரல் செயலிழந்தமையும் (ARDS) இருதயம் கிருமித்தாக்கத்திற்கு (Myocarditis) உட்பட்டமையுமே காரணம் என அறிந்து கொள்ள முடிந்தது.

பலருக்கு இந்த உண்ணி காச்சல் காரணமாக இறப்பு ஏற்படும் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கும். பொதுவாக இந்த உண்ணிகள் மனிதரில் கடிக்கும் பொழுது வலி ஏற்படுவதில்லை அதனால் அவை கடித்தமை நோயாளிக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் இந்த உண்ணிகள் மார்பகங்களின் கீழ்ப்புறம், இடுக்கு பகுதி, பெண் உறுப்பு பகுதிகள், ஆணின் விதைப்பை மற்றும் அக்குள் போன்றவற்றில் கடிப்பதினால் பெரும்பாலான நோயாளிகள் அவற்றினை அவதானிப்பதில்லை.
இந்த உண்ணி காச்சல் ஆரம்ப கட்டத்தில் பொதுவாக ஏனைய வகை காச்சல் போன்று வருவதினால் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியாது, ஆனால் மேற்குறித்த காயம் (Eschar) இருப்பதனை கொண்டு வைத்தியர்கள் இலகுவாக இந்த நோயினை அடையாளம் கண்டு கொள்வர். மேலும் தற்பொழுது பெரும்பாலான வைத்தியர்கள் காச்சலுடன் வரும் நோயாளிகளை பூரணமாக உடற் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு நோயாளி மீது அக்கறையின்மை மற்றும் நேரமின்மை போன்றனவாகும். சில சந்தர்ப்பங்களில் ஆண் வைத்தியர்கள் பெண் நோயாளினை உடற்பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவதில்லை அவ்வாறே சில சந்தர்ப்பத்தில் நோயாளியும் விரும்புவதில்லை. மறுதலையாக பெண் வைத்தியர் பரிசோதிப்பதினை ஆண் நோயாளிகளும் சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை. இவ்வாறான காரணங்களினால் உண்ணி காச்சல் ஆரம்ப நிலையில் அடையாளம் காணப்படாமல் விடுபடுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. சிலர் கருதலாம் இரத்த பரிசோதனை மூலம் இலகுவாக ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கலாம் தானே என்று, இந்த உண்ணி காச்சலினை ஆரம்பத்தில் கண்டு பிடிக்க உதவும் உரிய பரிசோதனைகள் இலங்கையில் இல்லை என்பதே உண்மை ஆகும்.
