இன்றைய உலகத்தில் பல்வேறு பட்ட மக்கள் பல்வேறுபட்ட வைத்திய முறைகளை மேற்கொள்ளுகின்றனர். எமது நாட்டில் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி மருத்துவம்… போன்ற பல்வேறு பட்ட வைத்தியமுறைகள் தற்பொழுது மக்களால் பின்பற்றபட்டு வருகின்றன. அண்மையில் கூட நண்பர் ஒருவர் முந்தைய காலத்தில் இருந்த முறிவு, நெரிவு வைத்தியம் தற்பொழுது இல்லாமல் போய்விட்டதாக பெரிதும் குறைப்பட்டுக் கொண்டார்.
இனி விடயத்திற்கு வருவோம், அவனுக்கு 25 வயதுதான் ஆனால் அவனது முதுகு சிறுவயதில் இருந்து கூனி (Kyphosis) விட்டது. இதன் காரணமாக அவன் படிப்பினை இடை நடுவில் கைவிட நேர்ந்தது. மற்றைய சிறுவர்களுடன் கூட பெரிதாக சேர்வதில்லை. ஆரம்பத்தில் பெற்றோர் பல வைத்தியர்களை நாடினர் எல்லோருமே சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என தெரிவித்து விட்டனர். அவனுக்கும் பெற்றோருக்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பயம் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று. இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலை கிளினிக் செல்வதையே பல வருடங்களுக்கு முன்னர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் தான் அவர்களின் உறவினர்கள் மூலம் ஓர் வைத்தியரின் தொடர்பு கிடைத்தது. அவ்வைத்தியர் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் பிரபல்யம் வாய்ந்தவர் அத்தோடு பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற சிபாரிசுவுடன். அவனும் பெற்றோரும் ஓர் நன்னாளில் அவ்வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றனர். முதலில் அவ்வைத்தியர் ஏன் இவ்வளவு காலமும் தன்னிடம் வரவில்லை என கடிந்து கொண்டார். அதன்பிறகு தனது சிகிச்சை முறைகளை பற்றி விளக்கப்படுத்தினார்.
அதன் பின்னர் அவனை தனது சிகிசசை அறைக்கு அழைத்து சென்று மரத்தினால் ஆன கட்டிலில் முகம் குப்பற படுக்க வைத்தார். அதன் பின்னர் பலவகை தைலங்கள் தடவினார்கள். பின்னர் அவ்வைத்தியரும் அவரது உதவியாளரும் சேர்ந்து உலக்கையினை எடுத்து அவனது முதுகில் வைத்து பலமாக அழுத்தினார்கள். அவன் வேதனையில் துடித்தான். வைத்தியர் அவனுக்கு பல பகிடிகள் கூறியவண்ணம் மீண்டும் அழுத்தினார். அவன் வேதனையில் பலமாக கத்திய படி மயங்கி விட்டான். வைத்தியர் பதறியபடி அவனது முகத்தில் நீரினை ஊற்றினார். எதுவித சலனமும் இல்லை. பெற்றோர் பதறியபடி அவசர சேவை அம்புலன்ஸினை அழைத்தனர். அவர்கள் வந்தனர். அவர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவத்தின் பிறகு போலீசார் அவனது உடலை உடற் கூராய்வு பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். உடற் கூராய்வின் பொழுது அவ்வைத்தியர் அதிகமாக அழுத்தியதன் காரணமாக அவனது முதுகு எலும்பு விலத்தி அதன் அருகில் உள்ள தொகுதி பெரு நாடியினை (Aorta) காயப்படுத்தியதன் காரணமாக அவனது இரண்டு லிட்டர்க்கும் அதிகமான இரத்தம் வெளியேறி வயிற்று குழியினுள் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு உடற்கூற்றியல், உடற் தொழிலியல், நோயியல் போன்றவற்றின் துறைசார் அறிவு இல்லாமல் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பது நிச்சயம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தினை விளைவித்து விடும்.

இப்பதிவு மற்றைய வைத்திய முறைகளை பற்றி குறை கூறி ஓர் குறிப்பிட்ட மருத்துவ முறைதான் சிறந்தது அதனைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறவிழையவில்லை . மாறாக விஞ்ஞான ரீதியாக அற்று, பட்டறிவின் மூலம் அதாவது அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வைத்தியம் மூலம் எவ்வாறு மனித உயிருக்கு தீங்கு உண்டாகின்றது என்பது பற்றி விளக்குகின்றது.
முற்றும்
