தமிழரின் வாழ்வியலில் தொப்புள் கொடி என்பது முக்கியமானது. நாம் பிரிக்க முடியாத உறவுகளை மேற்கோள் காட்டிட “தொப்புள் கொடி ” உறவு என்ற சொற் பதத்தினை பாவித்து வருகின்றோம். பலர் தொப்புள் கொடி என்ற சொற்பதத்திற்கு பதிலாக “நச்சு கொடி” என்ற சொற்பதத்தினை பாவிப்பதும் உண்டு. ஆனால் கருத்தியல் ரீதியில் அது பொருத்தமற்றது. பலருக்கு இந்த தொப்புள் கொடியானது தாயில் இருந்து அவளது கருப்பையில் வளரும் கருவிற்கு அதாவது குழந்தையிற்கு தேவையான உணவு, ஓட்ஸிசன் போன்றவற்றினை வழங்குகின்றது. எம்மில் பலருக்கு இவ்வாறு ஓர் கருவிற்கு உயிர் வழங்கும் தொப்புள் கொடியானது உயிர் இழப்பினை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தும் என்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தும். இவ்வாறு சிசுவிற்கு உயிர் ஆபத்தினைஉண்டு பண்ணும் சந்தர்ப்பங்கள் பற்றி பார்ப்போம்.
1. கழுத்தினை சுற்றி இறுக்கிய நிலை (Cord around the neck)
சில சந்தர்ப்பங்களில் தொப்புள் கொடியானது சிசுவின் கழுத்தினை சுற்றி காணப்படும். ஆனால் இவ்வாறு காணப்படுவதனால் பொதுவாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. தொப்புள் கொடியானது நீளத்தில் சிறிதாக இருந்து பிரசவம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் குழந்தையிற்கு வழங்கப்படும் இரத்தத்தின் அளவு சடுதியாக குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் இருதய துடிப்பு குறைவடைந்து இறப்பு ஏற்படலாம். இவ்வாறு சிசு மரணம் ஒன்று ஏற்படும் பொழுது உரிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே சிசுவின் மரணத்திற்கான காரணத்தினை கூறமுடியும். வெறுமனே தொப்புள் கொடியானது கழுத்தினை சுற்றி இருந்தால் இறப்பு ஏற்பட்டது என்று யாரவது கூறினால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும்.

சில சந்தர்ப்பத்தில் தொப்புள் கொடியானது அதிகமாக முறுக்குப்பட குழந்தைக்கு செல்லும் இரத்தத்தின்அளவு குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி குறைந்ததாக இருக்கும். அதனை கீழ் உள்ள படம் விபரிக்கின்றது

2. தொப்புள் கொடியில் ஏற்படும் முடிச்சுகள் (knots)
சிசுவின் வளர்ச்சியின் பொழுது சிசுவின் அசைவின் காரணமாக தொப்புள் கொடியில் முடிச்சுகள் ஏற்படும். இந்த முடிச்சுகள் உண்மையான முடிச்சுகளாகவோ (True knots) அல்லது சாதாரண மடிப்புகளாவோ (false knots) இருக்கலாம். இவ்வாறு முடிச்சுகள் இருந்தால் மட்டும் இறப்பு ஏற்பட்டு விடாது முடிச்சில் ஏற்படும் இறுக்கம் காரணமாக குழந்தைக்கான இரத்த ஓட்டம் தடைப்படும் பொழுதே இறப்பு ஏற்படும். அதாவது அரிதான ஓர் சந்தர்ப்பத்திலேயே இவ்வேறு நடைபெறும். கீழே உள்ள படமானது தொப்புள் கொடியில் ஏற்படும் உண்மையான முடிச்சுகளையும் மடிப்புகளையும் காட்டுகின்றது.

முற்றும்

