கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியான முறையில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் அண்மையில் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அவர்களை விமான நிலையத்தில் தனிமைப் படுத்த முயன்ற பொழுது அவர்கள் பலவந்தமாக தப்பி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் கொரோனா நோயினை வேண்டும் என்றே பரப்புவர்களுக்கு எதிராக இலங்கையில் தற்பொழுதுள்ள எவ்வகையான சட்ட திட்டங்கள் மூலம் முறையாக நடவடிக்கை எடுக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

1.தொற்று நோய்கள் தொடர்பான தனிமைப்படுத்தல் சட்டம் (Quarantine and Prevention of Diseases Ordinance.)
இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ள ஓர் மிக பழமையான சட்ட ஏற்பாடு ஆகும். இது 1897 ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இசசட்டத்தின் பிரகாரம்
இலங்கையின் ஏதாவது துறைமுகம் அல்லது விமான நிலையம் ஒன்றினுள் நுழையும் கப்பல் அல்லது விமானம் ஒன்றில் இருக்கும் தொற்று நோய்க்கிருமிகளினை அழித்து கிருமி நீக்கம் செய்யவும் அவ்வாறே அவற்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் பொருட்களினை கிருமி நீக்கம் செய்யவும் அதிகாரம் அளிக்கின்றது. மேலும் இச்செயற்ப்பாடுகளுக்கு தேவையான பணத்தினை அறவிடவும் வழிவகை செய்கின்றது
மேலும் ஓர் கப்பலினை அல்லது விமானத்தினை விட்டு பிரயாணிகள் மற்றும் பொருட்கள் வெளியேற்றப்படுவதினையும் தடை செய்கின்றது. மேலும் தொற்று உள்ளது என சந்தேகிக்கப்படும் பொருட்களை கைப்பற்றவும் அவற்றினை உரிய அனுமதி பெற்ற தரப்பு அழிக்கவும் வழிவகை செய்கின்றது.
சட்ட ரீதியான முறையில் நோய் தடுப்பு மையங்களை அமைக்கவும், முக்கியமாக நோயாளிகளை தடுத்து வைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றைய பிராயணிகளை தடுத்து வைத்து மருத்துவ கண்காணிப்பு செய்யவும் வழிவகை செய்கின்றது. தொற்று நோய் உள்ள நோயாளிகளை வேறு இடத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கவும் முடியும்.
இவ்வாறே சந்தேகத்திற்குரிய கப்பலினை அல்லது விமானத்தினை சோதனை இடவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நோயாளிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தினையும் சோதனையிட முடியும்.

இனி முக்கியமான விடயமான இச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் எவை என பார்த்தால் முக்கியமாக குறித்த நபர் தனிமைப்படுத்தலுக்கும் அதனைத்தொடர்ந்து சிகிசசைக்கும் ஓத்துழைக்க வேண்டும் அத்துடன் அதிகாரமளிக்கப் பட்ட உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவிக்க கூடாது . அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதிகபட்சமாக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையுடன் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை தண்டமாக அறவிடப்படும்.
2. அடுத்து முக்கியமாக இலங்கையின் தண்டனை சட்ட கோர்வையின் 262, 263 ம் பிரிவின் ( 262 – Negligent act likely to spread injection of any disease dangerous to life, 263 – Malicious act likely to spread infection of any disease dangerous to life.) பிரகாரம் ஒருவர் தனக்கு ஓர் குறித்த நோய் நிலைமை உள்ளது என்பதினை மறைத்து அதனை மற்றவருக்கு பரப்புவதன் மூலம் மற்றவரின் உயிருக்கு பங்கம் விளைவித்தல் ஓர் குற்ற செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறன குற்றங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை உண்டு அத்துடன் சந்தேக நபர்கள் நீதிமன்றின் பிடியாணை எதுவும் இன்றி கைது செய்யப்படலாம்.
மேலும் 264ம் (Disobedience to a quarantine rule) பிரிவு நோயாளர் தனிமை படுத்தல் சட்டத்திர்ற்கு கட்டுப்பட்டு ஒழுக்காதவர்களை தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.
3. இது தவிர தண்டனை சட்ட கோர்வையின் 310ம் பிரிவின் பிரகாரம் வேண்டும் என்றே இன்னொருவருக்கு நோயினை பரப்பில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும் (Hurt – section 310 of the penal code – Causing bodily pain, disease or infirmity)
4. இது தவிர போலீஸ் சட்டத்தின் பிரகாரம் கொரோனா பற்றிய பொய் செய்திகளையும், சமூகத்திற்கு தீங்கு இளைக்கும் வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்ய முடியும்.
5. தற்பொழுது புத்தளம், சிலாபம்…போன்ற பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டமும் ஒருவகையில் கொரோனா நோய் பரவுவதினை குறைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
இவ்வாறு பல சட்டங்கள் இருந்து பொறுப்பற்ற விதத்தில் கொரோனா நோயினை பரப்புபவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணம் எம்மவருக்கு உள்ள சமூக அக்கறை அற்ற தன்மை என்றால் அது மிகை அல்ல.
முற்றும்
