பகிடிவதை ஒழிப்பு சாத்தியமானதா?

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பாலியல் சார்ந்த பகிடிவதைகள் சம்பந்தமான தகவல்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததினை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவர்களின் கோபக்கனல்களினை முகநூல் பதிவுகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது. பலரும் பகிடிவதையினை மேற்கொண்ட மாணவர்களினை கீழ்தர மான வார்த்தைகளினால் திட்டி தங்கள் கோபத்தினை அடக்கிக் கொண்டார்கள். இந்நிலையில் பலரும் மறந்துவிட்ட ஓர் விடயம் தான் ஏன் இந்த பகிடிவதையினை இவ்வளவு காலமாக ஒழிக்க முடியாது உள்ளது என்பதே.

stop raggingக்கான பட முடிவுகள்

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி தற்கொலை செய்ய முயன்றதன் மூலம் அந்த பிரச்சனைக்கு தீர்வொன்றினை காண விரும்பினார். அதாவது ஒரு விதத்தில் அவர் அந்த பிரச்சனையில் நிரந்தரமாக விடுபட முயன்றார். ஆனால் அவரது அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறே பகிடிவதை எந்த வடிவில் மேற்கொள்ளப்படடாலும் ஏற்றுக்கொள்ள படமுடியாததே. ஏன் அந்த மாணவி குறித்த மாணவர்களுக்கு எதிராக பல்கலை கழக ரீதியிலும், வெளியில் நீதிமன்றிலும் நடவடிக்கை எடுக்கவில்லை? புதுமுக மாணவிக்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என தெரியாதா? ஏன் பெற்ற பெற்றோர்களுக்கு கூட தெரிவிக்க முயலவில்லை? மூத்த பல்கலைக்கழக மாணவன் தவிர்ந்த வேறு யாராவது இவ்வேறு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறித்த வினாக்களுக்கு விடை தேடும் இடத்து நிச்சயம் ஏன் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவத்தையினை ஒழிக்க முடியாது உள்ளது என்ற கேள்விக்கான விடை கிடைக்கும்.
தற்போதைய போட்டியான கல்விச்சூழலில், பெற்றோர்கள் மாணவர்களினை பல்கலைக்கழகம் செய்வதற்கு என்று பெருமளவு பணத்தினையும் நேரத்தினையும் செலவழித்து படிப்பிக்கின்றனர், இதற்காக பெற்றோர் அதிகளவில் கஸ்ட்டப்படுகின்றனரே தவிர மாணவர்கள் சொகுசாக தான் வளருகின்றனர். உயர் தரம் வரை பெற்றோரினாலும் ஆசிரியர்களினாலும் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வளர்ந்த மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் தங்களை இவ்வாறான சமூக விரோதிகளிடம் இருந்து பாதுக்காக்க முடியாமல் போகின்றமை மிக்க கவலையானதே.
பெரும்பாலான சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான சம்பவங்களை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பது கூட தெரியாமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. மேலும் பெரும் பான்மையான புதுமுக மாணவர்கள் தங்களின் மீது திணிக்கப்படும் பகிடிவதையினை ஓர் கல்விசார் நடவடிக்கைகளின் அங்கமாகவே நோக்குகின்றனர் என்பது கவலை தரும் விடயம் ஆகும். மேலும் புதுமுக மாணவராக பகிடிவத்தையினை எதிர்க்கும் மாணவர் அடுத்த வருடம் பகிடி வதையினை ஆதரித்து அதிலும் ஈடுபடுவர்.
சிங்கள பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் பாடசாலைக் கல்வியின் பொழுது “இது எங்கள் நாடு”, “சட்டம் எங்களை பாதுகாக்கவே”, “இது எங்கள் நாட்டின் சட்டம்” போன்ற கருத்துக்கள் ஊட்டப்படுவதினால் அவர்களில் பெரும் பான்மையினர் பல்கலை கழகத்தில் ஏதாவது ஓர் சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக பொலிசாரினை நாடுவர். ஆனால் தமிழ் பிரதேசங்களை பொறுத்த மட்டில் நிலைமை வேறு போலீஸ் நிலையம் செல்வதினையே கௌரவ குறைவாக கருதுவோர் பலர். மேலும் பாதிக்கப்பட்ட நபர் பெண் ஒருவர் எனில் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதன் காரணமாகத்தான் பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றினை சட்டங்கள் இருந்தும் முற்று முழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் மாணவர் ஒன்றியங்கள், சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் மறைமுகமாக பகிடிவதையினை ஆதரிப்பதுவும் அவர்களே அனுசரணை வழங்குவதும் கவலை தரும் விடயங்கள் ஆகும்.
இவ்வாறு பல்வேறு பட்ட காரணங்களினால் பகிடிவதையினை முற்றுமுழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது.

                                                                         முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.