கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கார் விபத்தின் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனத்தினுள் உள்நுழைந்தமையே அதிகளவான உயிர் சேதம் ஏற்பட காரணமாய் அமைந்தது. மேலும் விபத்துக்குள்ளான சிறிய வகையான காரில் உயிர் காக்கும் பலூன் இருக்கவில்லை அத்துடன் காரில் பயணித்த சிறுவர்களும் சீற் பெல்ட் அணிந்திருக்கவில்லை இதனாலும் உயிரிழப்புக்கான சாத்தியம் அதிகரித்தது. இவ்வாறு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் அல்லது குறைந்த வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் உயரம் கூடிய வாகனம் ஒன்றின் பின்/முன் பகுதியில் உயரம் குறைந்த வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுவதினால் ஏற்படும் விபத்து tailgating என்று அழைக்கப்படும். இவ்வகையான விபத்துக்கள் பொதுவாக உயிர் இழப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. ஏனெனில் இங்கு பின்/முன் புறமாக மோதும் பொழுது உயரம் குறைந்த வாகனத்தில் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளவர்களின் தலை, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் அதிகளவு விசை நேரடியாக தாக்குவதினால் உள் அவயவங்களில் ஏற்படும் பாரிய காயங்களே காரணமாகும்.
(இவ்வாறான ஓர் விபத்தில் மரணித்தவரின் காயங்கள் – கோப்பு படங்கள்)
இவ்வகையான விபத்துக்கள் ஏற்படுவதினை தடுக்கும் அல்லது குறைக்கும் முகமாக பின்வரும் பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. உயரமான வாகனங்களின் பின்புறத்தில் சிறிய உயரம் குறைந்த வாகனங்கள் உள் நுழையாத வாறு இரும்பு கேடர்கள் மற்றும் மர பலகைகள் மூலம் ஓர் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
2. வாகனம் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது முழு நீளத்திற்கும் ஒளிரும் பட்டி இயங்கு நிலையில் இருக்கும்
3. வாகனம் பழுதடைந்த நிலையில் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது பல மீற்றர் தூரத்திலேயே முக்கோண வடிவிலான எச்சரிக்கை குறியீட்டின் இனை வீதியில் நிறுத்தி வைப்பார்கள். இது இரவில் மினுமினுக்கும் தன்மை உடையதால் மற்றைய வாகன சாரதிகள் நிலைமையினை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர்.
மேலும் இவ்வகையான விபத்துக்கள் வீதிகளில் அசையும் வாகனங்களில் பின்வரும் சந்தர்ப்பங்களில் நடைபெறலாம்
1. ஆகக்குறைந்த தூரத்தினை (safe distance) பேணாது வாகனங்கள் பயணிக்கும் பொழுது. பயணிக்கும் வாகனம் ஒன்று விபத்தில்லாத வகையில் நிறுத்த தேவையான தூரமே safe distance எனப்படும். பின்னே செல்லும் வாகனம் வேகமாக செல்லும் பொழுது அல்லது முன்னே செல்லும் வாகனம் தனது வேகத்தினை திடீரென்று குறைக்கும் பொழுது இவ்வகையான விபத்து ஏற்படலாம் . safe distance தூரமானது வாகனத்தின் வேகம், வாகனத்தின் வகை, பிரேக் தொழில்பாட்டு நிலைமை, றோட்டின் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும்
2. மேலும் பனி, மழை போன்ற காலநிலை நிலவும் பிரதேசங்களில் இவ்வகையான விபத்துக்கள் நடைபெறும்.
3. மோட்டோர் சைக்கிள்கள் மற்றும் கண்டெய்னர் போன்ற பாரிய வாகனங்களுக்கு இத்தூரம் ஆனது எதிர்பார்ப்பதினை விட அதிகமாக இருக்கும்.
4. எதிரே வரும் உயரம் குறைந்த வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து மோதும் பொழுது

மேலும் சிறிய வகையான கார்களில் (பட்ஜெட் கார்) உயிர் காக்கும் பலூன் போன்றவை பல சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முற்றும்

